1992-ல் நெல்லை, தூத்துக்குடி, குமரியை நிலைகுலைத்த பெருவெள்ள பாதிப்பில் பாடம் கற்றிருக்கிறோமா?

By அ.அருள்தாசன்

பேரிடர் மேலாண்மை பற்றி அனைவருக்கும் பயிற்சி தேவை

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தின் வரலாற்றை புரட்டிப்போட்ட 1992-ம் ஆண்டு பெருவெள்ள பாதிப்புகளில் இருந்து இன்னும் பாடம் கற்காமல் இருப்பதை தன்னார்வலர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

தமிழகத்திலேயே அதிக எண்ணிக்கையில் அணைகள் உள்ள மாவட்டம் திருநெல்வேலி. இங்குள்ள 11 அணைகளில் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்போதெல்லாம் தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆண்டுதோறும் மழைக்காலங்களில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் தாமிரபரணி கரையோர குடியிருப்புகளையும், வயல்களையும், தாழ்வான இடங்களையும் வெள்ளநீர் சூழ்வது வழக்கமாக நடந்துகொண்டிருக்கிறது.

1992 வெள்ளம்

ஆனால், 1992-ம் ஆண்டில் இந்த மாவட்டங்கள், அதற்கு முன் இல்லாத வகையில் கடும் வெள்ளப் பாதிப்புகளை சந்தித்தது. 1992-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் புயல்வெள்ளம் ஏற்பட்டது. அந்த ஆண்டு நவம்பர் 13-ம் தேதி பாபநாசம் அணைப் பகுதியில் 310 மி.மீ. மழையும், சேர்வலாறு அணைப் பகுதியில் 210 மி.மீ., பாபநாசம் கீழ்அணைப் பகுதியில் 190 மி.மீ., மணிமுத்தாறு அணையில் 260 மி.மீ. என்று வரலாறு காணாத வகையில் மழை கொட்டியிருந்தது.

இதனால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளுக்கு கட்டுக்கடங்காத காட்டுவெள்ளம் வந்தது. அணைகள் உடையும் அபாயத்தை தவிர்க்க அன்று நள்ளிரவில் அணையை திறந்துவிட்டனர்.

2 லட்சம் கன அடி நீர்

3 அணைகளில் இருந்து திறக்கப்பட்ட வெள்ளத்துடன், திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த மழையும் சேர்ந்துகொண்டதில் தாமிரபரணி ஆற்றில் 2.04 லட்சம் கனஅடி தண்ணீர் கடும் சீற்றத்துடன் பாய்ந்தது. இதில், கரையோரக் குடியிருப்புகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், பாபநாசம் பகுதிகளில் வீடுகள் நீரில் மூழ்கின.

பாபநாசத்தில் பரிதாபம்

பாபநாசம், திருவள்ளுவர் நகரில் 1992-ம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி அதிகாலையில் 17 பேரை வெள்ளம் பலிகொண்டது. அங்கு வீடுகளின் மொட்டை மாடிகளில் தஞ்சமடைந்தவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.

திருநெல்வேலி சந்திப்பு பழைய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 பேருந்துகள் வெள்ளத்தில் மூழ்கின. கொக்கிரகுளத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினுள் தண்ணீர் புகுந்தது. திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் த.மு.சாலை வரை கடைகள் வெள்ளத்தில் மூழ்கின.

சிந்துபூந்துறை, கைலாசபுரம், மீனாட்சிபுரத்தில் அனைத்து குடியிருப்புகளும் வெள்ளத்தில் தத்தளித்தன. எத்தகைய வெள்ளத்திலும் நிலைகுலையாமல் இருந்த குறுக்குத்துறை முருகன் கோயிலின் மேல்தளத்தில் இருந்த ஓடுகளை வெள்ளம் அடித்துச் சென்றது. திருநெல்வேலி சந்திப்பில் தேங்கிய வெள்ளம் வடிய 4 நாட்களானது.

குமரி துண்டிப்பு

அதே நாளில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் வெள்ளம் பெருக்கெடுத்து திருநெல்வேலி மற்றும் திருவனந்தபுரத்துடனான சாலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள், ரப்பர் தோட்டங்கள் மூழ்கின. குழித்துறை தாமிரபரணியிலும், பழையாற்றிலும் பல உடல்கள் அடித்து வரப்பட்டன. சுசீந்திரத்தில் தாணுமாலய சுவாமி கோயில் வரை வெள்ளம் புகுந்தது. சுவாமிதோப்பு உப்பளங்கள் மூழ்கின. இதன்பிறகு 2004-ல் சுனாமி பாதிப்பும் பெரும் சோகத்தை உருவாகியது.

பாடம் கற்றுக்கொள்ளவில்லை

இதுபோன்ற வெள்ளம் மீண்டும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளபோதும், அதை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கைகளை நாம் மேற்கொள்ளவில்லை.

தற்போதைய நிலையில் திருநெல்வேலி, தூத்துக் குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் புயல், வெள்ளம் வந்தால், அவற்றை சமாளிப்பது மிகவும் சிரமம் என்றே சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து எழுத்தாளர் நாறும்பூநாதன் கூறியதாவது:

1992-ம் ஆண்டில் ஏற்பட்ட பெருவெள்ளத்துக்கு பின்னர்தான் வெள்ளப் பாதிப்புகளின் தாக்கம் குறித்து இங்குள்ளவர்களுக்கு தெரியவந்தது. ஆனால், அதிலிருந்து இன்னும் நாம் பாடம் கற்காமல் இருக்கிறோம். அப்போதைய வெள்ளத்தில் வர்த்தகர்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்தார்கள். வெள்ளப் பாதிப்புகளிலிருந்து மீள்வதற்கு பல வாரங்கள் ஆகின. சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால், திருநெல்வேலி- ஸ்ரீவைகுண்டத்துக்கு போக்குவரத்து சீராக 3 வாரங்கள் ஆனது.

தாக்குப்பிடிக்கும் கியூபா

கியூபா என்ற சிறிய நாட்டில் உலகிலேயே அதிக அளவில் புயல், வெள்ள பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஆனால் அந்த நாடு இந்த பேரிடர்களால் நிலைகுலையவில்லை. காரணம், அங்குள்ளவர்களுக்கு முறையாக பேரிடர் மேலாண்மைப் பயிற்சி அளிக்கப்படுகிறது. குறிப்பாக 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் கண்டிப்பாக இப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அத்தகைய பயிற்சி நமது பகுதியில் உள்ள மாணவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.

ஆறுகளில் ஆக்கிரமிப்புகளை முறைப்படி அகற்றவும், கரையோர குடியிருப்பு வாசிகளுக்கு பேரிடர் மேலாண்மைப் பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரிடர்களை எதிர்கொள்ளும் பக்குவம் சிறியவயதிலிருந்தே உருவாக்கப்பட வேண்டும்’ என்றார் அவர்.

நெல்லையில் தாமிரபரணியில் 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தாலே, இப்போது பாதிப்புகள் ஏற்படும் நிலையில் லட்சக்கணக்கான கனஅடி தண்ணீர் வந்தால் என்ன ஆகும் என்பதை கற்பனைசெய்துகூட பார்க்க முடியவில்லை. எனவே வெள்ளப் பாதிப்புகளை எதிர்கொள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மக்களை தயார்படுத்த வேண்டியது அவசியமாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்