பேரிடர்க் காலத்தில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் உணவு, தங்கும் விடுதி செலவு முறைப்படுத்தப்பட்டதால் தினசரி ரூ.30 லட்சம் மிச்சமாகிறது. இந்த நடவடிக்கை ஆரம்பக் கட்டம்தான். கரோனா பேரிடர் முடிவுக்கு வரும் நிலையில் இதுகுறித்து துறை ரீதியாக முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்த அரசின் இன்றைய செய்திக்குறிப்பு:
“கரோனா பேரிடர்க் காலத்தில் தங்கள் இன்னுயிரைத் துச்சமென மதித்து மக்கள் சேவைபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்குத் தரமான உணவு மற்றும் பிரசித்தி பெற்ற உயர்தர விடுதிகளில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் களையப்பட்டு சரியான முறையில் நடைமுறைப்படுத்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கரோனா பேரிடரில் ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, எழும்பூர் கண் மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, அரசு புறநகர் மருத்துவமனைகள், அரசு கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனை, கிண்டி கிங் வளாகத்தில் உள்ள கரோனா சிறப்பு மருத்துவமனை, இஎஸ்ஐ அயனாவரம், கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருக்கிற மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு அத்தியாவசியத் தேவைகளான இருப்பிட வசதியும், மூன்று வேளை தரமான உணவும் சரியாக வழங்கப்படவில்லை என்று, முதல்வருக்கும், சுகாதாரத்துறை அமைச்சருக்கும் புகார்கள் அளிக்கப்பட்டன.
» இலங்கையின் சீனச் சார்பு நிலை; அமெரிக்க நாடாளுமன்றத் தீர்மானம்: பிரதமருக்கு வைகோ கடிதம்
» கட்டுப்பாடு இல்லா ஊரடங்கு; கரோனா பரவ சிவப்புக் கம்பளம் விரிக்கக் கூடாது: ராமதாஸ் எச்சரிக்கை
இதன்பேரில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு உயர்தர தங்கும் விடுதிகளில் தங்குமிட வசதியும், தரமான உணவும் வழங்கிட முதல்வர் உத்தரவின்படி, அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடவடிக்கையின்படி, மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஆகியோர் தங்குவதற்கு உயர்தர தங்கும் விடுதிகள் தேர்வு செய்யப்பட வேண்டுமென்றும், அதில் அவர்களைத் தங்கவைக்க வேண்டுமென்றும், சென்னையில் உள்ள தரம் மற்றும் பிரசித்தி பெற்ற உணவகங்களிருந்து அவர்களுக்கு உணவு வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்குக் கடந்த அதிமுக ஆட்சியில் ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு சாதாரண உணவகங்களிலிருந்து உணவுக்கென்று ரூ.600/- முதல் ரூ.550/- வரை விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 21-5-2021-க்குப் பிறகு அடையாறு ஆனந்த பவன், நம்ம வீட்டு வசந்தபவன், சரவண பவன், சங்கீதா போன்ற உயர்தர சைவ உணவகங்களிலிருந்தும், வசந்த பவன்-குரு மெஸ், நந்தனாஸ் ஆகிய அசைவ உணவகங்களிலிருந்தும் தரம் உயர்ந்த புரதச் சத்து மிகுந்த சைவ மற்றும் அசைவ உணவுகள் ரூ.450க்கு சென்னையில் வழங்கப்படுகிறது. அதுபோல் தமிழ்நாடு முழுவதும் ரூ.375/- ரூ.350/- என்று மாவட்டத்திற்கேற்ப விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
செவிலியர்கள் தங்கும் வசதி கடந்த அதிமுக ஆட்சியில் சாதாரண விடுதியில் தங்குவதற்கு ரூ.900/- என விலை இருந்தது. இந்நிலையில் 21-5-2021-க்கு பிறகு விஜய் பார்க், வெஸ்ட்டின் பார்க், சபரி இன், பிரியதர்ஷினி பார்க், சென்னை கேட்வே, அருணாச்சல ரெசிடன்சி போன்ற உயர்தர தங்கும் விடுதிகளில் தங்க வைக்கப்படுகின்றனர். ஆனாலும் அதற்குரிய ஒரு நாள் தொகை ரூ.900/-த்திலிருந்து ரூ.750/- எனக் குறைக்கப்பட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கரோனா பேரிடரில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் தங்கும் விடுதி ஆகியவற்றிற்கு ஆகும் செலவிலிருந்து எந்தவித இடையூறும், கையூட்டும் இல்லாமல் பயனாளர்கள் முழுமையான பயனை அடையவும், அதே வேளையில் அதற்காக ஒதுக்கப்பட்ட தொகை குறைக்கப்பட்டுள்ளதால் ஒரு நாளைக்கு அரசுக்கு ஏற்படும் செலவீனம் ஏறத்தாழ ரூபாய் 30 லட்சம் தமிழ்நாடு முழுவதும் மிச்சப்படுத்தப்படுகிறது.
பேரிடர்க் காலத்தில் சேவை மனப்பான்மையுடன் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் கோரிக்கைகள் முழுவதுமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை ஆரம்பக் கட்டம்தான். கரோனா பேரிடர் முடிவுக்கு வரும் நிலையில் இதுகுறித்து துறை ரீதியாக முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்”.
இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago