7 ஆண்டுகளில் 459% உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை; ஜூன் 11-ல் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

கடந்த 7 ஆண்டு பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி மூலம் 459 சதவிகிதம் உயர்த்தப்பட்டு, ரூ.20 லட்சம் கோடி வருவாயை மத்திய அரசு பெருக்கிக் கொண்டிருக்கிறது. இந்த வருவாய் பெருக்கத்தின் காரணமாக மக்கள் மீது கடுமையான சுமை ஏற்றப்பட்டிருப்பதாகக் கண்டனம் தெரிவித்து ஜூன் 11 அன்று காங்கிரஸ் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளது.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று விடுத்துள்ள அறிக்கை:

“கரோனா பேரிடர் காலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக ஏறி வருகிறது. கரோனாவின் இரண்டாவது அலையில் சிக்கி மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு எரிபொருட்கள் விலை ஏற்றப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐத் தாண்டிவிட்டது. இதனால் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 13 மாதங்களில் பெட்ரோல் விலை ரூ.25.72 ஆகவும், டீசல் விலை ரூ.23.93 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.96.23 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் விலை ரூ.90.38 ஆகவும் உயர்ந்துள்ளது. இதில், மத்திய- மாநில அரசுகளின் வரி ஒரு லிட்டர் பெட்ரோலில் 58 சதவிகிதமாகவும், ஒரு லிட்டர் டீசலில் 52 சதவிகிதமாகவும் உள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 43 முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மக்களிடம் அத்துமீறி மத்திய அரசு கொள்ளை அடிப்பதற்கு இதுவே உதாரணமாகும்.

கரோனா தொற்றினால் வேலையிழந்து, வருமானத்தைத் துறந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மக்கள் கடுமையான துன்பத்தை எதிர்கொண்டிருக்கிறபோது, ஈவு இரக்கமற்ற முறையில் பாஜக அரசு பெட்ரோல், டீசல் விலையைக் கடுமையாக உயர்த்தியிருக்கிறது. 2014-ல் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.9.48 ஆக இருந்த கலால் வரியை, 2021-ல் ரூ.32.90 ஆக உயர்த்தியதே இந்த விலை உயர்வுக்குக் காரணம்.

அதேபோல, ஒரு லிட்டர் டீசலில் ரூ.3.56-ல் இருந்து ரூ.31.80 ஆக கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், மத்திய பாஜக அரசு பெட்ரோல், டீசலில் 2020-21இல் ரூபாய் 3 லட்சத்து 60 ஆயிரம் கோடியை கலால் வரியாக விதித்து கஜானாவை நிரப்பிக் கொண்டுள்ளது. செஸ் வரியாக ரூபாய் 90 ஆயிரத்து 252 கோடியை ஒரே ஆண்டில் வசூலித்துள்ளது. இதில் மாநிலங்களுக்கு பங்கு வழங்கப்படுவதில்லை.

கடந்த 7 ஆண்டு பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி மூலம் 459 சதவிகிதம் உயர்த்தப்பட்டு, ரூ.20 லட்சம் கோடி வருவாயை மத்திய அரசு பெருக்கிக் கொண்டிருக்கிறது. இந்த வருவாய் பெருக்கத்தின் காரணமாக மக்கள் மீது கடுமையான சுமை ஏற்றப்பட்டிருக்கிறது.

அதேபோல, 2014-ல் 410 ஆக இருந்து சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தற்போது ரூ.819 ஆக இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் 24 கோடிக்கும் மேற்பட்ட சமையல் எரிவாயு பயன்படுத்துவோர், குறிப்பாக தாய்மார்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மக்களிடம் கொள்ளையடிப்பதை எதிர்த்தும், எரிபொருட்கள் விலை உயர்வைத் திரும்பப் பெறக் கோரியும், 2021 ஜூன் 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் நாட்டில் உள்ள அனைத்து பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன்பாக நாடு தழுவிய போராட்டங்களை நடத்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தியுள்ளது.

அதையொட்டி தமிழகத்தில் நடைபெறுகிற போராட்டங்களில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள், முன்னணித் தலைவர்கள், அந்தந்தத் தொகுதிகளில் உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட, வட்டார, நகர, பேரூர், கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் பிரிவுகள் மற்றும் துறைகளின் தலைவர் ஆகியோர் அவசியம் பங்கேற்க வேண்டும். சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் நான் பங்கேற்கிறேன்.

ஜூன் 11ஆம் தேதி தமிழகம் முழுவதும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன்பு நடைபெறும் போராட்டத்தில், காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் கரோனா விதிமுறைகளின்படி சமூக விலகலைக் கடைப்பிடித்து பங்கேற்க வேண்டும். பெரும் கூட்டம் சேர்ப்பது கரோனா விதிமீறல் என்பதால் அதனைத் தவிர்க்க வேண்டும். அதற்கு மாறாக பெரும்பாலான பெட்ரோல் விற்பனை நிலையங்களில் 10 நபர்களுக்கு மிகாமல் இந்தப் போராட்டத்தை விரிவுபடுத்தி அதிக எண்ணிக்கையில் நடத்த வேண்டும்.

மேலும் போராட்டத்தின்போது அனைவரும் முகக்கவசம் அணிந்து, கண்டனப் பதாகைகளை தாங்கிக்கொண்டு மத்திய அரசின் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்ப வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு எதிராக எழுப்பப்படுகிற கண்டன முழக்கங்கள் தலைநகர் டெல்லியில் எதிரொலிக்க வேண்டும்”.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்