நீண்ட விடுமுறையில் சென்ற சுகாதாரத்துறை துணை இயக்குனர்: மதுரை கிராமங்களில் கரோனா தடுப்புப் பணியில் சிக்கல்

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் நீண்ட விடுமுறையில் சென்றததால் அவருக்குப் பதிலாக கூடுதல் பொறுப்பாக மாநகராட்சி சுகாதாரத்துறை நகர் நல அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒரே அதிகாரி நகர்ப்பகுதியையும், கிராமப்பகுதிகளையும் ஒருங்கிணைத்து கரோனா தடுப்பு மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனராக அர்ஜூன்குமார் இருந்து வருகிறார். இவர், கடந்த ஒரு மாதத்திற்கு முன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்தார். அதிலிருந்து மீண்டு வந்து மீண்டும் பணிக்கு திரும்பினார்.

ஆனாலும், அவரால் கரோனா தடுப்புப்பணிகளில் முன்போல் திறம்பட செயல்பட முடியவில்லை. அவரது உடல்நிலையும் முழுமையாக சீரடையாததால் மீண்டும் இரு வார விடுமுறையில் தற்போது சென்றுள்ளார்.

அவருக்குப் பதிலாக மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பொறுப்பை கூடுதலாக மாநகராட்சி சுகாதாரத்துறை நகர்நல அலுவலர் குருமரகுருபரன் கவனித்து வருகிறார்.

கரோனா பெருந்தொற்று போன்ற இந்த நெருக்கடியான நேரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த சுகாதாரத்துறை உயர் அதிகாரி நீண்ட விடுமுறையில் சென்றால் கிராமங்களில் கரோனா தடுப்பு பணிகளில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

அவருக்குப் பதிலாக ஏற்கெனவே கூடுதல் வேலைப்பழுவுடன் திண்டாடும் மாநகராட்சி நகர் நல அலுவலரை பொறுப்பு அதிகாரியாக நியமிப்பது கரோனா தொற்றை நகர் மற்றும் கிராமங்களில் முழுமையாக தடுப்பது பெரும் சவாலானதாக இருக்கும்.

மாநகராட்சி சுகாதாரத்துறையில் போதுமான ஊழியர்கள் இல்லாமல் அன்றாட குப்பை பராமரிப்பு மற்றும் கரோனா தடுப்பு பணியை திறம்பட மேற்கொள்வதற்கே மாநகராட்சி நகர் அலுவலருக்கு முழுமையாக நேரம் கிடைக்கவில்லை.

வேலைப்பளுவால் அவரே மாநகராட்சிப் பகுதியில் கரோனா தடுப்புப் பணிகளில் திணறிக் கொண்டிருக்கிறார். தற்போது அவரையே கூடுதலாக பொறுப்பாக சுகாதாரத்துறை துணை இயக்குனர் பொறுப்பையும் சேர்த்து கவனிக்க வேண்டி இருப்பதால் மதுரை மாவட்ட சுகாதாரத்துறை கரோனா தடுப்புப் பணியில் திணறிக் கொண்டிருக்கிறது.

தற்போது உள்ளூர் அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கையால் கரோனா பாதிப்பு மதுரை மாவட்டத்தில் குறைந்த நிலையில் தற்போது சுகாதாரத்துறை அதிகாரி நீண்ட விடுமுறையில் சென்றுள்ளதால் கிராமங்களில் கரோனா பரிசோதனை, தடுப்பூசி போடும் பணி மற்றும் தொற்று தடுப்புப் பணிகளில் தொய்வு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனால், மாவட்ட நிர்வாகமும், அமைச்சர்களும் இந்த விஷயத்தில் துரிதமாக மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘உடனடியாக நியமிக்க அதிகாரி இல்லாததாலேயே கூடுதல் பொறுப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார், ’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE