கள்ளச்சாராய விற்பனையை தடுக்கக்கோரியும், சாராய வியாபாரிகளை கைது செய்ய வலியுறுத்தியும், கிராம நிர்வாக அலுவலகம் முன்பாக கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட ஆத்தூர்குப்பம் ஊராட்சி அலுவலகம் முன்பாக கிராம மக்கள் இன்று (ஜூன் 01) தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து பொதுமக்கள் தரப்பில் கூறும்போது, "ஆத்தூர் குப்பம் ஊராட்சியில் 6,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. விவசாயம், கட்டிடத்தொழில், கூலி வேலை செய்பவர்கள், கால்நடை வளர்ப்போர் இங்கு அதிக அளவில் வசிக்கின்றோம்.
கரோனா பரவல் காரணமாக, முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளும் சாராய வியாபாரிகள் எங்கள் கிராமத்துக்கு உட்பட்ட பி-மோட்டூர் தென்னந்தோப்பில் குடில் அமைத்து அங்கு இரவு, பகல் பாராமல் பாக்கெட் சாராயத்தை விற்பனை செய்து வருகின்றனர்.
கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதை அறிந்த வெளியூர்களை சேர்ந்த ஏராளமான மதுப்பிரியர்கள் தினந்தோறும் எங்கள் கிராமத்துக்குள் வந்து செல்கின்றனர். மதுபோதையில் தென்னந்தோப்பிலேயே விழுந்து கிடக்கின்றனர். இதனால், விவசாய வேலைக்கு செல்லும் பெண்கள் சிரமப்படுகின்றனர். தவிர, மதுபோதையில் இருசக்கர வாகனங்களில் வரும் இளைஞர்கள் தாறுமாறாக வாகனங்களை இயங்கி விபத்துகளை ஏற்படுத்துகின்றனர்.
இதனால், எங்கள் பகுதியில் உள்ள இளைஞர்களும் மதுப்பழக்கத்துக்கு ஆளாகும் நிலை உருவாகியுள்ளது. இதை தடுக்க வேண்டும், சாராய விற்பனையை ஒழிக்க வேண்டும் என, நாட்றாம்பள்ளி காவல் நிலையம், வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, சாராய விற்பனையில் ஈடுபட்டு வருவோர்களை கைது செய்ய வலியுறுத்தியும், சாராய விற்பனையை அடியோடு ஒழிக்க வேண்டும் என கோரிக்கையை முன்னிறுத்தியும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்" என்றனர்.
இதைத்தொடர்ந்து, வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுவோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என, காவல் துறையினர் உறுதியளித்தனர். அதன்பேரில், பொதுமக்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago