புதுக்கோட்டை மாவட்டம், வடத்தெரு பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிக்கையை உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ஓபிஎஸ் இன்று (ஜூன் 14) வெளியிட்ட அறிக்கை:
"ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்ற திட்டங்கள் காரணமாக, பாலைவனமாக மாறிவரும் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கிய டெல்டா மாவட்டங்கள் சோலைவனமாக ஆக்கப்பட வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு, அதனை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கும் பொருட்டு, வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டம், புதிதாக ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணிகளை தடுக்கும் சட்டமாகும்.
இந்தச் சூழ்நிலையில், காவிரி வடிநிலப் பகுதிகளில் அமைந்துள்ள வடத்தெரு பகுதியில் புதிதாக ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பினை மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் 10-06-2021 அன்று வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு தமிழ்நாடு பாதுகாக்கப்பட வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டத்திற்கு எதிரானது.
» திருச்செந்தூர்- கல்லிடைக்குறிச்சி இடையே ரூ.637 கோடி செலவில் சாலை: அமைச்சர் தொடங்கிவைத்தார்
மேற்படி மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் இந்திய பிரதமருக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், காவிரி வடிநிலத்தில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணிகளுக்கு அனைத்துத் தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், தமிழக அரசும் இதனைத் தொடர்ந்து எதிர்ப்பதாகவும், இது விவசாயிகளையும் விவசாயத் தொழிலாளர்களையும் கடுமையாகப் பாதிக்கும் என்றும், இதுபோன்ற சூழ்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், வடத்தெரு பகுதியில் புதிதாக ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட்டிருப்பது தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டத்திற்கு எதிரானது என்றும் குறிப்பிட்டு, இது தொடர்பான அறிவிக்கையை உடனடியாக ரத்து செய்ய உத்தரவிடுமாறு இந்தியப் பிரதமரை வலியுறுத்தியுள்ளார். இதை அதிமுக வரவேற்கிறது.
அதேசமயத்தில், அந்தக் கடிதத்தில், எதிர்காலத்தில் தமிழகத்தில் எந்தப் பகுதியிலாவது ஹைட்ரோகார்பன் இருக்கிறதா என்பது குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டுமென்றாலோ அல்லது ஹைட்ரோகார்பன் எடுக்க வேண்டும் என்றாலோ, ஆரம்பத்திலேயே தமிழக அரசுடன் ஆலோசனை நடத்த மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டுமென்றும் பிரதமரை முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். இது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
இந்த வேண்டுகோள், தமிழக விவசாயிகளுக்கு குந்தகம் விளைவிக்கும் செயல் என்று நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஏனென்றால்,, டெல்டா மாவட்டங்களைப் பொறுத்தவரையில், இந்த வேண்டுகோள் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டத்திற்கு எதிரானது.
டெல்டா அல்லாத மாவட்டங்களைப் பொறுத்தவரையில், வம்பை விலை கொடுத்து வாங்கும் முயற்சி என்றே நான் கருதுகிறேன். தமிழகத்திற்கு, குறிப்பாக டெல்டா மாவட்டங்களுக்கு மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்கள் தேவையில்லை என்பதில் தமிழக அரசு உறுதியாக இல்லையோ என்ற அச்சத்தை பொதுமக்களிடையே, குறிப்பாக விவசாயிகளிடையே இந்த வேண்டுகோள் ஏற்படுத்தியுள்ளது என்பதைக் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.
மேலும், தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பே, இந்தச் சட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று, தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கு 10-0202020 அன்று கடிதம் எழுதப்பட்டது.
இதற்கு பதிலளிக்கும் வகையில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றங்கள் துறை அமைச்சர் தனது 19-02-2020 நாளிட்ட கடிதத்தில், 'ஒரு குறிப்பிட்ட திட்டத்தை ஒரு குறிப்பிட்ட பகுதியில் அனுமதிப்பது என்பது தொடர்ந்து மாநில அரசின் வரம்புக்குள்ளேயே இருக்கும்' என குறிப்பிட்டிருக்கிறார்.
இவையெல்லாம் 20-02-2020 ஆம் நாளிட்ட தமிழக சட்டபேரவை நடவடிக்கைக் குறிப்புகளில் இடம்பெற்றுள்ளன. மத்திய அமைச்சரின் இந்தக் கடிதத்தில் உள்ள அம்சங்களை தமிழக முதல்வர் இந்தியப் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடவில்லை.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றங்கள் துறை அமைச்சர் எழுதிய கடிதம், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சருக்கு தெரிவதற்கு வாய்ப்பில்லை என்பதால், இதனைக் குறிப்பிடுவது அவசியம் என கருதுகிறேன். இதனைக் குறிப்பிடுவது, தமிழகத்திற்கு வலு சேர்க்கக்கூடிய ஒன்று என்பது எனது கருத்தாகும்.
எனவே, முதல்வர் வருகின்ற 17-ம் தேதியன்று பிரதமரை நேரில் சந்திக்கும்போது, விவசாயிகள் நலன் காக்கும் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டத்தில் உள்ள கூறுகள் குறித்தும், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றங்கள் துறை அமைச்சரின் கடிதம் குறித்தும், சட்டப்படி தமிழக அரசுக்கு உள்ள அதிகாரம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்து, புதிதாக புதுக்கோட்டை மாவட்டம், வடத்தெரு பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிக்கையை உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்".
இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
33 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago