ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பெண் கரோனா நோயாளி 8-வது மாடியில் பிணமாக மீட்கப்பட்ட விவகாரத்தில், அவர் கொலை செய்யப்பட்டது அம்பலமாகியுள்ளது. பெண் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையை அடுத்த மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த மவுலி (48), தனியார் கல்லூரி துணைப் பேராசிரியர். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தனது மனைவி சுமிதாவை (41) மே 21ஆம் தேதி ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தார். டவர் மூன்றாவது மாடி படுக்கை எண் 363-ல் உள்நோயாளியாக சுமிதா சிகிச்சை பெற்று வந்தார்.
மே 22ஆம் தேதி இரவு, மனைவிக்கு உணவு கொடுத்துவிட்டு வீட்டிற்குச் சென்ற கணவர், மறுநாள் மருத்துவமனைக்கு காலை 10 மணி அளவில் வந்து பார்த்தபோது சிகிச்சை வார்டில் மனைவியைக் காணவில்லை. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டுள்ளார். பின்னர் அவரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.
ஒருவாரம் ஆகியும் காணாமல்போன மனைவி குறித்துத் தகவல் கிடைக்காததால் மே 31 அன்று பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை 8-வது மாடியில் மின் பகிர்மான அறையில் அழுகிய நிலையில் பெண் பிணம் கிடந்தது தெரியவந்தது. பிணம் கைப்பற்றப்பட்டு சவக்கிடங்குக்கு அனுப்பப்பட்டது. மவுலியின் புகாரை அடுத்து அவரை அழைத்துச் சென்ற போலீஸார் பெண் பிணத்தைக் காட்டியுள்ளனர்.
அந்தப் பிணம் சுமிதாவினுடையதுதான் என மவுலி அடையாளம் காட்டினார். 3-வது மாடியிலிருந்து சுமிதா எப்படி 8-வது மாடிக்குச் சென்றார், அங்கு அவர் எப்படி மரணமடைந்தார், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு என்று கேள்வி எழுப்பப்பட்டது. மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்தனர்.
ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட சுமிதாவால் எப்படி 8-வது மாடி வரை செல்ல முடிந்தது, 8-வது மாடியில் மின் பகிர்மான அறையில் அழுகிய நிலையில் பெண் பிணம் கிடப்பது மருத்துவமனை நிர்வாகத்தால் எப்படிக் கண்டறிய முடியாமல் போனது, 23ஆம் தேதி காணாமல் போனவர் 31ஆம் தேதி வரை ஏன் தேடப்படவில்லை, எப்போது சுமிதா இறந்தார் ஆகிய கேள்விகள் எழுந்தன.
சுமிதாவின் சடலம் அவரது கணவரான மவுலி மூலம் உறுதி செய்யப்பட்டு, பூக்கடை காவல் நிலையத்தில் ஐபிசி 174 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
சுமிதாவின் உடல் ஜூன் 9ஆம் தேதி பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. மருத்துவர்கள் அளித்த பிரேதப் பரிசோதனை அறிக்கையில், சுமிதாவின் மரணம் நோயின் தாக்கத்தால் உண்டானதாக அறிவித்ததை அடுத்து, மவுலியிடம் சுமிதாவின் உடல் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. இவ்வழக்கு உயர் அதிகாரிகள் மேற்பார்வையில் விசாரணை நடைபெற்று வருகிறது என அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் சுமிதா கொலை செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்தப் பெண் ஊழியர் பணம் மற்றும் செல்போனுக்காக பேராசிரியர் மனைவியைக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை போலீஸார் மருத்துவமனை ஊழியர் அவரை கைது செய்துள்ளனர்.
பணம், செல்போனுக்காக சுமிதாவைக் கொலை செய்து அவரது உடலை 8-வது மாடியில் உள்ள மின் பகிர்மான அறையில் வைத்ததாகவும், பின்னர் அகற்றிவிடலாம் என்று நினைத்தும் முடியாமல் போனதாகவும், அழுகிப்போய் துர்நாற்றம் வீசியதால் பிணம் மற்றவர்களுக்குத் தெரிந்துபோனது என்றும் பெண் ஊழியர் முதற்கட்ட விசாரணையில் கூறியதாகத் தெரிகிறது.
சிசிடிவி காட்சிகள், மற்றவர்களிடம் நடத்திய விசாரணையில் பெண் ஊழியர் போலீஸாரிடம் சிக்கியதாக போலீஸ் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
13 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago