சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடிய அதிமுகவினரை உடனடியாக கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என, அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று (ஜூன் 14) காலை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
"தமிழகத்தை சமதர்மத்தின் புதிய பூமியாக மாற்றிட ஏழை, எளிய, உழைக்கும் வர்க்கத்தினரும், புதுவாழ்வு காண புதிய பாதை தேடிய இளைஞர் கூட்டமும், தியாகத் திருவிளக்குகளாம் தாய்க்குலமும் கண்ட மாபெரும் கனவை அதிமுக என்ற ஒப்பற்ற இயக்கத்தின் மூலம் நிறைவேற்றியவர் எம்ஜிஆர்.
எம்ஜிஆரின் மறைவுக்குப் பின்னர், அதிமுகவைக் காணாமல் போகச் செய்துவிடலாம் என்று மனப்பால் குடித்தவர்களின் மனக் கணக்குகளை தூள், தூளாக்கி, மீண்டும் அதிமுகவை உலகம் புகழும் இயக்கமாக்கிக் காட்டியவர் ஜெயலலிதா. தனது வாழ்வின் அற்புதமான 34 ஆண்டுகளை அதிமுகவின் வளர்ச்சிக்காகவும், தமிழகத்தின் உயர்வுக்காகவும் ஆயிரம் இன்னல்களுக்கிடையே அரும்பாடுபட்டவர் ஜெயலலிதா.
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்கள் மீது, அதிமுக உடன்பிறப்புகள் தங்களின் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தந்து, கண்ணை இமை காப்பதுபோல் அதிமுகவைக் காத்து நிற்கும் காவல் தெய்வங்களாய் இடையறாது பணியாற்றி வருகின்றனர்.
'ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் புயல் வீசும்; அனைத்தும் தகர்ந்து போய்விடும்; இனி தமிழகத்தில் குழப்பம் தான் மிஞ்சும்' என்று எண்ணி இருந்தோருக்கு ஏமாற்றத்தைப் பரிசளித்து, 'எங்கள் ஆட்சி என்றும் வாழும் இந்த மண்ணிலே' என்று மெய்ப்பித்து ஜெயலலிதா அளித்துச் சென்ற ஆட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறோம். இந்த சாதனையைக் கண்டு நம் எதிரிகளும் வியந்து நின்றனர்.
மாபெரும் கூட்டணி, பல ஆயிரம் கோடி செலவு, பகட்டான வாக்குறுதிகள், பசுத்தோல் போர்த்திய புலிகளாய் பகல் வேஷம் என்ற பரிவாரங்களுடன் வந்து, மக்களிடம் நாடகமாடி தேர்தலை சந்தித்த திமுக மற்றும் எதிர் அணி, சட்டப்பேரவைத் தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு சதவீதத்தில்தான் வெற்றி பெற்றிருக்கிறது.
சூழ்ச்சிகள், தந்திரங்கள், சதிச் செயல்கள் அனைத்தையும் முறியடித்து, மக்களின் பேரன்பைப் பெற்று, அதிமுகவின் தலைமையிலான கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியாக, அதிமுகவின் 66 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தமிழகத்தின் நலனுக்காக சட்டப்பேரவையில் உரக்கக் குரல் எழுப்பி, உண்மை மக்கள் தொண்டர்களாகப் பணியாற்ற துடித்துக்கொண்டிருக்கின்றனர்.
உழைப்பைச் சுரண்டும் ஒட்டுண்ணிகளாகவும், நற்பெயரை அழிக்கும் நச்சுக் களைகளாகவும் தங்களை வளப்படுத்திக் கொண்ட சிலர், அதிமுகவை அபகரித்துவிடலாம் என்று வஞ்சக வலையை நாளும் விரித்துக் கொண்டிருக்கின்றனர்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப் போவதாக அறிவித்த திருமதி சசிகலா, இப்போது அதிமுக இவ்வளவு வலுவும், பொலிவும், தொண்டர் பெரும்படையும், மக்கள் செல்வாக்கும் பெற்றிருப்பதைப் பார்த்ததும் அரசியலில் முக்கியத்துவத்தைத் தேடிக்கொள்ள, அதிமுகவை அபகரிக்கும் முயற்சியில் இறங்கப்போவதாக ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் சிலருடன் பேசுவதும், அதை ஊர் அறிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதுமாக விநோதமான ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்.
மகத்தான இரு தலைவர்களின் ஒப்பற்ற தியாகத்தால் ஓங்கு புகழ் பெற்றிருக்கும் அதிமுக மக்களின் பேரியக்கமாக வரலாற்றில் நிலைபெறுமே தவிர, ஒரு குடும்பத்தின் அபிலாஷைகளுக்காக தன்னை ஒருபோதும் அழித்துக்கொள்ளாது என்பதை நினைவுபடுத்துகிறோம்.
அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு மாறாகவும், இயக்கத்தின் லட்சியங்களுக்கு விரோதமாகவும் செயல்படுபவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது தயவு தாட்சன்யமின்றி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, கடந்த 23.5.2021-ம் தேதியிட்ட அறிக்கையின் வாயிலாக தெரியப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடி, அதிமுகவின் வளர்ச்சிக்கும், புகழுக்கும்; இழுக்கும், பழியும் தேடியவர்கள் அனைவரையும் அதிமுகவில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும்; இனி அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருப்பினும் அவர்கள் அனைவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், கட்சியின் மூத்த முன்னோடிகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
அதிமுக வேட்பாளர்களுக்கும், அதிமுகவின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வாக்களித்து, 75 சட்டப்பேரவை உறுப்பினர்களை வெற்றிபெறச் செய்ததோடு, 234 தொகுதிகளிலும் தங்களின் பொன்னான வாக்குகளை வழங்கிய வாக்காளப் பெருமக்களுக்கு, சட்டப்பேரவை உறுப்பினர்களாகிய நாங்கள் அனைவரும் கரம்கூப்பி நன்றி கூறுகிறோம்.
கண்ணின் மணியென அதிமுகவைக் காப்போம். எம்ஜிஆர் கண்ட கனவை நினைவாக்குவோம்.
எனக்குப் பின்னாலும் நூறாண்டுகள் ஆனாலும் கழகம் மக்கள் தொண்டில் முன்னணியில் நின்று பணியாற்றும் என்ற ஜெயலலிதாவின் லட்சியத்தை நிறைவேற்றுவோம் என்று உளமார உறுதி ஏற்கிறோம்".
இவ்வாறு அத்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தீர்மானத்தை ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்மொழிந்துள்ளனர். அனைத்து அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களும் வழிமொழிந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago