'இந்து தமிழ்' செய்தி எதிரொலி: கரோனாவால் தாய், தந்தை, பாட்டியை இழந்த சிறுவர்களின் விவரத்தைக் கேட்டறிந்த குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள்

By க.சக்திவேல்

'இந்து தமிழ்' இணையத்தில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து கரோனாவால் தாய், தந்தை, பாட்டியை இழந்த சிறுவர்கள் குறித்த விவரத்தைக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் இன்று (மே 30) கேட்டறிந்தனர்.

கோவை சிவானந்தா காலனியில் வசித்து வந்தவர் தன்ராஜ் (45). இவரது மனைவி ஜெயந்தி (40). இவர்களது மூத்தமகன் விபின் ஜெயராஜ் (15). இளைய மகன் சாமுவேல் எபினேசர் (8). இந்நிலையில், தன்ராஜுக்கும், அவரது மனைவிக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தன்ராஜ், கடந்த 15-ம் தேதி உயிரிழந்தார்.

அதைத் தொடர்ந்து, இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது மனைவி ஜெயந்தி 17-ம் தேதியும், ஜெயந்தியின் தாய் பத்மாதுரை (59), 23-ம் தேதியும் உயிரிழந்தனர். இவ்வாறு தாய், தந்தை, பாட்டி என அடுத்தடுத்து மூன்று உயிர்களை இழந்த சிறுவர்களுக்கு அரசு உதவ வேண்டும் என தன்ராஜின் தாய் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இது தொடர்பாக 'இந்து தமிழ்' இணையதளத்தில் நேற்று செய்தி வெளியானது.

இந்நிலையில், சிறுவர்களின் விவரம் குறித்து உறவினர்களிடம் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் செல்போனில் தொடர்புகொண்டு கேட்டறிந்தனர்.

இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆர்.சுந்தர் கூறும்போது, “சிறுவர்களின் நிலை குறித்து நாளை (மே 31) நேரில் விசாரணை மேற்கொள்ள உள்ளோம். தமிழக அரசு நேற்று அறிவித்துள்ள நிவாரண உதவிகள் வழங்குவது குறித்த வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட, வழிதாட்டுதல் குழுவை அரசு அமைத்துள்ளது. அவை வெளியான பிறகு அந்த உதவியைத் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் பெற்றோர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாலோ அல்லது சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு ஏற்பட்டாலோ அவர்களின் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குப் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் பட்சத்தில் அக்குழந்தைகளை அரசு அங்கீகாரம் பெற்ற குழந்தைகள் இல்லங்களில் சேர்த்து தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ பராமரிப்பு, பாதுகாப்பு வழங்க வழிவகை செய்து வருகிறோம்.

இத்தகைய குழந்தைகள் இருப்பது தெரியவந்தால் குழந்தைகளுக்கான இலவச உதவி தொலைபேசி எண்ணான 1098-ல் தொடர்புகொள்ளலாம். மேலும், கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகை 0422-2300305, 9944212479 என்ற எண்ணிலும், குழந்தைகள் நலக் குழுவை 9944481285 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்