நோய்த் தொற்று குறித்த மன அழுத்தத்தால் தற்கொலைகள் அதிகரிப்பு; பயம், பதற்றம் தவிர்த்தால் கரோனாவை வெல்லலாம்: தனிமைப்படுத்துதலில் இருப்போருக்கு நம்பிக்கையூட்டும் மருத்துவ, உளவியல் நிபுணர்கள்

By அ.வேலுச்சாமி

கரோனா குறித்த மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. பயம், பதற்றம் தவிர்த்து, உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டால் பாதிக்கப்பட்டவர் கரோனாவிலிருந்து விரைவில் குணமடைந்துவிடலாம் என மருத்துவர்கள் நம்பிக்கை அளித்துள்ளனர்.

தமிழகத்தில் கரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3.13 லட்சம் பேர் மருத்துவமனைகள், சிறப்பு முகாம்கள், வீடுகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, கரோனாவால் பாதிக்கப்படுவோருக்கும், அவர்களைச் சார்ந்த குடும்பத்தினருக்கும் தற்போது மன அழுத்தம் பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது.

இந்தச் சூழலில் கரோனா அச்சம் காரணமாக கடந்த 2 வாரங்களில், திருச்சி கே.கே.நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் ராமானுஜம், மணப்பாறை அருகேயுள்ள அனுக்கானத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஓட்டுநர் பிச்சைமணி (49), விழுப்புரம் மருதூர்மேடு விவசாயி சிவக்குமார் (50), ஆவடி அருகேயுள்ள திருநின்றவூர் அன்புக்கரசி(55), அரக்கோணம் அருகேயுள்ள தக்கோலம் சரவணன்(46) உள்ளிட்ட சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களில் கரோனா பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருந்தவர்கள் மட்டுமின்றி, கரோனா அறிகுறிகள் இருந்ததால் பரிசோதனை செய்துவிட்டு, அதன் முடிவுக்காக காத்திருந்தவர்களும் அடங்குவர்.

நெருக்கடியான இக்காலக்கட்டத்தில் தனிமைப்படுத்துதலில் உள்ள கரோனா தொற்றாளர்களும், பொதுமக்களும் மிகுந்த தன்னம்பிக்கை, தைரியத்துடன் இருக்க வேண்டுமென மருத்துவர்கள், உளவியல் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பயம், பதற்றம் தேவையில்லை

இதுகுறித்து திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் துணை முதல்வரும், மூளை நரம்பியல் நிபுணருமான டாக்டர் எம்.ஏ.அலீம் கூறியது: கரோனா குறித்த அச்சம் தவிர்க்கப்பட வேண்டும். அம்மை, காச நோய் பரவிய காலத்தில்கூட தனிமைப்படுத்தி இருந்து சிகிச்சை பெற்று மீண்டு வந்துள்ளோம்.

அதுபோன்றுதான் இதுவும் தனிமைப்படுத்தி, சிகிச்சை பெறக்கூடிய ஒருவகையான நோய். இதனால் பாதிக்கப்படுவோரில் 90 சதவீதம் பேர் எவ்வித பாதிப்புமின்றி குணமடைந்துள்ளனர். இறப்பு விகிதம்கூட சராசரியாக தேசிய அளவில் 1.17 சதவீதமாக உள்ளது. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து மருந்து, மாத்திரைகள் மற்றும் ஊட்டச்சத்தான உணவு வகைகளை உட்கொண்டால் போதும். நோய் குறித்த பயம், பதற்றமின்றி இருந்தாலே விரைவில் குணமடைந்துவிடலாம்.

நோய் கொல்லாத நிலையில், அதற்கு பயந்து நாமாகவே உயிரை விடுவதென்பது வேதனையானது. இதைத் தவிர்க்க வேண்டும். சமூக ஊடகங்களில் வரும் கரோனா குறித்த தேவையில்லாத, அச்சமூட்டக்கூடிய செய்திகளை தவிர்ப்பது நல்லது என்றார்.

கவலை, பயம் ஏன்?

திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரி மனோதத்துவவியல் பேராசிரியை டாக்டர் அனிதா பாண்டியன் கூறியது: சுறுசுறுப்பாக வெளியில் நடமாடிவிட்டு இப்போது 24 மணி நேரமும் வீட்டுக்குள்ளேயே இருக்கும்போது இனம்புரியாத கவலை, பயம், எரிச்சல் ஏற்படுகிறது. கரோனா வந்துவிட்டால் உடனே இறந்து விடுவோம் என்று சிலர் பயப்படுகின்றனர். சரியான நேரத்தில், உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டால் எளிதில் குணமாக முடியும் என்ற நம்பிக்கை ஒவ்வொருவரிடமும் ஏற்பட வேண்டும். இந்நோயை எதிர்கொண்டு வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மனதுக்கு இதமான பாடல்களைக் கேட்கலாம். தியானம் செய்யலாம். குடும்ப உறவுகள் மற்றும் மனதுக்கு நெருங்கியவர்களுடன் வீடியோ அழைப்பு மூலம் பேசி மன அழுத்தத்தைக் குறைக்கலாம். தனக்காகவும், தன்னைச் சார்ந்தவர்களுக்காகவும் நிச்சயம் உயிர்வாழ வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

தன்னம்பிக்கை அவசியம்

சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக்கல்லூரி மனநல மருத்துவர் அபிராமி கூறியது: ஒருவர் சாதாரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருக்கும்போது, குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உடனிருந்து ஆறுதல் சொல்வார்கள். ஆனால், கரோனா தொற்று ஏற்பட்டவர்களுடன் அதுபோன்று உடனிருக்க முடியாது என்பதால், அவர்களுக்கு மன அழுத்தம், தேவையில்லாத பயம், பதற்றம் ஏற்படுகிறது.

அதன்தொடர்ச்சியாக தூக்கமின்மை, பசியின்மை ஏற்பட்டால் உடல்நலம் மோசமடையலாம். எனவே, தனிமைப்படுத்துதலில் இருப்பவர்கள், அது குறுகிய காலம்தான் என்பதை உணர வேண்டும். பயம், பதற்றத்தை தவிர்த்து தன்னம்பிக்கையுடன் இருந்தால் எளிதில் கரோனாவை வெல்லலாம். தேவைப்பட்டால் 080-46110007 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்