மேட்டூர் அணை ஜூன் 12-ல் திறப்பு: முதல்வரின் அறிவிப்புக்கு டெல்டா விவசாயிகள் வரவேற்பு

By செய்திப்பிரிவு

மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதை, விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியது:

தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன்: நம்பிக்கையுடன் சாகுபடி பணிகளை மேற்கொள்வதற்கு வழிவகுத்துள்ள முதல்வருக்கு நன்றி. தொடர்ந்து, மழையால் பாதிக்கப்படக்கூடிய நெல்மணிகளை உலர்த்தக்கூடிய நவீன இயந்திரங்களுடன் உலர் களங்கள், கிடங்குகள் அமைப்பதற்கும் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்திருப்பதை வரவேற்கிறோம். மேலும், குறுவைக்கு தேவையான குறுகிய கால விதைகள் தரமானவையாக கிடைக்கச் செய்ய வேண்டும். கூட்டுறவு கடன் வழங்கவும், ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்ட வேளாண் நகைக் கடன்களுக்கு ஈடான நகைகளை விவசாயிகளுக்கு திரும்ப வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சுந்தரவிமல்நாதன்: இந்த அறிவிப்பு, குறுவை சாகுபடியை மேற்கொள்ள நம்பிக்கை அளித்துள்ளது. எனவே, குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தேவையான பயிர்க் கடன்கள், இடுபொருட்களை வழங்க வேண்டும்.

தமிழக விவசாயிகள் சங்க தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களின் ஒருங்கிணைப்பாளர் ப.ஜெகதீசன்: பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் வயல்களுக்கு வந்து சேருவதற்குள், டெல்டாவில் நடைபெறும் தூர் வாரும் பணிகளை தரமாக மேற்கொண்டு முடிக்க வேண்டும். கடைமடைப் பகுதி வரை சீராக நீர் செல்லும் வரை முறைப்பாசனத்தை கொண்டு வரக்கூடாது.

அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத் துணைத் தலைவர் வெ.ஜீவக்குமார்: கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் அதே நேரத்தில் தலைமடை பகுதியிலும் தண்ணீரை பகிர்ந்து வழங்க வேண்டும். கல்லணை அருகே பாலம் கட்டுமானப் பணிகளை முடிக்க வேண்டும்.

நசுவினி ஆறு படுக்கை அணை விவசாயிகள் சங்கத் தலைவர் வீரசேனன்: காவிரி மற்றும் கல்லணைக் கால்வாயில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன. இதனால், ஆறுகளின் கரைகள் பலவீனமாக உள்ளன. கரைகளை பலப்படுத்தும் பணி இதுவரை தொடங்கவில்லை. எனவே, மேட்டூர் அணை ஜூன் 12-ல் திறக்கப்பட்டாலும் கடைமடைப் பகுதிக்கு உரிய நேரத்தில் நீர் வந்து சேருமா என்பதில் ஐயமுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE