மாதர் சங்க முதுபெரும் தலைவர் மைதிலி சிவராமன் கரோனா தொற்றால் காலமானார்

By செய்திப்பிரிவு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாதர் சங்கத்தின் முன்னோடிகளில் ஒருவருமான மைதிலி சிவராமன் (81) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு காலமானார்.

1939ஆம் ஆண்டு பிறந்த மைதிலி, பள்ளிக் கல்வியை முடித்து மாநிலக் கல்லூரியில் அரசியல் விஞ்ஞான பட்டப்படிப்பை (பி.ஏ.ஹானர்ஸ்) தேர்ந்தெடுத்தார். முதல் வகுப்பில் முதல் நிலையில் தேர்ச்சி பெற்றார். பின்னர் அவர் டெல்லியில் அமைந்த இந்தியன் ஸ்கூல் ஆப் பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன் நிறுவனத்தில் மாஸ்டர்ஸ் டிப்ளமோ படித்தார். கல்வி உதவி பெற்று அமெரிக்காவில் உள்ள சிரக்யூஸ் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

படிப்பு முடித்த பிறகு நியூயார்க் மாநில அரசின் நிதித்துறையில் ஓராண்டு வேலை செய்தார். 1966ஆம் ஆண்டு ஐ.நா. மன்றத்தில் மூன்றாம் உலக நாடுகளைப் பற்றி இந்திய அரசுக்கு அறிக்கையளிக்கும் பணியில் சேர்ந்தார். அமெரிக்காவில் இருந்தபோது கியூபா சென்று வந்தார். அவர் அமெரிக்காவில் இருந்தபோது வியட்நாம் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் பரவலாக எழுச்சி மிக்க இயக்கம் நடந்தது. இந்த இயக்கம் மைதிலியின் சிந்தனையில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியது.

அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு உருவானது. வேலையைத் துறந்து 1968-ல் தமிழகம் திரும்பினார். அவர் 1968ஆம் ஆண்டு கீழவெண்மணியில் நடந்த 41 விவசாயக் கூலித்தொழிலாளர் படுகொலைகளைக் கண்டு நேரடியாக அங்கு சென்று விசாரணை நடத்தி ஆங்கிலத்தில் அதைப் புத்தகமாக வெளிக்கொண்டு வந்தார். அதன் மூலம் நிலப்பிரபுத்துவ சாதியப் படுகொலையின் கோரம் உலகுக்குத் தெரியவந்தது. விவாதப் பொருளாக மாறியது.

வி.பி.சிந்தனுடன் அவருக்கு ஏற்பட்ட சந்திப்பு மார்க்சிய இயக்கம் பக்கம் அவரைத் திருப்பியது. 1973ஆம் ஆண்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மாநில அளவில் உருவானது. கே.பி.ஜானகியம்மாள் தலைவராகவும், பாப்பா உமாநாத் பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டார்கள். மைதிலி துணைத் தலைவராகச் செயல்பட்டார். தமிழ்நாட்டில் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டபோது அதன் முதல் அமைப்பாளராகச் செயல்பட்டார்.

கட்சியின் சார்பாகவும், மாதர் சங்கத்தின் சார்பாகவும் மாநிலம் முழுவதும் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் கலந்துகொண்டு பேசுவார். மைதிலி ஆங்கிலத்திலும், தமிழிலும் சரளமாகப் பேசுவார். அவர் சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், சிந்தனையாளர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு பல ஆண்டுகள் பணியாற்றியவர்.

1970களில் மாணவ அமைப்புகள் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்த பெண் தலைவர்களில் ஒருவர் மைதிலி சிவராமன். 70களில் ப.சிதம்பரம், என்.ராம் உள்ளிட்டோருடன் சேர்ந்து ரேடிக்கல் ரெவ்யூ என்ற ஆங்கில இதழை நடத்தினார். தமிழகத்தில் 1970 முதல் 40 ஆண்டுகளுக்கு மேலாக மார்க்சிய இயக்கத்திலும், மாதர் சங்கத்திலும் தன்னை இணைத்துக் களம் கண்டவர்.

ஜானகியம்மாள், பாப்பா உமாநாத் போன்ற தலைவர்கள் வரிசையில் மாதர் சங்கத்தைக் கட்டியமைத்த பெருமை இவருக்கு உண்டு. அதன் அகில இந்திய நிர்வாகிகளில் ஒருவராக விளங்கினார். இளம் வயதில் ஐக்கிய நாடுகள் அவையின் ஆய்வாளராகப் பணிபுரிந்து, அந்தப் பணியிலிருந்து விலகி, இயக்கத்தின் முழுநேர ஊழியராக தன்னை இணைத்துக் கொண்டவர். மார்க்சிய அறிவு ஜீவியாக விளங்கினாலும் எளியோரிடம் பழகுவதில் இவரது எளிமையான நடத்தை சாதாரண மக்களிடமும் இவரைக் கொண்டு சேர்த்தது.

சிதம்பரம் பத்மினி பாலியல் வழக்கு, வாச்சாத்தி வழக்கு, சென்னை மீனவர் போராட்டம் போன்றவற்றில் இவரது பங்கு உண்டு. வாச்சாத்தி மக்களுக்கு நீதி கிடைக்க அதை ஆவணப்படுத்திய பெருமைமிக்கவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் முக்கிய த்தலைவர்கலில் ஒருவராக விளங்கினார்.

'கஸ்தூர்பா: மகாத்மாவின் மனைவி எழுப்பும் கேள்விகள்' என்ற புத்தகமும், 'ஒரு வாழ்க்கையின் துகள்கள் (Fragments Of Life)' என்ற புத்தகமும் இவரது சிறப்பான படைப்புகளாகும்.

வயோதிகம் காரணமாக நேரடி அரசியலிலிருந்து விலகி இருந்த இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் கரோனாவுக்கான அறிகுறிகள் தென்பட்டன. இதனையடுத்து அவருக்கு நடத்திய பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த மைதிலி சிவராமன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்