ஓசூரில் தந்தையின்றி தாயின் அரவணைப்பில் வளர்ந்து வந்த 5 பிள்ளைகளும், கரோனாவுக்குத் தாயைப் பறிகொடுத்துவிட்டு ஆதரவற்றுத் தவிக்கும் நிலையில் தமிழக அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
ஓசூர், அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமன் (56). இவரது மனைவி லட்சுமி (53). இவர்களுக்கு சசிகலா (25), நிவிதா (22), தாக்ஷாயிணி (20), கவுரி (18), முருகேஷ்வரி (16) மற்றும் சிவா (15) என 6 பிள்ளைகள் உள்ளனர். இதில் தந்தை ராமன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதன்பிறகு தாய் லட்சுமி, போண்டா வியாபாரம் செய்து 6 பிள்ளைகளையும் வளர்த்து வந்தார். இதனிடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமி, தனது மூத்த மகளான சசிகலாவை உறவினருக்குத் திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
இந்நிலையில் பெரிய மகளைத் தவிர்த்து மற்ற 5 பிள்ளைகளுடன் வாழ்ந்துவந்த லட்சுமிக்குக் கடந்த மே மாதம் கரோனா நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதில் தாய் லட்சுமி உயிரிழந்துவிடவே, 5 பிள்ளைகளும் வாழ்வாதாரத்தை இழந்து ஆதரவற்ற நிலையில் வாடகை கூடக் கொடுக்க முடியாத அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த 5 பேரில் நிவிதா மற்றும் தாக்ஷாயிணி ஆகிய இருவரும் தங்களுடைய குடும்பத்தைக் காப்பாற்றத் தற்போது தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளனர். மற்ற 3 பேரும் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
தற்போது அம்மாவோடு பிறந்த வயதான தாய்மாமா ஒருவர் மட்டுமே தங்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும், அவருக்குப் பின்னால் தங்களுக்கு வழிகாட்ட யாரும் இல்லை என்று வேதனைப்படும் 5 பேரும், தமிழக அரசும், மனிதநேயமிக்கவர்களும் தங்களுக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
தாய் லட்சுமிக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு, ஓசூர் தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். ஆனால், கரோனா நோயினால் உயிரிழந்ததற்கான சான்றிதழ் வழங்கப்படவில்லை. அதனால் இந்த 5 பிள்ளைகளுக்கும் அரசு சலுகைகளைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பெற்றோர்களை இழந்து வாடகை வீட்டில் வசிக்கும் இந்த 5 குழந்தைகளின் ஆதரவற்ற நிலையை அறிந்த கிருஷ்ணகிரி மாவட்டக் குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பில் 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 6 மாதத்துக்கான மொத்த வீட்டு வாடகை ரூ.25 ஆயிரம் தொகைக்கான காசோலையை வீட்டு உரிமையாளர் சம்பங்கியிடம் வாடகை முன்பணமாக வழங்கியுள்ளனர். ஆதரவற்ற பிள்ளைகளின் நிலையறிந்து ஏற்கெனவே வீட்டு உரிமையாளர் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாத வாடகையைத் தள்ளுபடி செய்துள்ளார்.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டக் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், ''5 குழந்தைகளும் அரசு சலுகைகளைப் பெறுவதற்கு வசதியாக தாய் லட்சுமி கரோனா நோயினால் உயிரிழந்ததற்கான சான்றிதழை வழங்க வேண்டும். சொந்த வீடு இல்லாத 5 பிள்ளைகளுக்கும் குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்க வேண்டும். அரசு வேலை வழங்க வேண்டும் மற்றும் மாநில அரசின் நிவாரணத் தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago