குழந்தை பிறந்த இரண்டே நாளில் பாலூட்டும் தாய்மார்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்: சிவகங்கை ஆட்சியர்

By இ.ஜெகநாதன்

‘‘குழந்தை பிறந்த இரண்டே நாளில் பாலூட்டும் தாய்மார்கள் கரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்,’’ என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாலூட்டும் தாய்மார்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை அவர் இன்று தொடங்கி வைத்தார்.

கல்லூரி டீன் ரேவதி, மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலமுருகன், நிலைய மருத்துவ அலுவலர் மீனாள், உதவி மருத்துவ அலுவலர்கள் முகமதுரபி, மிதுன், மகப்பேறு மருத்துவ அலுவலர் காயத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பிறகு மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாலூட்டும் தாய்மார்கள் குழந்தை பிறந்த இரண்டே நாளில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். சிவகங்கை மாவட்டத்தில் 2020 டிசம்பர் முதல் இதுவரை 5,713 பாலூட்டும் தாய்மார்கள் உள்ளனர்.

முதற்கட்டமாக அரசு மருத்துவமனைகளில் உள்ளோருக்கு செலுத்தப்படும். மற்றவர்களுக்கு வீடு, வீடாகச் சென்று செலுத்தப்படும். இதுவரை மாவட்டத்தில் 1,45,438 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதில் 25,223 பேர் 2 தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தற்போது 8,500 கோவிஷீல்டு, 2 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசி வரப்பெற்று, செலுத்தப்பட்டு வருகிறது. இனி தடுப்பூசி தட்டுப்பாடு என்பதே இருக்காது. மேலும் சிவகங்கை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 100-க்குள் குறைந்துவிட்டது.

சிவகங்கை அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று, காய்ச்சல், நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டோர் 300 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இதனால் மற்ற நோயாளிகளும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர், என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE