செங்கல்பட்டு தடுப்பூசி மையம்; மூன்றாவது அலைக்கு முன்கூட்டியே எச்சரிக்கையாகச் செயல்பட முயல்கிறோம்: முதல்வர் ஸ்டாலின் 

By செய்திப்பிரிவு

''செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை, ஒன்று மத்திய அரசு ஏற்று நடத்த வேண்டும், அல்லது மாநில அரசிடம் அதை ஒப்படைக்க வேண்டும். மூன்றாவது அலை, நான்காவது அலை என்று பல்வேறு தரப்பினர் சொல்கின்றனர். அதனால் முன்கூட்டியே எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதால் இந்த முயற்சியை அரசு எடுத்திருக்கின்றது'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கோவையில் ஆய்வுப் பணியை மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் நேற்று மாலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு எப்போது அமல்படுத்தப்படும்?

சில தளர்வுகளைக் கொடுத்துள்ளோம், காய்கறிகளை வீடு வீடாகக் கொண்டு போய் கொடுக்கும் சூழலை உருவாக்கியுள்ளோம், மளிகைப் பொருட்களைப் பொறுத்த அளவில் அந்தந்த வியாபாரிகளைத் தொலைபேசியில் தொடர்புகொண்டால் வீடு வீடாகக் கொண்டு செல்லும் வாய்ப்பினையும் ஏற்படுத்தியுள்ளோம். இந்த வாரம் தளர்வுகளில்லா ஊரடங்கைச் செயல்படுத்தியுள்ளோம். இவ்வாறு அமல்படுத்தி வெற்றி பெற்றால்தான் நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும். அடுத்த ஊரடங்கினை அறிவிக்கும்போது அதைப் பற்றி யோசித்து அறிவிக்கப்படும்.

தமிழக அரசு கொள்முதல் செய்யும் தடுப்பூசி ஒரு நாளும், ஒன்றிய அரசு வழங்கும் தடுப்பூசி ஒரு நாளும் போடப்படுவதால், மக்கள் தடுப்பூசி போட முடியாமல் திரும்பிச் செல்லும் நிலை உள்ளதே?

இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்பதில் அளித்தார்:

தடுப்பூசிகளைப் பொறுத்தவரை 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிகள் மத்திய அரசிடமிருந்து 83 லட்சம் அளவுக்கு இதுவரை வந்துள்ளன. 18 முதல் 44 வயதினருக்கான தடுப்பூசிகளைத் தமிழக அரசு சார்பில் கொள்முதல் செய்வதற்காக அங்கு கட்டியுள்ள பணம் 85 கோடியே 48 லட்சம். இதன் மூலம் வரவேண்டியது 25 லட்சம் தடுப்பூசிகள். அதில் 13 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன.

இதிலேயே இன்னும் 12 லட்சம் தடுப்பூசிகள் வரவேண்டி உள்ளது. மொத்தம் 96 லட்சம் தடுப்பூசிகள் இதுவரை வந்துள்ளன. இதில் 86 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிகள் மிகக் குறைவாகவே - ஒன்றரை லட்சம் அளவுக்கு மட்டுமே இருப்பு உள்ளது. ஒன்றிய அரசிடமிருந்து வரவர அது சரியாகப் பிரித்து அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு, எப்போது எங்கே முகாம்கள் அமைக்கப்படும் என்பது குறித்த விவரங்கள் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் தெரிவிக்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட இருக்கிறது.

18 வயது முதல் 44 வயது வரை தமிழக அரசு கட்டிய பணம் 85.48 கோடி ரூபாய், வாங்கவேண்டிய தடுப்பூசியின் அளவு 25 லட்சம், இதுவரை வந்திருப்பது 13 லட்சம், அதுவே இன்னும் 12 லட்சம் தடுப்பூசிகள் வரவேண்டியுள்ளது. வர வர தடுப்பூசி போடப்படும், அதனால்தான் கூடுதலாக 3.50 கோடி தடுப்பூசி பெறுவதற்கு தமிழக அரசின் மூலம் உலகளாவிய ஒப்பந்தம் விடும் முயற்சியில் முதல்வர் ஈடுபட்டுள்ளார்.

நம்மைப் பார்த்துத்தான் கேரள அரசு 3.50 கோடி தடுப்பூசிகள் பெறுவதற்கு உலகளாவிய ஒப்பந்தம் கோரியுள்ளது. முதல்வர் தெரிவித்துள்ளதுபோல செங்கல்பட்டில் உள்ள ஹெச்எல்எல் தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியினை தாங்கள் அறிவீர்கள். முதல்வர் அத்தொழிற்சாலையை நேரடியாக சென்று பார்த்தார். அடுத்த நாள் ஆய்வுக்கூட்டம் நடத்தினார், அன்றைய தினமே டெல்லிக்கு தொழில்துறை அமைச்சரை அனுப்பிப் பேச வைத்தார். அவர்கள் ஒரு வாரம் அவகாசம் கேட்டுள்ளார்கள். இதெல்லாம் நடந்தால் தமிழ்நாட்டில் தடுப்பூசி போடாதவர்களே இல்லை என்ற நிலை உருவாகும்.

பொது முடக்கத்தினால் வங்கிகளில் வாங்கிய கடன்கள் வீட்டுக் கடன்கள் கட்ட முடியாமல் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு தமிழக அரசால் ஒன்றிய அரசிடமோ, ரிசர்வ் வங்கி மூலமாகவோ, அவகாசம் வழங்க கேட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா?

மத்திய அரசிற்கு இரண்டு முறை கடிதம் எழுதியுள்ளோம். மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளோம். பதிலை எதிர்பார்த்துள்ளோம். பதில் வந்தவுடன் அதுகுறித்து முடிவெடுக்கப்படும்.

ஒரு சிலர் குறிப்பாக கோயம்புத்தூர் புறக்கணிக்கப்படுவதாக குற்றம் சாட்டுகிறார்களே, அதுபற்றி உங்களுடைய கருத்து என்ன?

தடுப்பூசியே சென்னைக்கு அடுத்தது கோவையில்தான் அதிகமாகப் போடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நான் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு கோவைக்கு வருவது இது இரண்டாவது முறை.

நான் முன்னரே சொன்னபடி, ஓட்டுபோட்ட மக்களுக்கு மட்டுமல்ல ஓட்டுபோடாத மக்களுக்கும் சேர்த்து நான் வேலை செய்வேன். ஓட்டுப் போட்டவர்கள் மகிழ்ச்சியடைய வேண்டும், ஓட்டுப் போடாதவர்கள் ஏன் ஓட்டுப் போடவில்லை என்று வருத்தப்பட வேண்டும். அப்படித்தான் என்னுடைய பணி அமையும்.

இன்றைக்கு கூட கரோனா வார்டுக்குச் சென்று அங்கு இருக்கும் நிலை என்ன என்று ஆய்வு செய்தேன். எதற்காக? அந்தப் பணியில் ஈடுபட்டுள்ள கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்க மருத்துவர்கள், செவிலியர்கள் தன் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றி வருகின்றார்கள்.

அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும், உற்சாகப்படுத்த வேண்டும், நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். அவர்களை விட அவர்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் படும் கவலைகளைப் போக்க வேண்டும் என்பதற்காகத்தான் அந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றேன்.

இப்போதும் சொல்கிறேன். கோவைக்கு இரண்டு முறை மட்டுமல்ல, தேவைப்பட்டால் இரண்டு நாள் கழித்துக்கூட மீண்டும் ஒருமுறை வருவேன். அதனால் கோவை புறக்கணிக்கபடுவது என்பது அல்ல. ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டைப் பாதுகாப்பதுதான் எங்களின் முதல் பணி ஆகும்.

கிருமி நாசினி தெளிப்பது போன்ற பணிகள் நடைபெறவில்லையே?

இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் அளித்த பதில்:

கிருமி நாசினி தெளிப்பது, சுண்ணாம்பு போடுவது, பிளீச்சிங் பவுடர் போடுவது கூடாது என்று உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் அறிவுறுத்தியுள்ளன. அதனால் தொற்றைக் குறைத்துவிட முடியாது என்றும் கூறியிருக்கின்றனர். இது மூச்சுக்காற்றில் பரவும் ஒரு கிருமியாகும்.

கோவை மாநகராட்சியினைப் பொறுத்தவரையில் அதிகமாக துர்நாற்றம் ஏற்படும் இடங்களில் பீளிச்சிங் பவுடர்கள் போடலாம், எல்லா இடங்களிலும் போடுவது என்பது மனித சுகவீனத்திற்கு ஒரு காரணமாகவிடும் என்று சொல்லியிருக்கின்றார்கள். அதனால் மருத்துவத்துறையின் அறிவுரை பிளீச்சிங் பவுடர் அனைத்து இடங்களிலும் போடக்கூடாது என்பது.

முழுமையான ஊரடங்காக இல்லை என்றும், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது என்றும் விமர்சனம் உள்ளதே?

இந்த ஊரடங்கு முழுமையாக ஊரடங்கு இல்லை என்று குறைகள் சொல்கின்றார்கள். ரொம்பக் கடுமையாக இருந்தால் கடுமையாக ஊரடங்கு அமல்படுத்தப்படுகின்றது என்று சொல்கின்றனர். காய்கறிகள் கிடைக்கவில்லை, மளிகைப் பொருட்கள் கிடைக்கவில்லை என்று சொல்வார்கள். அதுமட்டுமல்ல இது தான்தோன்றித்தனமாக நாங்கள் மட்டும் எடுத்த முடிவல்ல. இதே நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது, அனைத்துக் கட்சிக் கூட்டத்தினைக் கூட்டுங்கள் என்றோம்,

அதற்கு நீங்கள் என்ன டாக்டர்களா என்று கூறினார்கள். ஆனால், நாங்கள் அவ்வாறு கேட்கவில்லை. நாங்கள் அனைத்துக் கட்சிக் குழு அமைத்து அவர்களிடம் ஆலோசனை செய்து ஒரு வாரம் இல்லை, இரண்டு வாரம் ஊரடங்கு போடுங்கள் என்று கூறியதன் பேரில் ஊரடங்கு போடப்பட்டது. ஊரடங்கு போடும்போது எந்தவிதமான சலுகைகள் வழங்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. அதனடிப்படையில் ஊரடங்கு போடப்பட்டது.

மேகதாது அணை கட்டுவதைத் தடுப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன ?

நீர்வளத்துறை அமைச்சர் ஏற்கெனவே இது தொடர்பாக பதிலளித்துள்ளார். எந்தக் காரணம் கொண்டும் அதை அனுமதிக்க மாட்டோம் என்றும் பதிலளித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தடுப்பூசி உற்பத்தி செய்யும் ஆலை செயல்படக் கோரிக்கை விடுக்கப்பட்டதன் தற்போதைய நிலை?

செங்கல்பட்டு மாவட்டத்தில் தடுப்பூசி உற்பத்தி ஆலை செயல்பட ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசியின் தேவையை மனதில் வைத்துதான் ஒன்றிய அரசின் மூலம் உருவாக்கப்பட்ட தொழிற்சாலையை, மாநில அரசு சார்பில் நடத்துகிறோம் என்று கேட்டிருக்கிறோம்.

ஒன்றிய அரசு ஒத்துழைத்தால் அதையேற்று உடனடியாக நடத்தி ரூ.100 கோடி, ரூ.200 கோடி செலவு செய்தால் அந்தத் தொழிற்சாலை முழுமையடையும் என்ற நிலையில் இருக்கின்றது. ஆனால், அதை ஒன்றிய அரசு கிடப்பில் போட்டு வைத்திருக்கின்றது.

அதற்காக நானே நேரடியாக போய்ப் பார்த்து ஆய்வு நடத்தி அது சம்பந்தமாக தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவையும், மக்களவை குழுத் தலைவர் முன்னாள் ஒன்றிய அமைச்சர் டி.ஆர்.பாலுவையும், டெல்லிக்கு அனுப்பி சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச்சர்களைச் சந்தித்து நான் கொடுத்த கடிதத்தை அவர்களிடத்தில் கொடுத்துப் பேசியிருக்கிறார்கள்.

ஒரு வார காலத்தில் ஆலோசனை செய்து சொல்கின்றேன் என்று தெரிவித்துள்ளனர். ஒன்று மத்திய அரசு ஏற்று அதை நடத்த வேண்டும், அல்லது மாநில அரசிடம் அதை ஒப்படைக்க வேண்டும், மூன்றாவது அலை, நான்காவது அலை என்று பல்வேறு தரப்பினர் சொல்கின்றனர். அதனால் முன்கூட்டியே எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதால் இந்த முயற்சியை அரசு எடுத்திருக்கின்றது.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்