கரோனா அச்சம்; நடப்பாண்டில் அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்க: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

கரோனா அச்சம் காரணமாக, நடப்பாண்டில் அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஜூன் 05) வெளியிட்ட அறிக்கை:

"இந்தியா முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தின்படியான 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில், மருத்துவம், தொழில்நுட்பப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு நிறுவனங்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை நடத்துவதற்கு சாதகமான சூழல் இல்லாத நிலையில், நுழைவுத் தேர்வுகளை மட்டும் நடத்த முற்படுவது ஏற்க முடியாதது ஆகும்.

2021-ம் ஆண்டு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு திட்டமிட்டபடி ஆகஸ்ட் ஒன்றாம் நாள் நடத்தப்படும் என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு தேசிய தேர்வுகள் முகமை விடையளித்திருக்கிறது.

ஆகஸ்ட் ஒன்றாம் நாளுக்கு இன்னும் இரு மாதங்களுக்கும் குறைவாகவே இருக்கும் நிலையில், அதற்குள் நீட் தேர்வுக்குத் தயாராவது என்பது சாத்தியமே இல்லை. அதுமட்டுமின்றி, மாணவர்களிடையே இன்று நிலவும் மனநிலையில் அடுத்த சில மாதங்களுக்கு அவர்களால் எந்தத் தேர்வையும் எழுத முடியாது என்பதே உண்மையாகும். இதை மத்திய அரசு உணர வேண்டும்.

கரோனா முதல் அலையை விட இரண்டாவது அலை மிகக் கடுமையாக உள்ளது. நாடு முழுவதும் முதல் அலையில் தினசரி தொற்று எண்ணிக்கை அதிகபட்சமாக 98,000 பேர் என்ற அளவிலேயே இருந்தது. ஆனால், இரண்டாவது அலையில் தினசரி தொற்று எண்ணிக்கை 4.14 லட்சம் பேர் என்ற புதிய உச்சத்தைக் கடந்த மே மாதம் 6ஆம் தேதி எட்டியது.

அதன்பின், ஒரு மாதமாகிவிட்ட போதிலும் தினசரி கரோனா தொற்றுகளின் எண்ணிக்கை சராசரியாக 1.50 லட்சம் பேர் என்ற அளவிலேயே உள்ளது. இது கரோனா முதல் அலையின் உச்சத்தை விட 150 விழுக்காட்டுக்கும் அதிகம் ஆகும்.

கரோனா முதல் அலையை விட இரண்டாவது அலை அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. கரோனா முதல் அலையில் கடந்த பிப்ரவரி மாதம் இறுதி வரையிலான ஓராண்டில் 1.57 லட்சம் பேர் மட்டுமே உயிரிழந்திருந்தனர்.

ஆனால், இரண்டாவது அலையில் ஏப்ரல், மே ஆகிய இரு மாதங்களில் மட்டும் 1.78 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஓராண்டில் இறந்தவர்களை விட, அதிக எண்ணிக்கையில் கடந்த இரு மாதங்களில் மட்டும் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ள நிலையில், உறவுகளை இழந்த மாணவர்கள் எத்தகைய மனநிலையில் இருப்பார்கள் என்பதை மத்திய, மாநில அரசுகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டில் ஒரு நாள் கூட நேரடி வகுப்புகள் நடத்தப்படவில்லை. ஆன்லைன் வகுப்புகளின் தரம் எந்த அளவுக்கு சீராக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததுதான். மாணவர்கள் மனதளவில் மட்டுமின்றி, கல்வி அளவிலும் எந்தத் தேர்வுக்கும் தயாராகவில்லை.

இத்தகைய சூழலில், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு எந்தத் தேர்வு நடத்தப்பட்டாலும் அது மனித உரிமை மீறலாகவே அமையும். தேர்வுகளா... மாணவர்களின் உயிர்களா? என்று பார்த்தால் மாணவர்களின் உயிர்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். இதை மத்திய, மாநில அரசுகள் உணர வேண்டும்.

எனவே, தேசிய அளவில் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும், பல மாநிலங்களில் மாநிலப் பாடத்திட்டத்தின்படியான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுவிட்ட நிலையில், தமிழ்நாட்டிலும் மாநிலப் பாடத்திட்டத்தின்படியான 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும்; அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட வேண்டும். முந்தைய பருவத் தேர்வுகளின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் மதிப்பெண் அளிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும்.

தேசிய அளவில் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளும் நடப்பாண்டில் ரத்து செய்யப்பட வேண்டும். மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட தேர்வு வாரியங்கள் வழங்கியுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் கலை மற்றும் அறிவியல், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும்".

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்