போக்குவரத்து நெரிசலை சீர்ப்படுத்தவும், நிலத்தடி நீரை செறிவூட்டவும் ரங்கம்- நொச்சியம் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்ட வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் பல ஆண்டு கோரிக்கை இந்த ஆட்சியிலாவது நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திருச்சி கொள்ளிடம் ஆற்றில் ரங்கம்– நம்பர் 1 டோல்கேட் இடையே புதிய பாலம் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் பழைய பாலம் ஆகியவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
கொள்ளிடம் ஆற்றின் வடபுறத்தில் உள்ள நொச்சியம், துடையூர், திருவாசி, மான்பிடிமங்களம், கூடப்பள்ளி, வீராத்தூர், குமரகுடி மாதவப்பெருமாள் கோவில், அத்தாணி, நெற்குப்பை, மண்ணச்சநல்லூர், பிச்சாண்டார்கோவில், உத்தமர்கோவில் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், பணிக்குச் செல்வோர் திருச்சி மற்றும் ரங்கத்துக்கு செல்வதற்கு நம்பர் 1 டோல்கேட் வந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டி உள்ளது.
ரங்கம் வடக்கு வாசல் படித்துறையிலிருந்து கொள்ளிடம் ஆற்றின் வடபுறத்தில் உள்ள நொச்சியம் பகுதிக்கு செல்ல கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஒரு தரைப்பாலம் அமைக்கப்பட்டால், ரங்கத்துக்கு சுற்றிச் செல்லாமல் எளிதில் சென்றுவிடலாம் என்பதால், இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ரங்கம் கே.முருகேசன் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:
நொச்சியம், துடையூர், திருவாசி, மான்பிடிமங்களம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த பூக்கள், காய்கறிகள் ஆகியவற்றை ரங்கம் சந்தைக்கு தினந்தோறும் கொண்டு வர சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றி வர வேண்டி உள்ளது. இதிலும், நம்பர் 1 டோல்கேட், பிச்சாண்டார்கோவில் ரயில்வே மேம் பாலம் போன்ற இடங்களில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசல், வாகன விபத்துக்களால் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
எனவே, ரங்கம் வடக்குவாசல் பகுதியையும் நொச்சியத்தையும் இணைக்கும் வகையில் இருவழி தரைப்பாலம் கட்டினால், போக்குவரத்து பிரச்சினை தீரும். மேலும் மழைக்காலங்களில் தரைப்பாலத்தின் மேற்குபகுதியில் மழைநீர் தேங்கும் என்பதால் நிலத்தடி நீர்மட்டமும் செறிவூட்டப்படும். இதனால், நம்பர் 1 டோல்கேட் பகுதியில் போக்குவரத்து நெரிசலும் குறையும். ரங்கம், மண்ணச்சநல்லூர் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திமுக எம்எல்ஏக்கள் இந்த பாலம் அமைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்துள்ள னர். எனவே, இரு எம்எல்ஏக் களும் முயற்சி மேற்கொண்டு தரைப்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாவட்டத்தில் 2 அமைச்சர்கள் உள்ள நிலையில், பாலம் கட்ட விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை வட்டாரங்களில் கேட்டபோது அவர்கள் கூறியது: ஏற்கெனவே இந்தப் பாலம் தொடர்பான கருத்துரு பொதுப்பணித்துறை தலைமையகத்துக்கு அனுப்பப்பட்டது. 2 கிலோ மீட்டருக்குள் வேறு பாலம் இருப்பதால், புதிய பாலம் அவசியமா எனக் கேட்டு திருப்பி அனுப்பி விட்டனர். இதுதொடர்பாக புதிய அரசு என்ன முடிவெடுக்கப் போகிறது என தெரியவில்லை. இருப்பினும் இது தொடர்பான கருத்துரு மீண்டும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago