வேலூரில் நோயாளிகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்களில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், இம்மாதம் இறுதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மருத்துவம் சார்ந்த பணிகளும் பால், குடிநீர், உணவு உள்ளிட்டவற்றை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், பல்வேறு நோய்களால் அவதிப்படும் நோயாளிகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்களுக்கும் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வரும் ஒருசில ஆட்டோ ஓட்டுநர்கள் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அதிகக் கட்டணத்தை வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில், பெரும்பாலான மக்கள் கரோனா அறிகுறி காரணங்களுக்காகவும், கரோனா பாதிப்புகளுக்கும் ஆம்புலன்ஸ் வாகனத்தை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டியுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் கிடைக்காததால் அவசரத் தேவைக்காகவும், நோயாளிகளை எப்படியாவது காப்பாற்றி ஆக வேண்டும் என்ற எண்ணத்தால் அருகாமையில் உள்ள ஆட்டோக்களை சவாரிக்கு அழைக்கின்றனர்.
முழு ஊரடங்கால் வருமானம் இன்றித் தவிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் இதைப் பயன்படுத்திக் கொண்டு, வேலூர் மாநகரில் 3 கிலோ மீட்டர் தூரம் செல்வதற்குக் குறைந்தபட்சம் ரூ.500 முதல் ரூ.600 வரை கட்டணம் வசூலிப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். காட்பாடியில் இருந்து வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்குச் செல்ல ஆயிரக்கணக்கில் பேரம் பேசப்படுகிறது.
இதுகுறித்து, பொதுமக்கள் தரப்பில் ஒருவர் கூறும்போது, "வேலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக ஆட்டோ, கால் டாக்ஸி, ஓலா உள்ளிட்ட அனைத்து போக்குவரத்துச் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. ரயில் சேவை மட்டும் இயக்கப்படுகின்றது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் இருந்து ஒரு தம்பதி காட்பாடிக்கு ரயிலில் வந்தனர்.
காட்பாடியில் இருந்து கணியம்பாடிக்கு ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தவர்கள், காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து கணியம்பாடி செல்ல ஆட்டோவை அழைத்தனர். முழு ஊரடங்கு என்பதால், ஒருசில ஆட்டோகள் மட்டுமே அந்த வழியாகச் சென்றன. அதில், ஒரு ஆட்டோவை மடக்கி கணியம்பாடிக்குச் செல்ல வேண்டும், எவ்வளவு எனக்கேட்டபோது, ஆட்டோ டிரைவர் 3,000 ரூபாய் கேட்டுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்தத் தம்பதியர், தாங்கள் கொண்டு வந்த பைகள் மற்றும் குழந்தைகளுடன் நடந்தே கணியம்பாடி சென்றனர். எனவே, பொதுமக்கள் மற்றும் நோயாளிகளிடம் அதிகப்படியான கட்டணத்தை வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது வேலூர் வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறினார்.
இதுகுறித்து, வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் 'இந்து தமிழ் திசை' இணையதளத்திடம் கூறும்போது, "முழு ஊரடங்கு காரணமாக ஆட்டோக்கள் இயங்க வேலூர் மாவட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் கருதி நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனைக்குச் சில பகுதிகளில் ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நோயாளிகளிடம் அதிகக் கட்டண வசூலில் ஈடுபடும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீதும், ஆதாரபூர்வமாக பொதுமக்கள் புகார் அளித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர்கள் மூலம் ஆட்டோ கட்டண வசூல் குறித்துக் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும். குற்றச்சாட்டு உண்மை என்பது தெரியவந்தால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago