இணைய வழி வகுப்புகள் தொடர்பான புகார்கள் மீது உடனடி நடவடிக்கை; புகார் தெரிவிக்க ஹெல்ப்லைன்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

By செய்திப்பிரிவு

இணைய வழி வகுப்புகளைப் பதிவு செய்யவும், மாணவ, மாணவிகள் தங்கள் புகார்களைத் தெரிவிக்க உதவி எண் ஒன்றை உருவாக்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (மே 26) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"கரோனா பெருந்தொற்று காரணமாக, தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு வகுப்புகள் இணைய வழியாக கடந்த சுமார் ஓராண்டாக எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வகுப்புகளின் செயல்பாடுகள் குறித்து, சமீபத்தில் வரப்பெற்ற சில செய்திகளின் தன்மையைக் கருத்தில் கொண்டு இணைய வழி வகுப்புகளை முறைப்படுத்துவது குறித்தும் அதில் தவறுகள் நடக்கும் பட்சத்தில் அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் ஆலோசனை செய்வதற்கு முதல்வர் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சமீபத்தில் இணைய வகுப்பு ஒன்றில் நடைபெற்ற சில விரும்பத்தகாத நிகழ்வுகள் குறித்தும், அதன் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை குறித்தும் முதல்வர் ஆய்வு செய்தார். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறக் கூடாது என்றும், சட்டபூர்வமான நடவடிக்கை சம்பந்தப்பட்டவர்கள் மீது எடுக்கப்படும் என்றும், மற்ற பள்ளி, கல்லூரிகளில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருப்பதற்குப் பின்வரும் முடிவுகளையும், உத்தரவுகளையும் முதல்வர் அறிவித்துள்ளார்.

* இணைய வழியாக நடத்தப்படும் வகுப்புகள் அந்தந்தப் பள்ளியினால் பதிவு செய்யப்பட வேண்டும். இப்பதிவினைச் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் இருவரைக் கொண்ட குழுவால் அவ்வப்போது ஆய்வு செய்யப்பட வேண்டும்.

* இணைய வழி வகுப்புகள் நடத்துவது தொடர்பாக முறையான வழிகாட்டுதல்களை வகுத்து வெளியிட பள்ளிக் கல்வித்துறை ஆணையர், கல்லூரிக் கல்வி இயக்குநர், கணினி குற்றத் தடுப்புப் பிரிவு மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான காவல் அலுவலர்கள், கல்வியாளர்கள் மற்றும் உளவியல் நிபுணர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்படும். அக்குழு, மாநிலத்திலுள்ள பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பாலியல் தொல்லைகள் தரப்படுவதைத் தடுப்பதற்கு உரிய வழிமுறைகளைப் பரிந்துரைக்கவும் இணையவழி வகுப்புகளை நெறிப்படுத்துவது குறித்தும் வழிகாட்டு நெறிமுறையினை ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டுமென்று முதல்வர் அறிவுறுத்தினார்.

* இணைய வகுப்புகளில் முறையற்ற வகையில் நடந்துகொள்வோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மாணவ, மாணவிகள் தங்கள் புகார்களைத் தெரிவிக்க ஒரு 'ஹெல்ப்லைன்' எண் உருவாக்கவும் முதல்வர் அறிவுறுத்தினார்.

* மேலும், இணைய வகுப்புகள் குறித்து வரும் புகார்களை மாநிலத்தின் கணினி குற்றத் தடுப்புக் காவல் பிரிவில் காவல் கண்காணிப்பாளர் நிலையில் உள்ள அலுவலர் உடனடியாகப் பெற்று சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் விசாரித்து துரிதமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் முதல்வர் உத்தரவிட்டார்".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பின்னணி என்ன?

சென்னை கே.கே.நகரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் வணிகவியல் ஆசிரியராகப் பணியாற்றுபவர் ராஜகோபாலன். அவர் மீது மாணவி ஒருவர் எழுப்பிய பாலியல் புகாரை முன்னாள் மாணவி ஒருவர் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார். வகுப்பில் அவர் மாணவிகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதாகவும், ஒரு மாணவியை சினிமாவுக்கு அழைக்கும் அளவுக்கு சென்றதாகவும், இதகுறித்து துறைத்தலைவரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.

மாணவிகளிடம் நேரடியாகவும், செல்போனிலும் அத்துமீறியதாகவும், ஆன்லைன் வகுப்புகளின்போதும் எல்லை மீறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இது சமூக ஊடகங்களில் வைரலானது.

இதையடுத்து, ராஜகோபாலன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இச்சம்பவத்தின் அடிப்படையில், தற்போது ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

10 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்