கரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை புதுச்சேரியில் 94% ஆக உயர்வு: நோய்த் தொற்று 5000-க்குக் கீழ் குறைந்தது

By செ. ஞானபிரகாஷ்

கரோனாவிலிருந்து குணடைந்தோர் எண்ணிக்கை புதுச்சேரியில் 94 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுவரை 3.24 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நோய்த் தொற்றுடன் இருப்போர் எண்ணிக்கையும் 5000-க்குக் கீழே குறைந்தது.

புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்றுக்காக 7,657 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 309 தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், புதுவையில் 4 பேர், காரைக்காலில் 3 பேர் என 7 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் ஒருவர் ஆண், 6 பேர் பெண்கள் ஆவர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,691 ஆகவும், இறப்பு விகிதம் 1.50 சதவீதமாகவும் உள்ளது.

தற்போது ஜிப்மரில் 248 பேரும், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 218 பேரும், கோவிட் கேர் சென்டரில் 182 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் 4,145 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மாநிலம் முழுவதும் மொத்தம் 4,947 பேர் சிகிச்சையில் உள்ளனர். 686 பேர் சிகிச்சை முடிந்து, குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 94.12 சதவீதமாக உயர்ந்துள்ளது.

சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 3,24,328 பேருக்கு (2வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதுபற்றிச் சுகாதாரத்துறைச் செயலர் டாக்டர் அருண் கூறுகையில், "புதுச்சேரியில் கரோனா தொற்று குறைந்து, கட்டுக்குள்
வந்து கொண்டிருக்கிறது.

சில தினங்களாகப் புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டவரின் எண்ணிக்கை 500-க்கும் கீழேதான் உள்ளது. புதுச்சேரியில் உள்ள அனைத்துப் பிராந்தியங்களிலும் சேர்த்து நோய்த்தொற்று இருப்பவர்கள் எண்ணிக்கை 5000-க்கும் கீழே குறைந்து தற்போது 4,947 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மருத்துவமனையில் நோய்த் தொற்றுடன் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துவிட்டது. புதுச்சேரியில் தொடர்ந்து டெஸ்ட் பாசிட்டிவிட்டி 5 சதவீதத்திற்கும் கீழே குறைந்துள்ளது" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE