தனியார் பார்களைத் திறக்க அரசு முடிவா?- சட்டம்-ஒழுங்கு பிரச்சினை அதிகரிக்கும்: அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு

By செய்திப்பிரிவு

விடுதிகளுடன் இணைக்கப்படாத தனியார் பார்கள் இணைக்கப்பட்டால் அவை இப்போது மதுக்கடைகளுடன் இணைத்து நடத்தப்படும் பார்களை விட மிகவும் மோசமாகத்தான் இருக்கும். அவை பெரும்பாலும் குடியிருப்புப் பகுதிகளில்தான் அமைக்கப்படும் என்பதால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் நிம்மதியாக நடமாட முடியாத சூழல் உருவாகும் என அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:

“தமிழக அரசின் வருவாயைப் பெருக்குவதற்காக தமிழ்நாடு முழுவதும் தனியார் பார்களை அதிக எண்ணிக்கையில் திறக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும், அதுகுறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. வருவாயை மட்டுமே நோக்கமாகக் கொண்டு மக்கள் நலனுக்கு எதிராக அரசு செயல்பட முனைவது கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழ்நாட்டில் கடைசியாக வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி 5,198 மதுக்கடைகள் உள்ளன. அவற்றில் 2,050 மதுக்கடைகளுடன் பார்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதிகாரபூர்வமாக 2,050 குடிப்பகங்கள் இருப்பதாகக் கூறப்பட்டாலும் கூட, அனைத்து மதுக்கடைகளிலும் அதிகாரபூர்வமற்ற வகையில் பார்கள் செயல்பட்டு வருகின்றன. இத்தகைய குடிப்பகங்கள் பொதுவாக ஆளுங்கட்சி புள்ளிகளால் நடத்தப்பட்டு வருகின்றன என்பது ஊரறிந்த ரகசியமாகும்.

இத்தகைய சூழலில்தான் மதுக்கடைகளுடன் இணைக்கப்பட்ட பார்களை மூடிவிட்டு, வேறு இடங்களில் தனியார் மூலம் பார்களைத் திறக்க அரசு திட்டமிட்டிருப்பதாக டாஸ்மாக் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசுக்குக் கூடுதல் வருமானத்தை ஈட்டும் நோக்கத்துடன் இத்தகைய திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பார்களைத் திறக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருப்பது உண்மை என்றால் அது மிகவும் ஆபத்தானதாகும். தமிழ்நாட்டில் ஏழைக் குடும்பங்களின் வீழ்ச்சிக்கும், பல்லாயிரக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தரப் பெண்கள் கணவர்களை இழந்து கைம்பெண்களாக வாடுவதற்கும் முதன்மைக் காரணமாக இருப்பது மதுக்கடைகள்தான்.

இந்தத் தீமைக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காகத்தான் தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கடந்த 40 ஆண்டுகளாக ராமதாஸ் போராடி வருகிறார். பாமக மேற்கொண்ட சட்டப் போராட்டம் மற்றும் அரசியல் போராட்டங்களால் தமிழ்நாட்டில் 4,000-க்கும் கூடுதலான மதுக்கடைகள் மூடப்பட்டது வரலாறு ஆகும்.

தமிழகத்தில் மதுவிலக்கை வலியுறுத்தி பாமக மேற்கொண்ட தொடர் போராட்டங்கள் காரணமாக மதுவுக்கு எதிராகப் பெரும் எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. அந்த எழுச்சி காரணமாகத்தான் தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளுக்கு முன் மதுவிலக்கை ரத்து செய்த கட்சியான திமுக, கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் முழு மதுவிலக்கை ஏற்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்தது.

அப்போது மதுவிலக்குக்கு ஆதரவாக வாக்குறுதி அளித்த திமுக, இப்போது கூடுதலாக தனியார் பார்களைத் திறக்க முயன்றால் அது மன்னிக்க முடியாத குற்றம் ஆகும். அதை பாமகவும், தமிழக மக்களும் அனுமதிக்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் தனியார் பார்களைத் திறக்க உரிமம் வழங்குவது தேவையற்ற சட்டம் & ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும். தமிழ்நாட்டில் இதுவரை நட்சத்திர விடுதிகளில் மட்டும்தான் பார்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

இப்போது விடுதிகளுடன் இணைக்கப்படாத தனியார் பார்கள் இணைக்கப்பட்டால் அவை இப்போது மதுக்கடைகளுடன் இணைத்து நடத்தப்படும் பார்களை விட மிகவும் மோசமாகத்தான் இருக்கும். அவை பெரும்பாலும் குடியிருப்புப் பகுதிகளில்தான் அமைக்கப்படும் என்பதால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் நிம்மதியாக நடமாட முடியாத சூழல் உருவாகும்.

தனியார் பார்கள் அமைக்கப்பட்ட பின்னர் மதுக்கடைகளில் உள்ள பார்கள் மூடப்படும் என்று கூறப்பட்டாலும் அது சாத்தியமற்றதாகும். மதுக்கடைகள் இருக்கும் வரை அங்கு ஆளுங்கட்சியினர் சட்டவிரோதமாக மதுக்கடைகளை நடத்துவதைத் தடுப்பது என்பது இயலாத ஒன்றாகும். அதனால், ஒருபுறம் தனியார் பார்கள், இன்னொரு புறம் மதுக்கடைகளில் தொடரும் சட்டவிரோத பார்கள் எனத் திரும்பும் திசைகள் எல்லாம் குடிமகன்களின் தொல்லை தலைவிரித்தாடும். இது தவிர்க்கப்பட வேண்டும்.

இவை அனைத்தையும்விட, ஓர் அரசின் வருமானத்திற்காக மதுக்கடைகளையும், பார்களையும் திறப்பது ஏற்றுக்கொள்ளவே முடியாததாகும். மது வணிகத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் தொழு நோயாளியின் கைகளில் உள்ள வெண்ணெய்க்கு ஒப்பானது என்று கூறி தமிழ்நாட்டில் மது விற்பனையை அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்தவர் அண்ணா.

அவரால் உருவாக்கப்பட்ட கட்சியின் ஆட்சியில் தனியார் பார்கள் அனுமதிக்கப்பட்டால் அதை அண்ணாவின் ஆன்மா மன்னிக்காது. இதை உணர்ந்து தமிழ்நாட்டில் தனியார் பார்களைத் திறக்கும் திட்டத்தை திமுக அரசு கைவிட வேண்டும். அதுமட்டுமின்றி ஏற்கெனவே அளித்த வாக்குறுதியின்படி தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவும், மது ஆலைகளை மூடவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்”.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்