எங்களின் அறியாமை அல்ல; உங்களின் புரியாமையே பிரச்சினை: அமைச்சரின் கருத்துக்கு சு.வெங்கடேசன் எம்.பி பதில்

By செய்திப்பிரிவு

இந்தியா முழுமைக்கும் கல்வெட்டு ஆய்வாளர்களைப் புதிதாக நியமியுங்கள்; குறைந்த அளவாக ஒரு மொழிக்கு 2 பேரையாவது நியமியுங்கள் என நான் கேட்டுள்ளேன். இதில் கிணறும் தவளையும் எங்கிருந்து வந்தன? என மத்திய அமைச்சர் பிரஹலாத் படேலுக்கு கேள்வி எழுப்பியிருக்கிறார் மதுரை மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன்.

இது தொடர்பாக அவருடைய அறிக்கை பின்வருமாறு:

இந்திய தொல்லியல் துறையின் கீழ் உருவாக்கப்படவுள்ள 758 புதிய பணியிடங்கள் குறித்தும், இந்திய கல்வெட்டுத்துறையை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை குறிப்பிட்டும் இன்று காலை இந்திய கலாச்சாரத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினேன்.

இந்திய வரலாற்றிற்கு பேருதவி புரியும் கல்வெட்டுத்துறையில் குறைந்தது 40 தொழில்நுட்ப பணியாளர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் வலியுறுத்தினேன்.

அது குறித்து ட்விட்டரில் தமிழில் பதிவிட்டுள்ள மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் “தங்களுக்கு இந்தியாவின் கலாச்சாரத்துறை செய்துவரும் பணிகள் குறித்து அறியாமை உள்ளது.

தமிழ் நாட்டின் அமைச்சர் தங்கம் தென்னரசின் அறிவை நான் மதிக்கிறேன். ஆனால், நமது பேச்சு கிணற்று தவளைப் போல் அல்லாமல், பரந்து விரிந்ததாக இருக்க வேண்டும்” என்கிறார்.

அதற்கு அடுத்த பதிவில் “ தமிழகத்தில் இதுவரை 2,76,449 ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும், அவை சென்னை அரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் , செங்கல்பட்டு மற்றும் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம் ஆகியவற்றில் இருப்பதை பார்க்கவும்” எனச் சொல்கிறார்.

இந்திய கலாச்சாரத்துறை அமைச்சர் தமிழில் ட்வீட் செய்ததற்கு எனது பாராட்டுகள்.

இந்தியா முழுமைக்கும் கல்வெட்டு ஆய்வாளர்களைப் புதிதாக நியமியுங்கள்; குறைந்த அளவாக ஒரு மொழிக்கு 2 பேரையாவது நியமனம் செய்யுங்கள் என நான் கேட்டுள்ளேன்.

இதில் கிணறும் தவளையும் எங்கிருந்து வந்தன?

எனது அறியாமையல்ல, உங்களின் புரியாமைதான் பிரச்சனை.

தமிழ்நாட்டு அமைச்சரின் அறிவை மதித்தமைக்கு நன்றி!

ஆனால் வரலாற்றுக்கு அதன் முழுத்தன்மையோடு உயிரூட்டம் அளியுங்கள் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதுதான் எங்களின் அறிவு மரபு.

நீங்களோ அதை அறியாமையோடு ஒற்றிப் பார்க்கிறீர்கள்.

நான் உங்களது பதிவின் மீது மீண்டும் இரண்டு விசயங்களை கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

1) நீங்கள் எனது கடிதத்தினை மீண்டும் பொறுமையோடும், கவனத்தோடும் படிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இந்தியா முழுமைக்கும் கண்டறியப்பட்டுள்ள 80,000 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகளில் 50 சதமானவை இன்னும் பதிப்பிக்கப்படவில்லை என்பதை மீண்டும் கவனப்படுத்துகிறேன்.

2) நீங்கள் சுவடிகளைக் குறித்து பேசுவதால் ஒரு கேள்வியை எழுப்ப விரும்புகிறேன். சென்னை அரசினர் கீழ்த்திசை சுவடிகள் ஆய்வு மையத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக சம்பளம் வழங்கப்படவில்லை. மத்திய கலாச்சாரத்துறையின் கீழ் வரும் தேசிய சுவடிகள் குழுமம் அந்த திட்டத்திற்கான நிதியை இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைத்துள்ளது. இதிலாவது நீங்கள் கவனம் செலுத்துவீர்கள் என நம்புகிறேன்.

நாங்கள் ஒன்றை பேசினால் , நீங்கள் வேறொன்றுக்கு பதில் சொல்வதை என்று நிறுத்தப் போகிறீர்கள் என தெரியவில்லை. மொத்த இந்தியாவிற்குமான துறையாக உங்களது துறையினை மாற்றிட முனையுங்கள். ஒன்றிய கலாச்சாரத்துறையின் டுவிட்டர் புகைபடம் அல்ல இந்திய கலாச்சாரம்.

எப்போதும் துரோகங்களை தூக்கி எறுவது தான் எங்கள் மரபும், அறிவும். அதை உயர்த்திப் பிடிப்போம்!

இவ்வாறு சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்