பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள காவிரி டெல்டாவில் விளைநிலங்களை பாழாக்கும் சோப்பு தொழிற்சாலைகள்: மகசூல் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கவலை

By வி.சுந்தர்ராஜ்

டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இங்குள்ள விவசாய நிலங்களைப் பாழ்படுத்தும் வகையில், பல சோப்பு தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளது கவலையடைய செய்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் பூமிக்கு அடியில் உள்ள மீத்தேன், ஹைட்ரோ கார்பன் ஆகியவற்றை எடுக்க எண்ணெய் நிறுவனங்கள் முயற்சித்தபோது, அதை எதிர்த்துவிவசாயிகள் பெரும் போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து, விளைநிலங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுப்பதை தடுக்கும் வகையில், காவிரிடெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த அதிமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் எண்ணெய் நிறுவனங்கள், பூமிக்கு அடியில் இருந்து கச்சா எண்ணெய் எடுக்கும்போது, அதில் இருந்து வெளியேறும் எரிவாயுவுடன், சிலிக்கான் மணலை மூலப் பொருளாகக் கொண்டு, சோடியம் சிலிகேட் என்ற சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலைகள் தனியாரால் தொடங்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அருகே தீபாம்பாள்புரத்தில் மட்டும் இதுபோன்ற 2 தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், ஒரு தொழிற்சாலை கடந்த 6 மாதத்துக்கு முன்புதொடங்கப்பட்டுள்ளது. இத்தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயன பவுடரால்விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து தீபாம்பாள்புரம் விவசாயி வெற்றிகொண்டான் கூறியதாவது: எங்கள் ஊரில் உள்ள 2 தொழிற்சாலைகளில் இருந்து காற்றில் பரவும் நச்சு கலந்த ரசாயன பவுடர், விளைநிலங்களில் பரவி, நெல் உள்ளிட்ட பயிர்களை வளரவிடாமல் தடுத்து, மகசூலை பாதிக்கிறது. விளைநிலமும் வளம்குறைந்து வருகிறது. வேறு வழியின்றி அதே இடத்தில் விவசாயத்தை மேற்கொள்கிறோம் என்றார்.

தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் கே.பக்கிரிசாமி கூறியது: காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பின்னர், கடந்த 6 மாத காலத்துக்குள் தஞ்சாவூரில் 1, திருவாரூரில் 4, நாகையில் 8 இடங்களில் சலவை சோப்பு மூலப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுஉள்ளன. ஏற்கெனவே கச்சா எண்ணெய் எடுப்பதால் விவசாய நிலங்கள் பாழ்பட்டு வரும் நிலையில், அதில் இருந்து கிடைக்கும் எரிவாயுவை கொண்டு சோப்பு தயாரிப்பு தொழிற்சாலை தொடங்கப்படுவதால், பயிர் மகசூல் குறைந்து விவசாய நிலத்தின் வளமும் பாதிக்கப்படுகிறது. இதை தடுக்க வேண்டும் என்றார்.

அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்க தஞ்சாவூர்மாவட்ட துணைத் தலைவர்வெ.ஜீவக்குமார் கூறியதாவது: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இங்குவிவசாயம் சாராத எந்த தொழிற்சாலையையும் கொண்டு வரக்கூடாது. எனவே, விவசாயத்தை நேரடியாக பாதிக்கக் கூடிய சோப்பு தயாரிப்பு தொழிற்சாலைகளை உடனடியாக மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து சோப்பு தயாரிக்கும் தனியார் நிறுவனத்தினரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: பூமிக்கு அடியில் இருந்து கச்சா எண்ணெய் எடுக்கும்போது வெளியேறும் எரிவாயுவை, குழாய் மூலம்கொண்டு வந்து, சிலிக்கான் மணலுடன் கலந்து சோப்பு தயாரிக்கும் மூலப்பொருளான சோடியம் சிலிகேட் தயாரித்து வருகிறோம். தற்போது, கரோனா பரவல் காலம் என்பதால், சோப்பு பயன்பாடு அதிகரித்துள்ளது. எங்கள் நிறுவனஉற்பத்திப் பொருட்கள் அத்தியாவசியப் பொருட்களில் இடம் பெற்றுள்ளதால், தொடர்ந்து பாதுகாப்பாக உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறோம். எங்கள் நிறுவனங்களில் இருந்து கழிவுப் பொருட்கள் எதுவும் வெளியேறுவதில்லை என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்