அர்ச்சகர் பயிற்சி பெற்ற 205 பேரையும் முக்கிய கோயில்களில் நியமனம் செய்ய வேண்டும் என, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, கி.வீரமணி இன்று (ஜூன் 14) வெளியிட்ட அறிக்கை:
"திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள பி.கே.சேகர்பாபு, மிகுந்த சுறுசுறுப்புடனும், விரைந்தும் தமது துறைக்கான பணிகளை ஆற்றி சாதனை படைத்து வருகிறார்.
முதல்வரின் ஆணைக்கேற்ப அவரது பணி ஆழமானதாகவும், அடக்கமானதாகவும், அதே நேரத்தில் நிதானத்தோடும் நடைபெற்று, எதிர்த்தவரைக்கூட தங்களது ஆயுதங்களை கீழே போட்டு, கைத்தட்டிப் பாராட்டும்படி நாளும் அமைந்து வருகிறது.
» ஜூன் 14 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்
» ஜூன் 14 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்
அமைச்சர் சேகர்பாபு - மா. சுப்பிரமணியன் ஆகியோரின் அருட்செயல்பாடுகள்
கரோனா கொடுந்தொற்றுக்கே முன்னுரிமை என்பதாலும் தலைநகரம் சென்னையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பேற்றுள்ளவர் என்பதாலும், கரோனா கொடுந்தொற்று நோய்ப் பரவலைத் தடுத்து, அறவே இல்லாது செய்யும் இலக்கை திமுக அரசின் பணி என்பதை செயலில் நிலைநாட்டும் வண்ணம், மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனுடன் இணைந்து மிக வேகமாக செயல்பட்டதன் விளைவு, சென்னை அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை நீங்கி, காலியாக உள்ளன என்ற நிலையுடன், ஆக்சிஜனுக்கு பஞ்சம் இல்லை என்ற தலைகீழ் நிலையாக ஒரு சில நாட்களில் சரி செய்யப்பட்டு விட்டன.
மருத்துவமனையில் உள்ள கரோனா நோயாளிகளுக்கு இலவச உணவை, இந்து சமய அறநிலையத் துறையுடன் இணைந்து அன்னதானத் திட்டத்துடன் இணைத்து, பிணிகளிலேயே பசிதான் பெரும் பிணி, கவலை தரும் பிணி என்பதை உணர்ந்து வயிற்றுக்குச் சோறிடும் திருப்பணி செய்து, அத்துறைக்குப் பெருமை சேர்த்து வருகிறார்.
தனி நபர்களால் அபகரிக்கப்பட்ட கோயில் நிலங்களை மீட்டு, முந்தைய அரசு செய்யத் தவறியதை செய்து, புதுநம்பிக்கையை விதைத்து வருகிறார்!
பெரியார் நெஞ்சில் தைத்தமுள், நூறு நாட்களில் அகலப் போகிறது
கருணாநிதியின் ஆதங்கத்தைப் போக்க, முதல்வரின் விருப்பத்திற்குச் செயல் வடிவம் கொடுக்கும் வகையில் 'பெரியார் நெஞ்சில் தைத்த முள்'ளை அகற்றிடும் வகையில் ஆகமப் பயிற்சி பெற்ற சுமார் 205 பேருக்குப் பணி நியமனம் செய்யும் வகையில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக்கும் திட்டத்தை 100 நாட்களுக்குள் செய்வோம் என்றும், விரும்பும் பெண் அர்ச்சகர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது மிகவும் பாராட்டி வரவேற்கத்தக்க செயலாகும்.
தமிழில் அர்ச்சனை வெறும் மொழிப் பிரச்சினையல்ல
தமிழில் அர்ச்சனை ஒவ்வொரு கோயிலிலும் நடைபெறுவதை பெரிய பலகையில், தமிழில் அர்ச்சனை செய்யப்படும்' என்று எழுதி விளம்பரம் வைக்க வேண்டும் என்றும், அர்ச்சனை செய்பவர் பெயர், செல்பேசி எண், அறிவிப்புப் பலகையில் பதிவு செய்வது அவசியம் என்றும் அமைச்சர் ஆணையிட்டிருப்பதும் பல தரப்பாலும் வரவேற்கப்பட்டுள்ளது.
