கழிவுநீர்த் தொட்டிகளில் சுத்தம் செய்ய ரோபோ; ஐஐடியுடன் ஆலோசனை: தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையம்

By ந. சரவணன்

கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்ய ரோபோக்களைப் பயன்படுத்த ஐஐடியுடன் ஆலோசனை நடைபெற்று வருவதாக தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் தலைவர் எம்.வெங்கடேசன் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு கிராமத்தில் இயங்கி வரும் தனியார் தோல் பதனிடும் தொழிற்சாலையில், தோல் கழிவுநீர் சுத்திகரிப்புத் தொட்டியில் இறங்கி தூய்மைப் பணியில் ஈடுபட்ட வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அடுத்த புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (55) என்பவர் விஷவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவருடன் பணியில் ஈடுபட்ட அதே கிராமத்தைச் சேர்ந்த ரத்தினம் (60) மற்றும் ஆம்பூர் அடுத்த மோதகப்பல்லி கிராமத்தைச் சேர்ந்த பிரசாத் (27) ஆகிய 2 பேரும் விஷவாயு தாக்கியதில் மயக்கமடைந்தனர். ரத்தினம், வேலூர் தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரசாத், ஆம்பூர் அடுத்த சோலூர் கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்த தகவலறிந்ததும், தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்ள முடிவு செய்தது. அதன்படி ஆணையத்தின் தலைவர் எம்.வெங்கடேசன் ஆம்பூருக்கு இன்று வந்தார். விபத்து நடந்த தோல் பதனிடும் தொழிற்சாலை வளாகத்தை நேரில் பார்வையிட்டு அவர் ஆய்வு செய்தார். அங்கு அரசு அதிகாரிகள், தொழிற்சாலை அதிகாரிகளிடம் விபத்து குறித்துக் கேட்டறிந்து விசாரணை நடத்தினார்.

விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் ஆணையத்தின் தலைவர் எம்.வெங்கடேசன் கூறியதாவது:

‘‘விஷவாயு தாக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். 2 பேர் காயமடைந்தது குறித்து செய்திகள் மூலம் அறிந்ததும் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த முடிவெடுத்தது. அதற்காக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹாவைத் தொடர்புகொண்டு விபத்து குறித்த தகவல்களைக் கேட்டுப் பெற்றோம். தற்போது விபத்து நடந்த பகுதி ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தவறு நடந்திருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க ஆணையம் பரிந்துரைக்கும். மனிதத் தூய்மைப் பணியாளர்கள் தடுப்புச் சட்டத்தின்படி உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தொழிற்சாலை நிர்வாகத்தின் தரப்பில் தவறு இருக்கும்பட்சத்தில் அதன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் உரிமையாளரைக் கைது செய்ய வேண்டும். இறந்தவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருந்தால் எஸ்சி, எஸ்டி சட்டத்தின் கீழ் சட்டப்படி தொழிற்சாலை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தொழிற்சாலை நிர்வாகத்திடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

விஷவாயு தாக்குதலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளவரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது. அதனால் அவரிடம் விசாரணை நடத்த அழைத்துள்ளோம். அவர் அளிக்கும் தகவலின்பேரில் மேல் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்வோம். மரணமடைந்த தூய்மைப் பணியாளருக்கு இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. தவறு எப்படி நடந்துள்ளது? என்பது குறித்துக் கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையம் தூய்மைப் பணியாளர்களின் நலனை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.

கழிவுகளை மனிதர்கள் அகற்றுவது அறவே இருக்கக் கூடாது என்பதே ஆணையத்தின் முக்கிய நோக்கமாகும். கழிவுநீர்த் தொட்டிகளில் சுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் வேலை வாங்கப்படுவதாக சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களிடமிருந்து எங்களுக்கு புகார் வந்தால் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு புகார் வரும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்திற்கோ அல்லது சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (சனிக்கிழமை) இதுசம்பந்தமாக அதிகாரிகள் பங்கேற்கும் ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. தொழிலாளர்களையும் அழைத்துள்ளோம். தொழிலாளர்கள் புகார் அளிக்கும்பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கழிவுநீர்த் தொட்டிகள், கழிவுநீர்க் கால்வாய்களில் மனிதர்கள் இறங்கிச் சுத்தம் செய்வதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக மனிதத் தூய்மைப் பணியாளர்கள் தடுப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கழிவுநீர்த் தொட்டிகளில் தொழிலாளர்கள் எவரும் இறங்கி தூய்மைப் பணி மேற்கொள்ளக் கூடாது.

ஆனால், தொழிலாளர்கள் சில நேரங்களில் இறங்கி அந்தப் பணியை மேற்கொள்ளும்போது இதுபோன்று உயிரிழப்புச் சம்பவங்கள் நடக்கின்றன. இது தடுக்கப்பட வேண்டியது மட்டும் அல்ல தவிர்க்கப்பட வேண்டியதாகும். தொழிலாளர்கள் கழிவுநீர்த் தொட்டிகளில் இறங்காமல் இருக்க உறுதியாக இருக்க வேண்டும். அதே நேரத்தில், கழிவுநீர்த் தொட்டிகளில் தொழிலாளர்களை இறக்கிப் பணி செய்யாமல் இருப்பதைத் தொழிற்சாலை நிர்வாகங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

கழிவுநீர்த் தொட்டிகளில் தொழிலாளர்கள் இறங்கிப் பணி செய்வதைத் தடுக்க அவர்களிடையே தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையம், விளம்பரங்கள், கட்டணமில்லாத் தொலைபேசி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அபாயகரமான கழிவுநீர்த் தொட்டிகள், கழிவுநீர்க் கால்வாய்களில் மனிதப் பணியாளர்கள் இறங்கிப் பணி செய்யாமல் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவ்வாறு பணி செய்வது குறித்து புகார் தெரிவிக்கவும் 14420 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி இயங்கி வருகிறது.

அதைத் தொழிலாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். கழிவுநீர்த் தொட்டிகளில் தொழிலாளர்கள் இறங்கி வேலை செய்யக் கூடாது. எவரேனும் கட்டாயப்படுத்தி இறங்கி வேலை செய்ய வேண்டுமென வற்புறுத்தினால் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கலாம். அவர்கள் நடவடிக்கை எடுக்க ஆணையம் பரிந்துரைக்கும். அவ்வாறு கட்டாயப்படுத்தும் தொழிற்சாலையை மூட ஆணையம் பரிந்துரைக்கும்.

கழிவுநீர்த் தொட்டிகள், கழிவுநீர்க் கால்வாய்களில் தூய்மைப் பணி மேற்கொள்ள ரோபோக்களைப் பயன்படுத்துவது குறித்து ஐஐடியுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். இதுகுறித்த ஆராய்ச்சி 100 சதவீதம் இன்னும் முழுமையடையவில்லை. குஜராத் மாநிலத்தில் கழிவுநீர்த் தொட்டிகளைத் தூய்மைப்படுத்த ரோபோக்கள் பயன்படுத்தப்படுவதாகச் செய்திகள் மூலம் அறிந்தோம்.

அதுபற்றிய தகவலை அந்த மாநிலத்திடம் ஆணையம் கேட்டுள்ளது. ரோபோக்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பம் வெற்றியடைந்து முழுமையாகக் கிடைக்கும் பட்சத்தில் அனைத்து மாநிலங்களிலும் அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டுமென மாநில அரசுகளுக்கு ஆணையம் பரிந்துரைக்கும். ரோபோக்களைப் பயன்படுத்தும் பட்சத்தில் இது மாதிரியான உயிரிழப்புகள் ஏற்படுவது தடுக்கப்படும்’’.

இவ்வாறு எம்.வெங்கடேசன் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி, வட்டாட்சியர் அனந்த கிருஷ்ணன், ஆம்பூர் நகராட்சி ஆணையர் சவுந்திரராஜன்,ஆம்பூர் டிஎஸ்பி சச்சிதானந்தம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

9 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்