யூடியூபர் மதன் தருமபுரியில் கைது செய்யப்பட்டதை அடுத்து அவரது முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சேலத்தைச் சேர்ந்த மதன்குமார் என்பவர் தடை செய்யப்பட்ட 'பப்ஜி' போன்ற விளையாட்டுகளின் நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி, டாக்சிக் மதன் 18+ என்னும் யூடியூப் சேனலைத் தொடங்கி ஆன்லைன் ஸ்ட்ரீமிங் மூலம் இளைஞர்கள், சிறுவர், சிறுமியருக்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
பப்ஜி விளையாட்டில் திறமையாக விளையாடும் மதன், கற்றுக்கொடுக்கிறேன் என்கிற போர்வையில் ஒருகட்டத்தில் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்த ஆரம்பித்தார். பெண்களை அவதூறாகப் பேசுவது இதில் அதிகம். இதனால் அவர் பேச்சில் ஈர்க்கப்பட்ட சிறுவர், சிறுமியர் என அவரின் யூடியூப் சேனலைப் பின்பற்றுவோர் எண்ணிக்கை அதிகமாகி, 7.8 லட்சம் பார்வையாளர்கள் இணைந்தனர். இதனால் மாதம் ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை பணம் சம்பாதித்தார் மதன்.
அதிக பண வரவு, கேள்வி கேட்போர் யாருமில்லை, பின்பற்றுவோர் லட்சக்கணக்கில் இருந்ததால் அவரது அத்துமீறல் அதிகரித்தது. யூடியூபில் ஆபாசமாகப் பேசுவது, பெண்களை இழிவாகப் பேசுவது, திட்டுவது, சிறுவர், சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் மதனுக்கு ஆட்சேபம் தெரிவித்தபோது உங்களால் முடிந்ததைச் செய்துகொள்ளுங்கள் என ஆணவமாகப் பேசி உங்கள் குடும்பத்தில் யாரும் உயிருடன் இருக்க மாட்டீர்கள் எனக் கொலை மிரட்டல் வரை விட்டு இப்படித்தான் தொடர்வேன் என மிரட்டினார்.
» தலைமறைவாக இருந்த யூடியூபர் மதன் தருமபுரியில் கைது
» தமிழகத்தில் அதிக லாப ஆசை காட்டி ஏமாற்றும் சீன செயலிகளை தடை செய்க: ராமதாஸ்
ஒருகட்டத்தில் எல்லை மீறிய மதனின் யூடியூப் சேனல் மீது, சைபர் கிரைம் பிரிவு போலீஸாரிடம் புகார்கள் குவிந்தன. மேலும், மாநிலக் குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு அமைப்பு மற்றும் முதலமைச்சர் தனிப் பிரிவிலும் புகார்கள் கொடுக்கப்பட்டன. ஆன்லைனில் மட்டும் 120க்கும் மேற்பட்ட புகார்கள் யூடியூபர் மதன் மீது வந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
புகார்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து சென்னை மாநகரக் காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவினர் விசாரணைக்காக மதனை நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பினர். புளியந்தோப்பு காவல் நிலையத்தில் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால், விசாரணைக்கு ஆஜராகாமல் பப்ஜி மதன் தலைமறைவானார்.
இதனையடுத்து அவரை போலீஸார் தேடினர். ஆனால், அவர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலீஸாரிடம் சிக்காமல் தப்பித்து வந்தார். அவரது சொந்த ஊரான சேலத்துக்கும் போலீஸார் சென்றனர். பின்னர் அவரது தந்தை, மனைவி கிருத்திகா ஆகியோரைக் காவல் நிலையம் அழைத்துவந்து போலீஸார் விசாரித்தனர்.
மனைவி கிருத்திகாவின் பெயரில் யூடியூப் இயங்குவதும், அவர் அதன் பங்குதாரர் என்பதாலும் கிருத்திகாவை போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர். மதன் மீது சிறுவர்களைத் தவறாக வழிநடத்தியது, பெண்களை ஆபாசமாகப் பேசியது, தடை செய்யப்பட்ட விளையாட்டை விளையாடியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தனக்கு முன்ஜாமீன் கேட்டு மதன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மதன்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சக தொழில் போட்டியாளர்கள் அளித்த புகாரில் வழக்குப் பதியப்பட்டுள்ளது என்றும், பாதிக்கப்பட்டதாக யாரும் புகார் அளிக்கவில்லை என்றும் வாதிட்டார்.
காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மதனின் யூடியூப் சேனலை விரும்பிப் பார்ப்பவர்களில் 30 சதவீதத்தினர் பள்ளி மாணவர்கள். ஆபாசப் பேச்சுகள் மூலம் குழந்தைகளைக் கெடுக்கும் வகையிலும், பெண்களைக் கேவலப்படுத்தும் வகையிலும் பேசியுள்ளார்.
அவருக்கு உதவியாக இருந்த அவரது மனைவி கிருத்திகா நேற்று கைது செய்யப்பட்டு, ஜூன் 30 வரை நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக உள்ள மதனுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது'' எனத் தெரிவித்தார்.
பின்னர் மதனின் ஆடியோக்கள் நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டன. அதனைக் கேட்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, மதனின் பேச்சைக் காது கொடுத்துக் கேட்க முடியாத அளவிற்கு இருப்பதாக நீதிபதி தண்டபாணி தெரிவித்தார். யூடியூப் பதிவில் மதன் பேசியதை நீங்கள் கேட்டுள்ளீர்களா? என மனுதாரரின் வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி எழுப்பியபோது, வழக்கிற்காக சில பகுதிகளைக் கேட்டதாக வழக்கறிஞர் பதிலளித்தார். அந்தப் பதிவுகளைக் கேட்டுவிட்டு நாளை வந்து வாதிடுங்கள் என உத்தரவிட்டு, நீதிபதி வழக்கைத் ஒத்திவைத்தார்.
இந்நிலையில் வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில் தருமபுரியில் மதன் கைது செய்யப்பட்ட தகவலைத் தெரிவித்தனர். இதையடுத்து மதன் கைது செய்யப்பட்டுள்ளதால், மதன் தரப்பு வழக்கறிஞர் இந்த வழக்கை மேற்கொண்டு தொடர விருப்பமில்லை எனத் தெரிவித்தார். இதையடுத்து மேற்கொண்டு இந்த வழக்கை விசாரிக்கத் தேவையில்லை என முன்ஜாமீன் வழக்கைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
11 mins ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago