தொகுதியிலுள்ள மூன்றாம் பாலினத்தவருக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை: புதுச்சேரி திமுக எம்எல்ஏ புதிய திட்டம்

By செ. ஞானபிரகாஷ்

தனது தொகுதியிலுள்ள மூன்றாம் பாலினத்தவருக்கு மாதம் ரூ.ஆயிரம் உதவித்தொகை தரும் திட்டத்தை திமுக எம்எல்ஏ சம்பத் புதுச்சேரியில் இன்று துவக்கியுள்ளார்.

புதுச்சேரியில் திமுக சார்பில் மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதியில் நடந்த நிகழ்வுக்கு அத்தொகுதி திமுக எம்எல்ஏ சம்பத் தலைமை வகித்தார். திமுக தெற்கு மாநில அமைப்பாளர் சிவா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். தொகுதி செயலர் திராவிட மணி முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வில் கலைஞரின் திருநங்கை உதவித்தொகை தரும் திட்டத்தை துவக்கி வைக்கப்பட்டது.

இதுபற்றி திமுக எம்எல்ஏ சம்பத் கூறியதாவது:

"மூன்றாம் பாலினத்தவர்களை திருநங்கைகள் என்று முதல்வராக இருந்தபோது பெயர் மாற்றத்தை கருணாநிதி செய்தார். புதுச்சேரியில் திருநங்கைகளுக்கு அரசு தரும் உதவித்தொகை ரூ. 1500 போதுமானதாக இல்லை.

அதனால் சமூகத்தில் பிறரிடம் உதவி கேட்கும் நிலையில் உள்ளனர். அவர்களுக்கு அளிக்கும் ஊக்கத்தொகையை அரசு அதிகரித்து தர கோருகிறோம்.

முன்னுதாரணமாக கலைஞரின் திருநங்கை உதவித்தொகைத்திட்டத்தை கருணாநிதி பிறந்தநாள் விழாவில் துவங்கியுள்ளோம்.

இத்திட்டத்தின் மூலம் எனது தொகுதியான முதலியார்பேட்டையில் உள்ள அனைத்து மூன்றாம் பாலினத்தவருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்த உள்ளோம்.

முதல் தவணையை தந்து இத்திட்டத்தை துவக்கியுள்ளோம். முதலியார்பேட்டை தொகுதியைச் சார்ந்த திருநங்கைகள் 9488843327 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

அரசு மட்டுமே திட்டத்தை ஏற்படுத்த முடியும் என்பதில்லை எம்எல்ஏவாலும் செய்ய முடியும் என்பதற்காகவே முதலாவதாக இத்திட்டத்தை செயல்படுத்துகிறோம்" என்று குறிப்பிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE