திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ தேவைக்குப்போக உபரி ஆக்சிஜன் கையிருப்பு: செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்

By செய்திப்பிரிவு

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேவையை தாண்டி உபரி ஆக்சிஜன் கையிருப்பு வைக்கக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளதாக, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.

இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ), யங் இந்தியன்ஸ் (ஒய்ஐ) ஆகியவை சார்பில், திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டி நிலையம் நேற்று தொடங்கிவைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தலைமை வகித்தார். அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் (செய்தித் துறை), கயல்விழி செல்வராஜ் (ஆதிதிராவிடர் நலத்துறை) ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

பின்னர் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:

திருப்பூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியார் பங்களிப்புடன் ரூ.70 லட்சம் மதிப்பில் ஒரு நிமிடத்தில் 350 கிலோ லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட ஆக்சிஜன் செறிவூட்டி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கெனவே, 6 ஆயிரம்லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவஆக்சிஜன் தொட்டி பயன்பாட்டில் உள்ளது. ஆக்சிஜன் பயன்பாட்டை பொறுத்தவரை, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய தேவையை தாண்டி, உபரி ஆக்சிஜன் கையிருப்பு வைக்கக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை தற்போது 800 என்ற அளவில் இருந்து வருகிறது.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியார் பங்களிப்புடன் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 110 படுக்கைகள் கொண்டசிகிச்சை மையத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். இதனால்,அரசு மருத்துவமனையில் படுக்கை பற்றாக்குறை இருந்த நிலை மாறி, தற்போது தேவையான அளவு உள்ளது. ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 317 படுக்கைகளில் நோயாளிகள் சிகிச்சையிலும், 193 படுக்கைகள் காலியாகவும் உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

சிகிச்சை மையம்

முன்னதாக, திருப்பூர் தெற்கு வட்டத்துக்கு உட்பட்ட பல்லவராயன்பாளையம் ராம் சந்திரா மிஷன் வைர விழா பூங்கா வளாகத்தில் இயற்கை சூழலில் அமைக்கப்பட்ட 200 படுக்கைகள் வசதி கொண்ட கரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர். திருப்பூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர்க.செல்வராஜ், கோட்டாட்சியர்ஜெகநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE