கோவை மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை: மாவட்ட ஆட்சியர் தகவல்

By டி.ஜி.ரகுபதி

கோவை மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் தெரிவித்தார்.

கோவை ஒண்டிப்புதூரில் உள்ள கதிரி மில்ஸ் வளாகத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் அமைப்பின் சார்பில், 306 படுக்கைகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. காணொலிக் காட்சி மூலம் சென்னையில் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த மையத்தை இன்று பயன்பாட்டுக்குத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கா.ராமச்சந்திரன் (வனத்துறை), அர.சக்கரபாணி (உணவுப் பொருள் வழங்கல்துறை ), மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொற்று குறையும்

அதன் பின்னர், மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"மாவட்டத்தில் முன்னரே, 3,100 படுக்கை வசதிகளுடன், சுமார் 12 முதல் 15 வரையிலான கரோனா சிகிச்சை மையங்கள் உள்ளன. தற்போது இந்த மையத்தை முதல்வர் திறந்து வைத்துள்ளார். தொற்றுப் பரவலைத் தடுக்க, ஊராட்சி அளவிலான கரோனா சிகிச்சை மையங்களையும் தொடங்க அறிவுறுத்தியுள்ளோம்.

அதில் சில மையங்கள் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. அதேபோல், முழுக்க முழுக்க தனியார் பங்களிப்புடன், கோவை மக்கள் இதுபோன்ற கரோனா சிகிச்சை மையங்களையும் ஏற்படுத்தி வருகின்றனர். தற்போதைய முழு ஊரடங்கால், கரோனா தொற்று ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவுவது பெருமளவில் குறைக்கப்படும். முழு ஊரடங்கு அமல்படுத்தி 2 வாரங்கள் முடிந்துள்ளன.

இதன் முழுப் பலன்கள் அடுத்த சில நாட்களில் தெரியவரும். அதேசமயம், பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளியைப் பின்பற்றுதல், தேவையற்ற இடங்களில் குழுவாகக் கூடாமல் இருத்தல் ஆகியவற்றையும் பின்பற்ற வேண்டும்.

அப்போது, இந்த கரோனா தொற்றின் சங்கிலிப் பரவல் முழுக்க முழுக்கத் தடைப்படும். ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவுவது முழுக்க முழுக்கத் தடைப்படும். ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு மேல் பரவினால், அது கட்டுப்பாடு இன்றி கரோனா பரவுவதாகும். ஒருவரிடம் இருந்து ஒருவருக்கும் குறைவாகப் பரவினால், கரோனா கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இதுதான் தொற்று விதிகளின் அடிப்படை. எனவே, அதன் தொடர்ச்சியாக, இந்த முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.

மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் என மாவட்டத்தில் ஏறத்தாழ 700 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், இந்தக் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மற்றும் பிற பகுதிகளில், முழு ஊரடங்கால், மக்களுக்கு அத்தியாவசியத் தேவைகளில் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, மாநகராட்சி மற்றும் தோட்டக் கலைத்துறை மூலம் வாகனங்கள் மூலம் வீடு வீடாகச் சென்று காய்கறி விற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இம்முயற்சிகள் மூலமும், மக்களின் முழு ஒத்துழைப்பு மூலமும், தனியார் நிறுவனங்கள் அனைத்தும் இணைந்து, நேரடியாக கரோனாவை எதிர்க்கும் மருத்துவத்துறைக்கு, அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்து, கரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வருவோம் என நம்பிக்கை உள்ளது. தொற்றுப் பரவலைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தொற்று குறையக்கூடிய சமிக்ஞைகள் நமக்குத் தெரிகின்றன.

ஆக்சிஜன் தேவை பூர்த்தி

ஆக்சிஜன் தேவையைப் பொறுத்தவரை இம்மாவட்டத்தை மூன்றாகப் பிரித்துக் கொள்ளலாம். முதலாவது அரசு மருத்துவமனைகள். தொடக்கம் முதல் தற்போது வரை அங்கு எவ்வித தட்டுப்பாடுகளுமின்றி நடக்கிறது. தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவைக் கழகம் மூலமாக, கோவையில் உள்ள 2 பெரிய அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான ஆக்சிஜன் திரவ வடிவில் நேரடியாக வழங்கப்படுகிறது.

அடுத்து மாவட்டத்திலுள்ள பெரிய தனியார் மருத்துவமனைகள், தங்களுக்குத் தேவையான ஆக்சிஜனை நேரடியாக, ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து பெற்று, பயன்படுத்தி வருகின்றன. அடுத்தது, தினமும் ஒரு கிலோ லிட்டர் அளவில் ஆக்சிஜன் பெறக்கூடிய இடைப்பட்ட அளவிலான 18 முதல் 20 தனியார் மருத்துவமனைகள். இங்கு 100 முதல் 300 படுக்கைகள் இருக்கும். அவர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும்போது, பிற மாவட்டங்கள், பிற மாநிலங்களில் இருந்து சென்னை கட்டுப்பாட்டு அறை மூலம் பெற்று, அங்கிருந்து பிரித்து அனைவருக்கும் வழங்கி வருகிறோம்.

அடுத்த 12 மணி நேரத்தில், ஏதாவது ஒரு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருந்தால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டளை மையத்தில் தகவல் தெரிவிக்கின்றனர். உடனடியாக அங்கு ஆக்சிஜன் இடமாற்றம் செய்து இப்பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறாம். இன்றைய தேதியில் தமிழகத்துக்குப் போதிய அளவில் ஆக்சிஜன் கிடைக்கிறது. கோவை மாவட்டத்துக்கும் போதிய ஆக்சிஜன் நடப்பு நாளில் இருந்து கிடைத்து வருகிறது. மாநில அரசில் இருந்து 2 ஆயிரம் மருத்துவர்கள், 7 ஆயிரம் செவிலியர்கள் அங்கு பணியமர்த்தப்பட்டு, மாவட்டத்துக்கு தேவையான அளவில் வழங்கப்பட்டுள்ளனர்”.

இவ்வாறு ஆட்சியர் எஸ்.நாகராஜன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்