நிலோபர் கபீலிடம் அரசு வேலைக்காகப் பணம் கொடுத்தீர்களா? - புகார் குறித்து விசாரணை

By ந. சரவணன்

முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, நிறைய பேரிடம் பண மோசடி செய்ததாக அவரது உதவியாளர் கொடுத்த புகாரின் பேரில், திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பினராகவும், அதிமுக அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் நிலோபர் கபீல் இருந்த காலத்தில் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த நிறைய பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.6 கோடி வரை பணம் மோசடி செய்துள்ளதாக அவரது தனி உதவியாளரான பிரகாசம் என்பவர் தமிழக டிஜிபிக்கு மின்னஞ்சல் மூலம் கடந்த மாதம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

இதைத் தொடர்ந்து, அதிமுகவின் அனைத்துப் பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அவரைக் கட்சித் தலைமை நீக்கியது. இதற்கு பதிலளித்த நிலோபர் கபீல், "என் மீது சுமத்தப்பட்டது வீண் பழி. நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை. ஒரு வேளை பிரகாசம் வாங்கியிருப்பார். தற்போது அவர் சிலரது தூண்டுதல் பேரில் என் மீது பொய்யான புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதை நான் சட்ட ரீதியாகச் சந்திப்பேன்.

அதிமுகவில் இருந்து என்னை நீக்கியது வருத்தமில்லை. அதிமுகவில் அமைச்சராக இருந்தவர்கள் முதல்வர் பழனிசாமி உட்பட பலர் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. அவர்கள் அனைவரையும் கட்சியை விட்டு நீக்க அதிமுக தலைமை தயாரா?" எனக் கேள்வி எழுப்பினார்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு நிலோபர் கபீல் அளித்த இந்தப் பேட்டி அதிமுக நிர்வாகிகள் பலருக்குக் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே, நிலோபர் கபீல் திமுகவில் சேரவே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார் என அதிமுக நிர்வாகிகள் குற்றம் சாட்டினர்.

இதற்கிடையே, நிலோபர் கபீலுக்குப் பதவி மட்டுமே முக்கியம், கட்சியையும், வாக்களித்த மக்களையும் அவர் மறுந்துவிட்டார். வாணியம்பாடி தொகுதியில் அவருக்கு சீட் அளித்திருந்தால் அந்தத் தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றிருக்காது என, முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

இதற்கிடையே, அதிமுக முன்னாள் அமைச்சர் மீது அவரது உதவியாளர் கொடுத்த புகார் மீது உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி தமிழக டிஜிபி, திருப்பத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீலிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் என பெயர், முகவரி மற்றும் செல்போன் எண்ணுடன் அவரது உதவியாளர் பிரகாசம் வழங்கிய பட்டியல்படி 108 பேரிடம் விசாரணை நடத்த துணை காவல் கண்காணிப்பாளர்கள் பிரவீன்குமார் (திருப்பத்தூர்), சச்சிதானந்தம் (ஆம்பூர்) ஆகியோர் தலைமையில் தனிப்படை ஒன்றை எஸ்.பி. விஜயகுமார் அமைத்தார்.

இந்தத் தனிப்படையினர் 108 பேரிடம் நேற்று (ஜூன் 03) விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து, காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "புகாரின் அடிப்படையில் 108 பேருக்கு சம்மன் அனுப்பி அவர்களைத் தேதி வாரியாக வரவழைத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறோம். இதுவரை 35 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவர்கள் கூறிய தகவல்கள் அனைத்தும் பதிவு செய்யப்படுகிறது. விசாரணை முடிவில் அதன் அறிக்கையை திருப்பத்தூர் எஸ்.பி. மூலம் தமிழக டிஜிபிக்கு அனுப்பி வைக்கப்படும். விசாரணை பாதிக்கும் என்பதால் இதற்கு மேல் எதுவுமே கூறமுடியாது" என்றனர்.

வாணியம்பாடி பெரியபேட்டை பகுதியைச் சேர்ந்த ஒருவர் அமைச்சர் நிலோபர் கபீல் மூலம் அரசுத் துறையில் வேலை பெற்றுள்ளதால் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது அவர் அமைச்சர் நிலோபர் கபீலுக்கு ஆதரவாக பதில் அளிக்க வேண்டும் என, நிலோபர் கபீல் தரப்பினர் நிர்பந்தப்படுத்தியதாகவும், எனவே, 108 பேரிடமும் காவல் துறையினர் நேர்மையுடன் விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் அதிமுக நிர்வாகிகள் தமிழக டிஜிபிக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்