கரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது; விதிமுறைகளைப் பின்பற்றி நடந்துகொண்ட மக்களுக்கு நன்றி: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

By செய்திப்பிரிவு

''கரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஒத்துழைத்த மக்களுக்கு நன்றி. கரோனா காலக் கட்டுப்பாடுகள் மீறப்படுமானால் எந்த நேரத்திலும் இந்தத் தளர்வுகள் திரும்பப் பெறப்படும் என்பதை எச்சரிக்கையாகவே சொல்லிக்கொள்கிறேன். கட்டுப்பாட்டை மீறுகிறவர்கள் தங்களுக்கு மட்டுமல்ல இந்த நாட்டுக்கும் தீமை செய்பவர்கள் என்பதை உணர வேண்டும்'' என முதல்வர் ஸ்டாலின் எச்சரித்தார்.

அரசு அறிவித்துள்ள கரோனா கால ஊரடங்கு தளர்வு வழிமுறைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து தொலைக்காட்சியில் ஆற்றிய உரை:

“தமிழக மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்.

உங்கள் நலன் காக்கும் இந்த அரசு தொடர்ச்சியாக மேற்கொண்ட நடவடிக்கைகளால் கரோனா என்ற பெருந்தொற்று ஒரளவு கட்டுக்குள் வந்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் 36,000 ஆக இருந்தார்கள். இது 50,000 ஆகும் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால், அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் பாதிப்பு எண்ணிக்கை 15,000-க்கும் கீழ் குறைந்துகொண்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிக விரைவாக குறைந்துகொண்டே வருகிறது.

மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை, ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் காலியாக இல்லை என்பது மாதிரியான நிலைமை இப்போது இல்லை. கட்டளை மையம் என்ற வார் ரூமுக்கு உதவிகள் கேட்டு வருகின்ற தொலைபேசி அழைப்புகளும் குறைந்துவிட்டன. தேவைப்படுபவர்களுக்கு உடனடியாக சிகிச்சை கிடைக்கக்கூடிய நிலைமையை உங்களுக்கான இந்த அரசு உருவாக்கி இருக்கிறது.

தமிழ்நாடு அரசு பல்வேறு முனைகளில் எடுத்த முயற்சிகளின் காரணமாகத்தான் இரண்டு வார காலத்தில் அனைத்தும் கட்டுக்குள் வந்திருக்கிறது. ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவுகிற சங்கிலியை முதலில் உடைத்தாக வேண்டும். அதற்காகத்தான் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கை அறிவித்தோம்.

ஊரடங்கு கட்டுப்பாட்டை மக்கள் முறையாகவும், முழுமையாகவும் கடைப்பிடித்ததால்தான், இந்த அளவிற்குக் கரோனா பரவல் கட்டுக்குள் வந்திருக்கிறது. எனவே, விதிமுறைகளைப் பின்பற்றி நடந்துகொண்ட நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஊரடங்கை இன்னும் ஒருவார காலத்திற்கு நீட்டித்து அறிவியுங்கள் என்று பொதுமக்களிடமிருந்தே கோரிக்கை வந்தது. அரசும் மக்களும் ஒரே மாதிரியாக சிந்திப்பது மட்டுமல்ல, மக்களுடைய எண்ணங்களைத்தான் அரசு செயல்படுத்தி வருகிறது என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் தேவையில்லை. என்னதான் அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்தாலும், அதை மக்கள் பின்பற்றினால்தான் முழு வெற்றி சாத்தியம் ஆகும். விதிகளை மக்கள் பின்பற்றுவதால்தான் தொற்றுப் பரவல் குறைந்தது. அதேபோன்ற எச்சரிக்கை உணர்வோடு மக்கள் தொடர்ந்து இருக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கரோனா கட்டுக்குள் வந்துவிட்டது என்றுதான் சொன்னேனே தவிர, முழுமையாக அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது என்று சொல்லவில்லை. மக்கள் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அரசாங்கம் எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அரசும், மக்களுடைய நெருக்கடியை உணர்ந்திருக்கின்ற காரணத்தினால்தான் கரோனா தொற்று குறைந்து வரும் மாவட்டங்களில் சில தளர்வுகளைக் கொடுத்திருக்கிறோம். சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறோம்.

பொதுமக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதிலும் அரசு கண்ணும் கருத்துமாக இருக்கிறது. கரோனாவும் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படக் கூடாது என்ற இரண்டையும் கவனத்தில் கொண்டு அரசு கட்டுப்பாடுகளைச் செயல்படுத்தியாக வேண்டியிருக்கிறது. அதற்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டிய கடமை மக்களாகிய உங்களுக்கு இருக்கிறது.

இந்தத் தளர்வுகளுக்கான உண்மையான நோக்கத்தை உணர்ந்து, மக்கள் செயல்பட வேண்டும். தளர்வுகள் கொடுத்துவிட்டார்கள் என்று அவசியம் இல்லாமல் வெளியில் நடமாடக் கூடாது. தங்களுக்குத் தாங்களே ஒவ்வொருவரும் சுயகட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். நமக்கு நாமேதான் முதன்மையான பாதுகாப்பு. வர்த்தகர்கள் விதிமுறைகளைப் பின்பற்றி தங்களது வணிகத்தைச் செய்ய வேண்டும்.

தளர்வுகள் தருவது முக்கியமானது அல்ல. அந்தத் தளர்வுகளுக்கான விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றியாக வேண்டும். தேநீர்க் கடைகளில் கூட்டம் கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும். தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தாக வேண்டும். முடிதிருத்தும் நிலையங்களிலும் கட்டுப்பாடுகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும். பல்வேறு விமர்சனங்கள் வரும் என்கிற நிலையிலும் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. போலி மது, கள்ள மது போன்ற தீமைகள் தமிழ்நாட்டைச் சீரழித்துவிடக்கூடாது என்பதில் இந்த அரசு கவனமாக இருக்கிறது. டாஸ்மாக் கடைகள் முழுமையான கட்டுப்பாடுகளைப் பின்பற்றி இயங்கும்.

கரோனா காலக் கட்டுப்பாடுகள் மீறப்படுமானால் எந்த நேரத்திலும் இந்தத் தளர்வுகள் திரும்பப் பெறப்படும் என்பதை எச்சரிக்கையாகவே சொல்லிக்கொள்கிறேன். கட்டுப்பாட்டை மீறுகிறவர்கள் தங்களுக்கு மட்டுமல்ல இந்த நாட்டுக்கும் தீமை செய்பவர்கள் என்பதை உணர வேண்டும். காவல்துறை கண்காணிப்பு இல்லாமலேயே கட்டுப்பாட்டோடு நடந்துகொள்கிற மக்களாக நம் தமிழக மக்கள் மாறவேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்.

அந்த விருப்பத்தை நம் மக்கள் நிச்சயமாக நிறைவேற்றுவார்கள் என்கிற நம்பிக்கையும் எனக்கு நிரம்ப இருக்கிறது. முழு ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளி வைப்பதுபோல நீங்கள் நடந்துகொள்ள வேண்டும். பொதுப் போக்குவரத்து சேவை விரைவில் இயங்க வேண்டும். பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும். இப்படி ஒவ்வொன்றாகச் செயல்படுத்த வேண்டும் என்றால், அதற்கு மக்கள் துணை அவசியம். தொற்றுப் பரவலைத் தகர்க்கும் வல்லமை தமிழ்நாட்டு மக்களுக்கு உண்டு. மக்கள் சக்தியே உயர்ந்தது என்பதை விரைவில் நிரூபிப்போம்”.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்