ஜவ்வாதுமலைக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய கற்காலக் கருவிகள் கண்டெடுப்பு

By ந. சரவணன்

திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாது மலையில் 7,000 ஆண்டுகளுக்கு முந்தைய புதிய கற்காலக் கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் மோகன்காந்தி, காணிநிலம் முனிசாமி, குனிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குழந்தைசாமி, வரலாற்று ஆர்வலர் வேந்தன், முனைவர் கோவிந்தராஜ் ஆகியோர் ஜவ்வாதுமலையில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, புதிய கற்காலக் கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன.

இதுகுறித்து, தமிழ்த்துறை பேராசிரியர் மோகன்காந்தி கூறியதாவது:

"ஆய்வாளர்களால் அறுதியிட்டுக் கூறமுடியாத பழமையை உடைய காலம் வரலாற்றுக்கு முந்தையை கற்காலம் எனக் கூறப்படுகிறது. இந்தக் காலங்களில் மனிதன் நாகரிகம் அடையாமலும், இனக்குழுச் சமூகமாக விலங்குகளைப் போல சுற்றித் திரிந்துள்ளான்.

இரும்பு, செம்பு போன்றவற்றின் பயன்பாட்டை அறியாமல் கற்களையே ஆயுதமாகக் கொண்டு கற்களின் உதவியோடு வாழ்ந்த காலத்தைத்தான் கற்காலம் என்று அழைப்பார்கள்.

வரலாற்றுக்கு முந்தைய பல தொன்மையான சின்னங்கள் திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலையில் உள்ளன. கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கற்கோடரிகள் ஜவ்வாதுமலையில் தற்போது அதிக அளவில் கிடைத்துள்ளன. புதிய கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கல் ஆயுதங்கள், கோடரிகள் போன்ற அமைப்பினைப் பெற்று இருப்பதால் அதைக் கற்கோடரிகள் என அழைக்கிறோம்.

ஜவ்வாதுமலைகளில் வாழ்ந்த தொன்மை மனிதர்களின் முக்கிய ஆயுதமாக கற்கோடரிகளைக் கருத முடிகிறது. மரங்களை வெட்டவும், விலங்குகளை வேட்டையாடவும் கற்கோடரிகளைப் பயன்படுத்தியுள்ளனர். ஜவ்வாதுமலைகளில் சிறிதும், பெரிதுமாக ஏராளமான கற்கோடரிகள் உள்ளன. ஜவ்வாதுமலைக்கு உட்பட்ட புதூர்நாடு, நெல்லிவாசல்நாடு, புங்கம்பட்டுநாடு ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பல மலைகிராமங்களில் உள்ள ஒவ்வொரு கோயிலிலும் கற்கோடரிகளை மக்கள் தெய்வங்களாக வழிபட்டு வருவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

புங்கம்பட்டு நாட்டுக்கு உட்பட்ட மலைச்சிற்றூர்களில் ஒன்றான பழையபாளையம் பகுதியில் உள்ள கோயிலின் வெளிப்புறம் உள்ள பெரிய ஆலமரத்தின் அடியில் அழகான மேடை அமைத்து அதில், 150-க்கும் மேற்பட்ட கற்கோடரிகள் வரிசையாக நட்டுவைத்து அதை வழிபட்டு வருகின்றனர். சுமார் 7,000 ஆண்டுகளுக்கு முன் வரலாற்றுச் சிறப்புமிக்க இப்பொருட்களை மலைவாழ் மக்கள் தற்போது வரை போற்றிப் பாதுகாத்து வருவது சிறப்புக்குரியதாகும்.

புங்கம்பட்டு நாட்டுக்கு உட்பட்ட ஊர் கம்புக்குடி கிராமத்தில் மாரியம்மன் கோயிலுக்கு அருகேயுள்ள மரத்தடியில் 25-க்கும் மேற்பட்ட வழவழப்பான கற்கோடரிகள் உள்ளன. இவற்றைப் பிள்ளையார் எனப் பெயரிட்டு, இப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

அதேபோல, புதூர்நாட்டில் இருந்து வடக்கே கம்புக்குடி செல்லும் பாதையில் 2 கி.மீ. தொலைவில் உள்ள ஆலமரத்தடியிலும் கீரைப் பிள்ளையார் கோயில் உள்ளது. இங்கு 2 அடி முதல் 4 இன்ச் அளவுள்ள 50-க்கும் மேற்பட்ட கற்கோடரிகள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. இதையும் பிள்ளையார் என, இப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர். இவை அனைத்தும் புதிய கற்காலக் கற்கோடரிகள் ஆகும்.

புதூர்நாட்டில் இருந்து பெரும்பள்ளிக்குச் செல்லும் சாலையில் கோயிலூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு பெருமாளப்பன் கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள தூண்களைப் பார்க்கும்போது இக்கோயிலானது சோழர் காலத்துக் கோயிலாக இருக்கலாம் எனத் தெரிகிறது.

இக்கோயிலின் வலது புறம் ஏறத்தாழ 30 கற்கோடரிகள் காணப்படுகின்றன. இவை அனைத்தும், எண்ணெய் பூசப்பெற்று காட்சி தருகின்றன. இதுவும் புதிய கற்காலக் கருவிகளாகும். இவை அனைத்தும் இம்மலையின் பழமையைப் பறைசாற்றி நிற்கின்றன. இந்த மலையில் வாழும் மலைவாழ் மக்களின் முன்னோர்கள் பயன்படுத்திய கற்கோடரிகளும், நடுகற்களும் வழிபாட்டில் இடம் பெறுவதால் பழமையான தடயங்கள் உயிர்பெற்று இன்றும் வாழ்ந்து கொண்டிக்கின்றன. எனவே, மாவட்டத் தொல்லியல் துறையினர் இது போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணங்களைப் பாதுகாக்க முன்வர வேண்டும்".

இவ்வாறு தமிழ்த்துறை பேராசிரியர் மோகன்காந்தி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்