கட்டுமானப்பொருட்கள், காய்கறி, சமையல் எண்ணெய் மற்றும் இதர பொருட்களின் விலையைக் கட்டுக்குள் கொண்டுவர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, எல்.முருகன் இன்று (ஜூன் 18) வெளியிட்ட அறிக்கை:
"கரோனா பெரும் தொற்று காரணமாக மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து, வருமானத்திற்கு வழியின்றித் தவிக்கின்றனர். இந்த நேரத்தில் விலைவாசி உயர்வு, அவர்களுக்கு மேலும் ஒரு பெரிய சுமையாக அமைந்துள்ளது.
குறிப்பாக, திமுக ஆட்சி அமைந்த பிறகு பல்வேறு பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. எடுத்த எடுப்பிலேயே கட்டுமானப் பொருட்களின் விலை கட்டுப்பாடு இல்லாமல் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு மூட்டை சிமெண்ட் விலை திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 370 ரூபாயாக இருந்தது. அது இப்போது 520 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துவிட்டது.
நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் ஒரு மூட்டை சிமெண்ட் 370 முதல் 390 ரூபாய் வரையில்தான் உள்ளது. தலைநகர் டெல்லியில் கூட, ஒரு மூட்டை சிமெண்ட் 350 ரூபாய்க்குதான் விற்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் ஒரு மூட்டை சிமெண்ட் விலை 520 ரூபாய்க்கு அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிமெண்ட் விலையைத் தொடர்ந்து தமிழகத்தில் அனைத்துக் கட்டுமானப் பொருள்களின் விலையும், அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. 5,000 ரூபாயாக இருந்த ஒரு யூனிட் எம்.சாண்டின் விலை, இப்போது 6,000 ரூபாய்க்கும் அதிகமாகப் போய்விட்டது. ஒரு யூனிட் ஜல்லி (முக்கால் இஞ்ச்) 3,600 ரூபாயாக இருந்தது. அது இப்போது 4,200 ரூபாய்க்கும் மேல் சென்றுவிட்டது. கட்டிடங்கள் கட்டப் பயன்படும் கம்பி விலையானது, திமுக ஆட்சிக்கு முன்பு ஒரு டன் 18,000 ரூபாயாக இருந்தது. அது இப்போது 75,000 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
ஒரு லோடு செங்கல் 18,000 ரூபாயாக இருந்தது. அது இப்போது 24 ஆயிரம் ரூபாயைக் கடந்து சென்றுவிட்டது. அதாவது, 2012-ம் ஆண்டு ஒரு லோடு செங்கல் விலை 9,500 ரூபாயாக இருந்தது. கடந்த 9 ஆண்டுகளில் அது படிப்படியாக உயர்ந்து 18,000 ரூபாயாக ஆனது. ஆனால், கடந்த ஒரே மாதத்தில் ஒரு லோடு செங்கல் 6,000 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
கடந்த திமுக ஆட்சியின்போது, மூட்டைக்கு 180 ரூபாயாக இருந்த சிமெண்ட்டின் விலை, படிப்படியாக உயர்ந்து 2008-ம் ஆண்டு 280 ரூபாயைத் தொட்டது. இதனால் அப்போது கட்டுமான திட்டங்கள் அனைத்தும் முடங்கின.
இதனைத் தொடர்ந்து, அப்போதைய முதல்வர் கருணாநிதி, 'சிமெண்ட் ஆலைகள் அனைத்தும் அரசுடைமையாக்கப்படுவது குறித்துப் பரிசீலிக்கப்படும்' என்று அறிவித்தார். அதன்பிறகு, சிமெண்ட் உற்பத்தியாளர்கள் விலையைக் குறைத்தனர். கடந்த அதிமுக ஆட்சியின்போதும் சிமெண்ட் உற்பத்தியாளர்கள் அவ்வப்போது விலையை உயர்த்தினார்கள். ஆனால், அரசுத் தரப்பில் கிடுக்கிப்பிடி போட்டதால் விலை கட்டுப்பாட்டில் இருந்துவந்தது.
இந்த நிலையில், மீண்டும், திமுக ஆட்சி அமைந்ததும் அதிரடியாக சிமெண்ட் விலையை அதிக அளவு உயர்த்தி உள்ளார்கள். ஆனால், அன்றைய முதல்வர் கருணாநிதி எடுத்த நடவடிக்கையை அவரது மகனாகிய தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஏன் எடுக்கவில்லை என்று தெரியவில்லை.
மேலும், அதிமுக ஆட்சிக் காலத்தில் அம்மா சிமெண்ட் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம், ஒரு மூட்டை சிமெண்ட் 226 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. இதற்கு மக்களிடம் பேராதரவு கிடைத்தது. ஆனால், இப்போது அம்மா சிமெண்ட் திட்டம் என்ன ஆனது என்று தெரியவில்லை.
சிமெண்ட் உட்பட கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு மட்டுமல்லாமல், அன்றாடம் தாய்மார்கள் பயன்படுத்தும் சமையல் எண்ணெய், சமையல் பொருள்கள், காய்கறிகள் விலையும் அதிகரித்துவிட்டது. திடீரென ஏற்பட்டுள்ள இந்த விலைவாசி உயர்வால், அனைத்துத் தரப்பு மக்களும் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.
இந்த கரோனோ பெருந்தொற்றுக் காலத்தில், திடீரென பல்வேறு பொருட்களின் விலையை அதிகமாக உயர்த்தியுள்ளது கண்டிக்கத்தக்கது. ஏற்புடையது அல்ல.
எனவே, தமிழக முதல்வர் ஸ்டாலின், உடனடியாக இதில் தனி கவனம் செலுத்தி, சிமெண்ட் விலை முதல் அனைத்து கட்டுமானப் பொருட்களின் விலையையும் உடனடியாகக் கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல, காய்கறி விலை, சமையல் எண்ணெய் விலை மற்றும் இதர பொருட்களின் விலையையும் உடனடியாகக் கட்டுக்குள் கொண்டுவர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்".
இவ்வாறு எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago