எமரால்டில் மருத்துவமனை எப்போது பயன்பாட்டுக்கு வரும்? - கரோனா காலத்தில் உதவியாக இருக்கும் என சுகாதாரத்துறை எதிர்பார்ப்பு

By ஆர்.டி.சிவசங்கர்

மூன்றாண்டுகளாக நடந்து வரும் எமரால்டு மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து, பயன்பாட்டுக்கு வந்தால், கரோனா காலத்தில் பெரும் உதவியாக இருக்கும் என, சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது எமரால்டு. இப்பகுதியை ஒட்டி நேருநகர், நேருகண்டி, லாரன்ஸ், கோத்தகண்டி, அண்ணாநகர், எம்.ஜி.ஆர். நகர், உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சுமார் 2,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

பெரும்பாலும் விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் நிறைந்த எமரால்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில், அரசு, தனியார் மருத்துவமனையோ, ஆரம்ப சுகாதார நிலையமோ இல்லை. இதனால், பொதுமக்கள் சிகிச்சைக்காக தொலைதூரமுள்ள மஞ்சூர் அல்லது உதகைக்குச் செல்ல வேண்டிய சூழல் உள்ளது.

இதனால், காலவிரயம் மற்றும் பணி விரயம் ஏற்படுவதோடு, பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. மேலும், உரிய நேரத்தில் அவசர சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் உயிரிழக்கும் நிலையும் உள்ளது. இந்நிலையில், உதகை - மஞ்சூர் மையப்பகுதியாக உள்ள எமரால்டில் மருத்துவமனை அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதைத் தொடர்ந்து, அரசுத் தரப்பில் எமரால்டில் இடம் தேர்வு செய்யப்பட்டது. தொடர்ந்து அரசு மருத்துவமனை கட்ட ரூ.14 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதன் மூலம், விபத்து, அவசர சிகிச்சை, கர்ப்பிணிகளுக்கான 24 மணிநேர சிகிச்சை என, 50 படுக்கைகள் வசதியுடன் கூடிய மருத்துவமனைக்கான கட்டுமானப் பணி கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.

கட்டுமானப் பணிகள் ஓராண்டுக்குள் முடிக்க மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில், மூன்றாண்டுகளாக கட்டுமானப் பணி நிறைவடையவில்லை. கரோனா காலத்தில் இந்த மருத்துவமனை பயன்பாட்டுக்கு வந்தால், குந்தா தாலுக்காவில் கரோனா நோய்த்தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப் பெரும் உதவியாக இருக்கும் என, மருத்துவத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் பழனிசாமியிடம் கேட்டபோது, "பொது சுகாதாரத்துறை மற்றும் நோய்த் தடுப்புத்துறை சார்பில், எமரால்டு காவல் நிலையம் அருகில் வருவாய்த்துறைக்குச் சொந்தமான இடத்தில் 2.80 ஏக்கரில் ரூ.14.80 கோடியில் 50 படுக்கை வசதிகளுடன் மருத்துவமனை கட்ட அரசு நிதி ஒதுக்கியது. மருத்துவமனையில் ஒரு பல் மருத்துவர் உட்பட 7 மருத்துவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

கட்டுமானப் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருவதால், மூன்று மாதங்களில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து, சுகாதாரத்துறையிடம் ஒப்படைக்கப்படும் எனப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கரோனா காலகட்டத்தில் இந்த மருத்துவமனை செயல்பாட்டுக்கு வந்திருந்தால் பெரும் உதவியாக இருந்திருக்கும்" என்றார்.

ஒப்பந்ததாரர்கள் கூறும்போது, "மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. பூச்சு வேலைகள் முடிவடைந்து, வர்ணம் பூசம் பணிகள் மற்றும் சாலைப் பணிகள் மட்டுமே பாக்கியுள்ளன. இவை விரைவில் முடிவடைந்து, சுகாதாரத்துறையிடம் ஒப்படைக்கப்படும்" என்றனர்.

எமரால்டில் அரசு மருத்துவமனை பயன்பாட்டுக்கு வந்தால், எமரால்டு சுற்றுவட்டாரத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் பழங்குடியினர் மக்கள் பயன்பெறுவார்கள் எனப் பொதுமக்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்