தமிழகத்தில் மட்டும் சிமெண்ட் விலை உயரும் மர்மம் என்ன?-நடவடிக்கை எடுக்க அரசு தயங்குவது ஏன்?- அன்புமணி ராமதாஸ் கேள்வி

By செய்திப்பிரிவு

மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மட்டும் சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை உயரும் மர்மம் என்ன? உடனடியாக விலைகளை குறைக்கும்படி அரசு ஆணையிட வேண்டும், செய்ய மறுக்கும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:

இந்தியாவின் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் மட்டும் சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து கட்டுமானப் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த வேண்டிய அரசு, அந்த நிறுவனங்களை மயிலிறகால் வருடிக் கொடுப்பதன் மர்மத்தை புரிந்து கொள்ள முடியவில்லை.

தமிழ்நாட்டில் சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலைகள் கடந்த சில வாரங்களில் மட்டும் 40% வரை உயர்ந்துள்ளன. ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பு வரை ரூ.370 ஆக இருந்த ஒரு மூட்டை சிமெண்ட் விலை, இப்போது 41% உயர்ந்து ரூ.520 ஆக உள்ளது. அதேபோல் ஒன்றரை அங்குல ஜல்லி ஒரு யூனிட்டின் விலை 3,400 ரூபாயிலிருந்து ரூ.3900 ஆகவும், முக்கால் அங்குல ஜல்லியின் விலை 3,600 ரூபாயிலிருந்து ரூ.4100 ஆகவும் உயர்ந்துள்ளன.

எம் - சாண்ட் ஒரு யூனிட் விலை 5 ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரமாகவும், கட்டுமானக் கம்பி ஒரு டன் ரூ. 68 ஆயிரத்திலிருந்து 75 ஆயிரமாகவும், செங்கல் ஒரு லோடு ரூ.18 ஆயிரத்திலிருந்து ரூ. 24 ஆயிரமாகவும் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் சிமெண்ட் விலை இந்த அளவுக்கு அதிகரிக்கவில்லை. தலைநகர் தில்லியில் ஒரு மூட்டை சிமெண்ட் ரூ.350, ஆந்திரா ரூ.370, தெலுங்கானா ரூ.360, கர்நாடகம் ரூ.380 என்ற விலையில் தான் விற்கப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் ஒரு மூட்டை சிமெண்ட் 40%க்கும் கூடுதலாக ரூ.520 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. மற்ற கட்டுமானப் பொருட்களின் விலைகளும் தமிழ்நாட்டை விட மற்ற மாநிலங்களில் 25% வரை குறைவாகவே உள்ளன.

தமிழ்நாட்டுடன் ஒப்பிடும் போது தில்லி, ஆந்திரா, கர்நாடகம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன; அந்த மாநிலங்களை விட தமிழ்நாட்டில் அதிக அளவில் சிமெண்ட் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனாலும் கூட தமிழ்நாட்டில் சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலைகள் அதிகமாக இருப்பதற்கு காரணம் அவற்றின் உற்பத்தியாளர்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டு செயற்கையாக விலைகளை உயர்த்தியிருப்பது தான் என்பதில் ஐயமில்லை.

தமிழ்நாட்டில் சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 9 ஆம் தேதியே தமிழக அரசை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால், அதன்பின் 10 நாட்களாகியும் தமிழகத்தில் சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலைகளைக் குறைக்க ஆக்கப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சிமெண்ட் மற்றும் கட்டுமானப் பொருட்களின் உற்பத்தியாளர்களை இது தொடர்பாக அழைத்துப் பேசியிருப்பதாகவும், விலைகளை குறைக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருப்பதாகவும் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். ஆனால், அவர் எச்சரிக்கை விடுத்து பல நாட்களாகியும் இன்று வரை சிமெண்ட் விலை குறைக்கப்படவில்லை. அப்படியானால் சிமெண்ட் மற்றும் கட்டுமானப் பொருட்களின் உற்பத்தியாளர்கள் தமிழக அரசின் அதிகாரவரம்புக்கு அப்பாற்பட்டவர்களா? அல்லது நாங்கள் விலையை குறைக்கும்படி கூறுவதைப் போல கூறுகிறோம்.

நீங்கள் உங்கள் விருப்பம் போல விலை நிர்ணயித்து விற்பனை செய்து கொள்ளுங்கள் என்று தமிழக அரசும் கட்டுமானப் பொருட்களின் உற்பத்தியாளர்களும் உடன்பாடு செய்து கொண்டு நாடகம் நடத்துகிறார்களா? என்பது புரியவில்லை. சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலைகளை குறைக்க வேண்டும் என்று தொழில்துறை அமைச்சர் வலியுறுத்தியிருப்பதிலிருந்தே விலைகள் அநியாயமாக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டிருப்பது உறுதியாகிறது.

உயர்த்தப்பட்ட விலைகளை குறைக்க வேண்டும் என்று தமிழக அரசே கேட்டுக் கொண்ட பிறகும் விலைகள் குறைக்கப்படாவிட்டால், அவர்கள் தமிழக அரசை மதிக்கவில்லை என்று தானே பொருள்? அரசுக்கே சவால் விடும் அத்தகைய நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதில் என்ன தயக்கம்? இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் இதுவரை எதுவும் கூறாமல் அமைதியாக இருப்பது ஏன்?

தமிழ்நாட்டில் ஏழைத் தொழிலாளர்களுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பை வழங்கும் துறைகளில் மிகவும் முக்கியமானது கட்டுமானத் தொழில் ஆகும். சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் கட்டுமானத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

அவர்களின் நலன் கருதியும், மாநிலத்தின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டும் சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலைகளை உடனடியாக குறைக்கும்படி அரசு ஆணையிட வேண்டும்; அதை செய்ய மறுக்கும் நிறுவனங்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்".

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

48 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்