பெட்ரோல், டீசலுக்கான மாநில அரசின் வரியைக் குறைத்து வாக்குறுதியை நிறைவேற்றுக: தமிழக அரசுக்கு தினகரன் வலியுறுத்தல்

பெட்ரோல், டீசலுக்கான மாநில அரசின் வரியைக் குறைப்போம் என்று தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றிட வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் கரோனா பரவல் 2-ம் அலை காணப்படுகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொருளாதார நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பெட்ரோல், டீசல் விற்பனையும் தொடர்ந்து சரிந்து வருகிறது.

இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கரோனா ஊரடங்கால் பெட்ரோலியப் பொருட்களின் தேவை குறைந்துள்ளதால், அவற்றின் விலையை, உற்பத்தி செய்யும் நாடுகள் உயர்த்தி வருகின்றன.

இந்தியாவில் இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தற்போது பெட்ரோல், டீசல் விலையை விலையை உயர்த்தி வருகின்றன.

மே மாதம் இரண்டாவது வாரத்தில் பெட்ரால் - டீசல் விலை உச்சம் தொட்டது. பின்னர் சற்று குறைந்தது. இந்தநிலையில், பெட்ரோல் - டீசல் விலை மீண்டும் உச்சம் தொட்டு வருகிறது.

தமிழகத்தில் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டியுள்ளது. இந்நிலையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும் என, திமுக தன் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டதை நிறைவேற்ற வேண்டும் என, ஏற்கெனவே அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (ஜூன் 14) தன் ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பெட்ரோல், டீசல் விலை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் இப்படி உயர்ந்துகொண்டே செல்வதால், விலைவாசியும் உயர்ந்தபடியே இருக்கிறது.

'பெட்ரோல், டீசலுக்கான மாநில அரசின் வரியைக் குறைப்போம்' என்று தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE