செங்கல்பட்டு தடுப்பூசி மையம்; உரிய நடவடிக்கை எடுப்போம்: ரவிகுமார் எம்.பி.க்கு மத்திய அமைச்சர் பதில்

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு எச்எல்எல் தடுப்பூசி நிறுவனத்தில் தடுப்பூசி தயாரிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ரவிக்குமார் எம்.பி. எழுதிய கடிதத்திற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பதில் அளித்துள்ளார்.

கரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கரோனா பரவலைக் குறைக்க, மக்களைக் காக்க ஒரே வழி தடுப்பூசிதான் என்கிற அடிப்படையில் தடுப்பூசி போடும் இயக்கத்தை மத்திய அரசு, மாநில அரசுகளும் முன்னெடுத்து வருகின்றன.

இந்தியாவில் தடுப்பூசியை இரண்டு நிறுவனங்கள் மட்டுமே தயாரிப்பதால் மாநிலங்களுக்கு தடுப்பூசி உரிய அளவீட்டில் கிடைக்கவில்லை. இதனால் தமிழகம் 3.5 கோடி தடுப்பூசிகள் வாங்க உலக அளவில் கொள்முதல் செய்ய டெண்டர் கோரியுள்ளது.

மேலும், தமிழகத்தில் செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி மையத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். அமைச்சர் தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் நேரில் சென்று மத்திய அமைச்சரைச் சந்தித்தனர்.

இதற்கு முன்னரே கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி விசிகவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் ரவிகுமார், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்குக் கடிதம் எழுதியிருந்தார். அவர் எழுதிய கடிதத்தைப் பெற்றுள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுத்தால் தெரியப்படுத்துவதாகவும் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து ரவிக்குமார் எம்.பி. தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

''செங்கல்பட்டில் உள்ள எச்எல்எல் பயோடெக் லிமிடெட் என்ற தடுப்பூசி தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனத்தில் தடுப்பூசி தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏப்ரல் 14ஆம் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருந்தேன்.

அதற்கு பதில் அளித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், 'எச்எல்எல் பயோடெக் லிமிடெட் வளாகத்தில் கோவிட் தடுப்பூசி தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற தங்களுடைய கடிதம் கிடைக்கப் பெற்றேன். இது தொடர்பாக பரிசீலித்து விரைவில் தங்களுக்கு தெரிவிக்கப்படும்' என்று குறிப்பிட்டுள்ளார்''.

இவ்வாறு ரவிக்குமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE