தஞ்சாவூர் அருகே பார்வைக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி ஒருவர், தன் மகனைக் கல்லூரியில் சேர்க்கத் தேவைப்படும் பணத்துக்காக வளர்த்து வந்த இரண்டு கன்றுக் குட்டிகளை விற்று, அந்தப் பணத்தை இன்று மாவட்ட ஆட்சியரிடம் கரோனா நிவாரண நிதியாக வழங்கினார்.
தஞ்சாவூர் அருகே ஆழிவாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் கா.ரவிச்சந்திரன் (52). பார்வைக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளியான இவர் சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர். இவரது மனைவி மகேஷ்வரி (42). இவர்களுக்குக் கல்லூரியில் படிக்கும் பிரசாந்த் (20), பிளஸ் 2 முடித்துள்ள சஞ்சய் (17) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
ரவிச்சந்திரன் 100 நாள் வேலை செய்து வருகிறார். அதில் வரக்கூடிய சம்பளம், மாற்றுத்திறனாளிக்கான மாதந்தோறும் கிடைக்கும் உதவித்தொகை ரூ.1,000 இந்த சொற்ப வருமானமே அவரது குடும்பத்துக்கான ஆதாரம். கண் பார்வைக் குறைபாடு ஒரு பக்கம், போதிய வருமானம் இல்லாத நெருக்கடி மறுபக்கம் எனத் தன்னையும், தன் குடும்பத்தையும் கடும் பொருளாதார நெருக்கடி சூழ்ந்திருக்கும் போதிலும், தன்னைப் போல் கஷ்டப்படும் மற்றவர்களுக்குத் தன்னால் முடிந்த உதவிகளையும், அரசு சார்பில் கிடைக்கக்கூடிய உதவிகளையும் பெற்றுக்கொடுத்து வறியவர்களின் வழிகாட்டியாகவே ரவிச்சந்திரன் வாழ்ந்து வருகிறார்.
தன் கண்முன்னே நடக்கும் அவலங்களைத் தட்டிக்கேட்கத் துளியும் தயங்காதவர் ரவிச்சந்திரன். கிராமத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த நீர்நிலைகளை மீட்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குத் தொடர்ச்சியாக மனுக்கள் கொடுத்து முயற்சி மேற்கொண்டதன் விளைவாக அப்பகுதியில் இரண்டு ஏரிகள் மீட்கப்பட்டதுடன், தூர் வாரப்பட்டுப் பயன்பாட்டுக்கும் வந்துள்ளன.
இதற்கிடையே தன் இளைய மகனைக் கல்லூரியில் சேர்க்க, சிறுகச் சிறுகச் சேமித்த பணத்தில் இரண்டு கன்றுக் குட்டிகளை வாங்கி வளர்த்து வந்துள்ளார். மகன் சஞ்சயைக் கல்லூரியில் சேர்க்கும்போது பணம் இல்லாமல் அவனது படிப்பு தடைப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, கன்றுக் குட்டிகளை விற்று அந்தப் பணத்தின் மூலம் மகனைக் கல்லூரியில் சேர்த்துவிடலாம் என்ற முன்னேற்பாடாகவே ரவிச்சந்திரன் இதனைச் செய்துள்ளார்.
இச்சூழலில் கரோனா நிவாரண நிதிக்குப் பொதுமக்கள் நிதி வழங்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளின்படி, ரவிச்சந்திரனும் நிவாரண நிதி வழங்க முடிவு செய்தார். இதற்காகச் சிறிதும் யோசிக்காமல் மகனின் படிப்புச் செலவுக்காக வாங்கிய இரண்டு கன்றுக் குட்டிகளையும் விற்றுக் கிடைத்த பணம் ரூ.6 ஆயிரத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவிடம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வழங்கினார். நிதியைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், ரவிச்சந்திரனின் செயலை வெகுவாகப் பாராட்டினார்.
இதுகுறித்து ரவிச்சந்திரன் கூறியதாவது:
’’நான் பிஎஸ்சி, பிஎட் படிச்சிட்டு தனியார் பள்ளில ஆசிரியராக வேலை பார்த்துட்டு இருந்தேன். எல்லாம் நல்லா போய்க்கிட்டிருந்த நேரம் அது. இருபது வருஷத்துக்கு முன்னாடி திடீர்னு கண் பார்வையில கோளாறு ஏற்பட்டு கொஞ்சம், கொஞ்சமா பார்வை சுத்தமா மங்கிப் போயிருச்சு. கண் தெரியாததால் ஆசிரியர் வேலையை விட வேண்டியதாப் போச்சு.
அதுக்கப்புறம் என்னோட சேர்ந்து மனைவி, பிள்ளைகள் பட்ட கஷ்டத்தை வார்த்தைகளால் சொல்லவே முடியாது. பகல் நேரத்துலகூட வெளியே போகணும்னா யாருடைய உதவியும் இல்லாம போக முடியாது, நைட்ல நிலைமை இன்னும் மோசம்.
இருந்தாலும், சமுதாயப் பணிகள்ல கவனம் செலுத்தினேன். என்னை மாதிரி மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கிடைக்காம தவிச்ச 20 பேருக்கு அரசு உதவித்தொகை வாங்கித் கொடுத்தேன். மனநலம் சரியில்லாத 3 பேருக்கு மாசாமாசம் கிடைக்கும் பராமரிப்புத் தொகை ரூ.1,500 வாங்கித் கொடுத்தேன்.
50-க்கும் மேற்பட்ட வயசானவங்களுக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்கவும் காரணமா இருந்திருக்கேன். விழி இல்லாத நிலையிலும் பலருக்கு வழிகாட்டியாக இருக்கேன்னு பிறர் சொல்லுவாங்க. அதனால குறைகள் மறந்து மனசுக்கு நிறைவா இருக்கு. கரோனா நிவாரண நிதிக்கு என்னால முடிஞ்சத செய்ய நினைச்சேன், கையில பணம் இல்ல. உடனே என் மகனைக் கல்லூரியில் சேர்க்க வளர்த்துன கன்றுக் குட்டிகள வித்துட்டேன். அதுல கிடைச்ச ரூ.6,000 பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்குக் கொடுத்துட்டேன்’’.
இவ்வாறு ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago