நீலகிரியில் கோமாரி நோய் தாக்கி உயிரிழக்கும் மாடுகள்; ஓராண்டாகத் தடுப்பூசி போடப்படாததால் விவசாயிகள் கவலை

By ஆர்.டி.சிவசங்கர்

நீலகிரி மாவட்டத்தில் போதிய கால்நடை மருத்துவர்கள் இல்லாததாலும் ஓராண்டாகத் தடுப்பூசி போடப்படாததாலும் கோமாரி நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழந்து வருகின்றன. இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் பிரதானத் தொழில் தேயிலை மற்றும் காய்கறி விவசாயம். விவசாயத்தைச் சார்ந்து கால்நடைகளையும் வளர்த்து விவசாயிகள் வருவாய் ஈட்டி வருகின்றனர். கிராமப்புறங்களின் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழ்நாடு அரசு, விவசாயிகளுக்கு இலவசமாகக் கறவை மாடுகளை வழங்கியுள்ளது. இதனால், விவசாயிகள் பால் வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கால்நடைகளை நோய்களில் இருந்து பாதுகாக்க அரசு மூலம் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ஆண்டுதோறும் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இருமுறை கோமாரி நோய்த் தடுப்புக்காக, தடுப்பூசி போடப்பட்டு வந்தது.

இந்நிலையில் கரோனா காரணமாக, ஓராண்டுக்கும் மேலாக கால்நடைகளுக்குத் தடுப்பூசி போடப்படவில்லை. இதனால், மாடுகளுக்குக் கோமாரி நோய் அதிகரித்து வருகிறது.

உதகை, குன்னூர், கோத்தகிரி சுற்று வட்டாரப்பகுதிகளில் கக்குச்சி, தொட்டண்ணி, திருச்சிக்கடி, அஜ்ஜூர், ஒன்னதலை உட்பட பல கிராமங்களில் கறவை மாடுகளைக் கோமாரி நோய் தாக்கியுள்ளது.

இதுகுறித்துக் கோத்தகிரி அருகே கக்குச்சி ஊராட்சிக்கு உட்பட்ட தொட்டண்ணி கிராமத்தைச் சேர்ந்த மாடு வளர்க்கும் விவசாயி அர்ஜூணன் கூறும்போது, ‘கடந்த ஒரு மாத காலமாக மாடுகளைக் கோமாரி நோய் தாக்கி வருகிறது. இதனால், மாடுகளின் கால்கள், வாய், மூக்குப் பகுதிகளில் கொப்புளங்களும், வாயிலிருந்து நுரையாக உமிழ் நீரும் வெளியேறுகிறது. புண்களால் மாடுகள் புல் மேய்வதில்லை, தண்ணீர் குடிப்பதில்லை. இதனால், உடல்நலன் குன்றி மாடுகள் மெலிந்துள்ளன. நோய்த் தாக்குதல் காரணமாக பால் கறக்க முடிவதில்லை. கன்றுக்குக் கூடப் பால் கொடுக்க முடிவதில்லை. ஒரு மாடு நாள்தோறும் சுமார் 10 லிட்டர் பால் கறக்கும் நிலையில், 10 மாடுகள் மூலம் 100 லிட்டர் பால் கறக்க முடியும். இந்த பால் சங்கம் மூலம் கொள்முதல் செய்யப்படும். இந்நிலையில், நோய்த் தாக்குதல் காரணமாக பாலைக் கறக்க முடியாமல் எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது’ என்று தெரிவித்தார்.

ஊர் பிரமுகர் செல்வமணி கூறும்போது, ‘உதகை, கூடலூர் என இரு வட்டாரங்களில், 28 கிராமங்களில் கால்நடை பரிசோதனை மையங்கள் உள்ளன. ஆனால், போதுமான அளவில் கால்நடை மருத்துவர்கள் இல்லை. இதனால் பல மையங்களில் சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஓராண்டாக கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படவில்லை.

இப்பகுதியில் உள்ள பசு மாடுகளுக்குக் கோமாரி நோய் தாக்கியுள்ளதால் பால் சுரப்பதில்லை. கால்நடைகள் மிகவும் சோர்ந்து உயிரிழக்கும் நிலையில் உள்ளன. இதனால், தனியார் மருத்துவர்களை அழைத்து வந்து மருத்துவம் செய்கிறோம். இதற்குத் தினமும் ரூ.1000 வரை செலவாகிறது. இதுபற்றி மாவட்ட நிர்வாகத்துக்குப் புகார் கொடுக்கப்பட்டுப் பல நாட்களாகியும் தீர்வு கிடைக்கவில்லை’ என்று தெரிவித்தார்.

இதுகுறித்துக் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் பகவத்சிங்கிடம் கேட்டபோது, ‘நீலகிரி மாவட்டத்தில் கால்நடைகளைக் கோமாரி தாக்கி வருகிறது. கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போடப்படவில்லை. ஆனால், கால்நடைகள் உயிரிழக்கும் நிலையில் இல்லை.

தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்ய டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. டெண்டர் முடிந்தது, தடுப்பூசி கிடைத்ததும் கால்நடைகளுக்குத் தடுப்பூசி போடப்படும். மாவட்டத்தில் 50 சதவீதக் கால்நடை மருத்துவர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒரு மருத்துவர் இரு மையங்களைக் கவனிக்க வேண்டியுள்ளது’ என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்