தமிழில் அர்ச்சனை என்பது பக்திப் பிரச்சினை மட்டுமல்ல; மொழி உரிமை, தமிழ் மானம் மீட்கப்பட்டு, காப்பாற்றப்படும் மொழி உரிமை, இனமான பிரச்சினை!
தமிழில் ஏன் அர்ச்சனை கூடாது என்பதற்கு சொல்லப்பட்ட காரணம் தமிழ் 'நீச்ச' பாஷை, சமஸ்கிருதம் தேவ பாஷை என்ற பேதத்தாலும், அவமானத்தாலும் தானே என்பது தமிழ்நாட்டுப் பக்தர்களுக்குப் புரிந்துவருகிறது!
வள்ளலாரின் பெருமையை உயர்த்தும் அறிவிப்பு
வடலூருக்கு அறநிலையத் துறை அமைச்சர் சென்று, வடலூர் வள்ளலாரின் சத்திய ஞான சபை சர்வதேச அளவில் ஓர் அருங்காட்சியகம், உயர் ஆய்வு நிலையமாகச் செய்யப்படும் என்ற அறிவிப்பு, தேன் சொட்டும் அறிவிப்பாகும்.
வடலூர் வள்ளலாரின் பெருமையை வையகம் அறிய குறிப்பாக ஆறாம் திருமுறையான தத்துவ ஞானம் பற்றி உலகறியச் செய்ய, உண்மை வள்ளலாரை உலகறியச் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி முழுமதியென நாளும் ஒளியூட்டி வருவதுடன், சக அமைச்சர்கள் அனைவரும் பெரிதும் சுதந்திரத்துடன் அதே நேரத்தில் கட்டுப்பாட்டுடன் கடமையாற்றி வருவதும் எடுத்துக்காட்டாகும்.
205 பேருக்கு ஏற்கெனவே பயிற்சி பெற்று கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்போருக்கு அனைத்து சாதியினர் அர்ச்சகர் ஆகும் திட்டத்தின்கீழ் முக்கிய கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிப்பது அவசியம்.
தமிழக பாஜக தலைவரின் வரவேற்கத்தக்க கருத்து
பாஜகவின் தமிழக தலைவர் எல்.முருகன் அந்த நியமனங்கள் செய்யப்பட வேண்டும் என்றும், பெண்களையும் அர்ச்சகர்களாக நியமிக்க விருப்பதையும் வலியுறுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது.
இதற்குத் தமிழகத்தில் எந்தக் கட்சியிடமிருந்தும் எதிர்ப்பில்லை என்பதே பெரியார் மண் இது என்பதற்கான சான்றாகும்.
ஆகமப் பயிற்சி பெற்றவர்களையே தேர்வு செய்ய வேண்டும் என்று பாஜக தலைவர் முருகன் கூறியுள்ளபடிதான் ஆகமப் பள்ளியில் பட்டயச் சான்றிதழ் பெற்றவர்களைத் தான் திமுக ஆட்சி நியமனம் செய்யவிருக்கிறது.
அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் தொடரட்டும்
தொடர்ந்து ஆகமப் பயிற்சிப் பள்ளிகளையும், 69 சதவிகித அடிப்படையில் வரும் ஆண்டுக்கு புதிய அர்ச்சகர்ப் பயிற்சி படிப்புக்குரிய விண்ணப்பங்களைக்கோரும் துறையின் ஆகமப் பயிற்சி நிலை சேர்க்கையைப் புதுப்பித்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் விளம்பரம் செய்ய முதல்வர் ஆணையிடுவதும் முக்கியமாகும். அது கல்வியின் பாற்பட்ட சாதி, தீண்டாமை ஒழிப்புத் திட்டமாகும்".
இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
21 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago