அமைதியாக சட்டம் ஒழுங்கு பிரச்சினையின்றி வாழும் லட்சத்தீவு பழங்குடியின மக்கள் மீது ஏராளமான அடக்குமுறை சட்டங்களை திணித்து லட்சத்தீவின் அமைதியை குலைக்கும், லட்சத்தீவை கார்பரேட் முதலாளிகளுக்கு தாரைவார்க்கும் பாஜக நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும், அங்கு அனுப்பப்பட்டுள்ள அதிகாரியை திரும்ப அழைக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கை:
“ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார் வழிநடத்தும், பாஜக, ஆட்சிப் பொறுப்பு ஏற்ற நாள் முதல், இந்திய அரசு அமைப்புச் சட்டத்தின் அடிப்படையைத் தகர்த்து நொறுக்க, சம்மட்டி கொண்டு தாக்கி வருகின்றது. நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பு ஏற்ற ஏழாம் ஆண்டு நிறைவை ஒட்டி, கடந்த ஆறு மாதங்களாக தில்லி வீதிகளில் அமர்ந்து போராடிக் கொண்டு இருக்கின்ற விவசாயிகளின் அழைப்பை ஏற்று, நாடு முழுமையும் கருப்புக்கொடி அறப்போர் நடைபெற்றது.
அதற்கு ஆதரவு தெரிவித்து விடுத்த அறிக்கையில், பாஜக ஆட்சியின் கொடுமைகளைச் சுட்டிக் காட்டி இருந்தேன். இப்போது, நமக்கு அருகில் நிகழ்கின்ற அடுத்த கொடுமை வெளிச்சத்திற்கு வந்து இருக்கின்றது. கேரளத்திற்கு மேற்கே, அரபிக் கடலில், 32 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு கொண்ட லட்சத்தீவு இருக்கின்றது. மக்கள் தொகை ஒரு இலட்சத்திற்குள்தான். அவர்களுள் 99 விழுக்காட்டினர், பட்டியல் இனப் பழங்குடியினர். ஆனால், அவர்கள் முஸ்லிம்கள் என்பது, சங் பரிவார் கும்பலின் கண்களை உறுத்துகின்றது.
» கரோனா ஒழிப்புப்பணி: அரசு-தொண்டு நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு குழுவில் பதிவு செய்ய இணைய தள முகவரி
இந்திய அரசு அமைப்புச் சட்டத்தின்படி, காஷ்மீரில் பிற மாநிலத்தவர் நிலம் வாங்க முடியாது. ஆனால், பாஜக அரசு அந்தச் சட்டத்தைத் திருத்தி, காஷ்மீர் மாநிலத்தையும் இரண்டாகப் பிரித்து விட்டது. அதை எதிர்த்து மக்கள் வீதிக்கு வர முடியாதபடி, ஓராண்டுக்கும் மேலாக வீடுகளுக்கு உள்ளேயே அடைத்து வைத்துப் பட்டினி போட்டனர். அம்மாநிலத்தின் அனைத்துக்கட்சித் தலைவர்களையும் சிறையில் அடைத்தனர்.
அதேபோன்ற அடக்குமுறையை, இப்போது லட்சத்தீவில் மேற்கொள்கின்றனர். லட்சத்தீவுகளிலும், பிற மாநிலத்தவர் நிலம் வாங்க முடியாது. அந்த மாநில மக்கள், எளிமையான, இயற்கை வாழ்வு வாழ்ந்து வருகின்றனர். அங்கே மது கிடையாது. குற்ற வழக்குகள் இல்லை. விவசாயம் செய்யும் நிலப்பரப்பு இல்லை என்பதால், மீன்பிடித்தலும், தேங்காய் வணிகமும்தான் முதன்மையான தொழில்.
மாட்டுக்கறிதான் முதன்மை உணவு. பள்ளி மாணவர்களுக்கான பகல் உணவிலும் கூட மாட்டுக்கறியே வழங்கப்பட்டு வந்தது. லட்சத்தீவு, இந்திய ஒன்றிய அரசின் நேரடி ஆட்சிப் பகுதி. ஆனால், துணைநிலை ஆளுநர் கிடையாது. தலைமைப் பொறுப்பில், (Administrator) தினேஷ் ஷர்மா இருந்து வந்தார். கடந்த டிசம்பர் மாதம் இயற்கை எய்தினார். அடுத்து, பிரபுல் கோடா பட்டேல் என்பவரை, நரேந்திர மோடி அனுப்பி வைத்தார்.
அவர், மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, அந்த மாநில உள்துறை இணை அமைச்சர் பொறுப்பு வகித்தவர். ஆர்எஸ்எஸ் கும்பல் பிறப்பித்த ஆணைகளை நிறைவேற்றத் தொடங்கினார். LDAR (Lakshadweep Development Authority Regulations) என்ற சட்டத்தை கொண்டு வந்தார். இதன்படி, லட்சத்தீவில் வசிக்கும் எவரையும் எந்த காரணமும் கூறாமல், நிலத்தில் இருந்து வெளியேற்றவோ அல்லது மாற்று இடத்தில் வசிக்கவோ உத்தரவிடலாம்.
குற்றம் புரிவோர் இல்லாத லட்சத்தீவில், PASA(Lakdhadweep Anti-Social Activity Regulations) என்ற சட்டத்தின் கீழ், எவரையும் காரணம் எதுவுமே இல்லாமல் கைது செய்து, ஓராண்டு சிறையில் அடைக்கலாம்.
Draft Panchayat Notification என்ற பெயரில், இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்கள் ஊர் ஆட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட முடியாது.
Lakshadweep Animal Preservation Regulations என்ற பெயரில் கால்நடைகள் பாதுகாப்பு சட்டம் என்ற சட்டத்தின் திரை மறைவில், நேரடியாகவோ, மறைமுகமாகவோ, மாட்டுக்கறி வைத்து இருக்கவோ, பாதுகாக்கவோ, கொண்டு செல்லவோ கூடாது.
மீறினால் மாட்டுக்கறி பறிமுதல் செய்யப்படுவதோடு, கைது செய்யப்பட்டு, 10ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும்; 1 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாய் வரை தண்டம் கட்ட வேண்டும்.
இனி பள்ளிகளில் மாட்டுக்கறி கிடையாது, பள்ளிகளில் மதிய உணவு சமைக்கும் ஊழியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் பணி நீக்கம்.
38 க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் மூடப்படுகின்றன, சுற்றுலா என்ற பெயரில் சாராயக்கடைகளைத் திறக்க ஆணை. 190 க்கும் மேற்பட்ட சுற்றுலா துறை ஊழியர்கள் பணி நீக்கம். கடற்கரையின் அழகு கெட்டுப்போகிறது என்ற பெயரில், மீனவர்கள் தங்களது வலைகள் உட்பட மீன் பிடி கருவிகளை பாதுகாக்கும் கூடங்கள் (Sheds) அனைத்தையும் பிய்த்து வீசி விட்டனர்.
பவழப் பாறைகளையும், இயற்கையின் பேரழகையும் கொண்ட லட்சத்தீவின் கடற்கரையையும், நிலப்பரப்பையும், தனது நண்பர்களான கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தங்கத்தட்டில் வைத்து தாரை வார்த்து கொடுக்க நரேந்திர மோடியால் அனுப்பப்பட்ட, பிரபுல் கோடா படேல், அந்த வேலையை, மின்னல் வேகத்தில் செய்து வருகின்றார். பொறுப்பு ஏற்ற நான்கே மாதங்களுக்குள், இத்தனை அத்துமீறல்கள்.
நீண்ட நெடுங்காலமாக, லட்சத்தீவு மக்கள் தங்களது வணிகம் நடவடிக்கைகளை, கேரள மாநிலம் பேப்பூர் துறைமுகம் வழியாகவே செய்து வருகின்றனர். இனி, கர்நாடகத்தின் மங்களூரு துறைமுகம் வழியேதான் நடக்க வேண்டும் என்ற உத்தரவையும் போட்டுள்ளார். லட்சத்தீவு வணிகம் அனைத்தையும், கேரளாவில் இருந்து அப்படியே பாஜக ஆளும் கர்நாடகாவுக்கு கொண்டு சென்று விட வேண்டும்; லட்சத்தீவு மக்களின் கேரள உறவையும் தொடர்புகளையும் துண்டித்து விட வேண்டும் என்பதுதான் நோக்கம்.
லட்சத்தீவு மக்களின் அடிப்படை உரிமைகளில் கை வைக்கும் பிரபுல் படேல் நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டித்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எளமரம் கரீம், ஆரிஃப் ஆகியோர், குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதி உள்ளனர். பிரபுல் கோடா படேலைத் திரும்ப அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
லட்சத் தீவில், பாஜக நரேந்திர மோடி அரசு மேற்கொண்டு வருகின்ற அடக்குமுறையை, மதிமுக வன்மையாகக் கண்டிக்கின்றது. பிரபுல் கோடா படேலை உடனே திரும்பப் பெற வேண்டும் என, குடியரசுத் தலைவரை வலியுறுத்துகின்றோம்”.
இவ்வாறு வைகோ வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago