தூத்துக்குடி மாவட்டம் வசவப்பபுரம் பரம்பு பகுதியில் மண்ணுக்குள் புதைந்துள்ள ஏராளமான முதுமக்கள் தாழிகள், பழங்காலப் பொருட்கள் வெளியே தெரியத் தொடங்கியுள்ளன. எனவே, இந்தப் பகுதியில் முழுமையான அகழாய்வுப் பணியை மேற்கொள்ள வேண்டும் என கிராம மக்கள் மற்றும் தொல்லியல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக தொல்லியல் துறை சார்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கை ஆகிய இடங்களில் கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி முதல் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக இந்தப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு முடிந்ததும் மீண்டும் அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெறவுள்ளன.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் வசவப்பபுரம் பரம்பு பகுதியில் மண்ணுக்குள் புதைந்துள்ள ஏராளமான முதுமக்கள் தாழிகள், பழங்காலப் பொருட்கள் வெளியே தெரிய வந்துள்ளன. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வடத்துக்கு உட்பட்டது வசவப்பபுரம் கிராமம். தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் இரு மாவட்ட எல்லையில் இந்த கிராமம் உள்ளது.
இந்த கிராமத்தில் பெரிய பரம்பு பகுதி உள்ளது. இந்த பரம்பு பகுதியில் கடந்த ஆண்டு சாலைப் பணிக்காக ஜேசிபி மூலம் மணல் எடுத்துள்ளனர். அப்போது மணலுக்கு அடியில் புதையுண்ட முதுமக்கள் தாழிகள், மண் பாண்டங்கள் வெளியே தெரிந்துள்ளன. அதனை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தற்போது சில நாட்களாகப் பெய்த மழை காரணமாக அந்தப் பொருட்கள் அனைத்தும் நன்றாக வெளியே தெரிகின்றன.
இந்த பரம்பு பகுதியில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் மண்ணில் புதைந்த நிலையில் உள்ளன. இந்தத் தாழிகளுக்குள் விதவிதமான ஜாடிகள் உள்ளிட்ட பல்வேறு மட்பாண்டப் பொருட்கள் காணப்படுகின்றன. மேலும், இரும்பு ஆயுதங்கள், விளக்கு தூபம் உள்ளிட்ட பொருட்களும் காணப்படுகின்றன. இது குறித்து வசவப்பபுரம் கிராம மக்கள் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் இந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதுகுறித்து இந்தப் பகுதியைச் சேர்ந்த தமிழ் முருகன், கணேசன் ஆகியோர் கூறும்போது, ''இந்த பகுதியில் ஏற்கனவே மணல் அள்ளப்பட்டதாலும், தற்போது பெய்த மழையாலும் மண்ணில் புதைந்துள்ள ஏராளமான பழங்கால பொருட்கள் வெளியே தெரிகின்றன. இது தொடர்பாக வருவாய்த் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளோம். வசவப்பபுரம் பரம்பு பகுதியில் தமிழக அரசு முழுமையான அகழாய்வு செய்து, இங்கே புதையுண்டு கிடக்கும் தமிழர்களின் பழங்கால நாகரிகத்தை, பண்பாட்டை உலகறியச் செய்ய வேண்டும்'' என்று தெரிவித்தனர்.
இதுகுறித்துத் தொல்லியல் ஆர்வலரான எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறும்போது, ''தாமிரபரணி ஆற்றங்கரை நெடுகிலும் பழங்காலத் தமிழர்கள் வாழ்ந்தற்கான அடையாளங்கள் பல இடங்களில் புதையுண்டு கிடக்கின்றன என்பதை 1902-ல் ஆய்வு செய்த அறிஞர் அலெக்ஸாண்டர் இரியா கண்டுபிடித்தார். ஆதிகால மக்கள் வாழ்ந்த இடம் தாமிரபரணி ஆற்றங்கரையே என்பதை அறிந்த அவர், தாமிரபரணிக் கரையோரம் மொத்தம் 37 இடங்களில் தொல்பொருள் ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதோடு அந்த இடங்களில் எல்லாம் சிறிய அளவில் ஆய்வுகளையும் மேற்கொண்டார்.
இந்த 37 இடங்களுக்கு எப்படிச் செல்ல வேண்டும் என்று 100 வருடங்களுக்கு முன்பே அவர் வரைபடமும் தயாரித்து அதை ஆவணப்படுத்தியுள்ளார். அதில் வசவப்பபுரம் பரம்பு எழுதப்பட்டுள்ளது. அவர் குறிப்பிடும் 37 இடங்களில் வசவப்பபுரம் மற்றும் கிருஷ்ணாபுரம் பரப்பு ஆகிய இரு இடங்களையும் சுட்டிக் காட்டியுள்ளார். அலெக்ஸாண்டர் இரியா கூறிய 37 இடங்களிலும் ஆய்வு செய்ய வேண்டும் என்று நான் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தேன்.
அதன் அடிப்படையில் ஆதிச்சநல்லூர், சிவகளையில் இரண்டாம் கட்ட ஆய்வும், கொற்கையில் முதல் கட்ட ஆய்வும் நடத்தத் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதுபோல தாமிரபரணி கரையில் அலெக்ஸாண்டர் இரியா அடையாளம் கண்ட தொல்லியல் தலங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என அறிவித்து, அதற்கான நிதி ஒதுக்கீடும், அதிகாரி நியமனமும் செய்துள்ளனர்.
ஆனால் தொடர்ந்து ஏற்பட்ட கரோனா நோய்த்தொற்று காரணமாக இந்தப் பணிகள் தடைப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் வரும் செப்டம்பர் மாதம் வரை அகழாய்வு செய்ய மாநில அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே முதல் கட்டமாக வசவப்பபுரம் பரம்பு பகுதியை ஆய்வாளர்கள் ஆய்வு செய்து முறையான அறிக்கை அளித்து, அடுத்த நிதியாண்டில் இங்கும் அகழாய்வு செய்ய தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும்'' என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
12 hours ago