காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா அரசு கட்ட உத்தேசித்துள்ள மேகதாது அணை திட்டத்தை தமிழ்நாடு ஒருபோதும் அனுமதிக்காது என, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அமைச்சர் துரைமுருகன் இன்று (மே 26) வெளியிட்ட அறிக்கை:
"15.4.2021 நாளிட்ட ஆங்கில செய்தித்தாள் ஒன்றில், கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்காக, ஆரம்பக்கட்டப் பணிகளான சாலை அமைத்தல், கட்டுமானப் பொருட்களைச் சேகரித்தல் போன்ற வேலைகள் நடைபெற்று வருவதாக செய்தி வெளியானது.
மேற்படி நாளேட்டுச் செய்தியின் அடிப்படையில், மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு, வனத்துறை மற்றும் மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின் வனப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் 2006-ம் ஆண்டைய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை ஆகியவற்றின்படி, உரிய அனுமதியினைப் பெற்றுள்ளதா என்பதை அறிவதற்காக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து அசல் விண்ணப்பம் (O.A.No.111 of 2021 (SZ)) வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.
தேசிய பசுமை தீர்ப்பாயம், தெற்கு மண்டலம், சென்னை, 15.04.2021 அன்று ஆங்கில செய்தித்தாளில், மேகதாது அணை பற்றி வெளியான செய்திகளைக் கருத்தில் கொண்டு, தன்னிச்சையாக 21.05.2021 அன்று இதுகுறித்த ஆய்வு செய்து தீர்ப்பாயத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க ஒரு குழுவை அமைத்துள்ளது.
இந்தக் குழுவில் ஒருங்கிணைந்த மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்திலிருந்து ஒருவர், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திலிருந்து ஒருவர், காவிரி நீர்வாரி நிகாம், கர்நாடகத்திலிருந்து ஒருவர் மற்றும் கர்நாடக அரசிலிருந்து கூடுதல் வனப் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் உள்ளனர்.
இந்தக் குழு, மேகதாது அணை யைக்கட்டினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் தற்போதைய நிலை ஆகியவை குறித்து அதன் அறிக்கையை 05.07.2021-க்கு முன்பாக அளிக்க வேண்டும் என ஆணையிட்டுள்ளது. மேலும், இந்தக் குழுவுக்குக் கர்நாடகத்தின் தலைமை வனப் பாதுகாப்பு அதிகாரி தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க ஆணையிட்டுள்ளது.
இந்த வழக்கில் 11 பிரதிவாதிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில், தமிழ்நாட்டிலிருந்து தலைமைச் செயலாளர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் மற்றும் பொதுப்பணித் துறையின் முதன்மைச் செயலாளர் சேர்க்கப்பட்டுள்ளனர். காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் ஒரு பிரதிவாதியாகும். மேலும், இவ்வழக்கின் பிரதிவாதிகளின் பதில் மனுக்களைத் தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டு வழக்கினை மறு விசாரணைக்கு 05.07.2021 அன்றைய தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இதற்கிடையில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய நீர்வளக் குழுமம் அனுமதி அளித்ததைத் திரும்பப் பெறவும், விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்குத் தடை ஆணை வழங்கவும் கோரி, தமிழ்நாடு அரசு 30.11.2018 அன்று மனு ஒன்றினை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின், ஆற்றுப் பள்ளத்தாக்கு மற்றும் நீர்மின் திட்டங்கள் குறித்த வல்லுநர் குழு 19.07.2019 அன்று நடைபெற்ற தனது 25-வது கூட்டத்தில் தமிழ்நாட்டின் இசைவு இல்லாமல் மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படாது எனத் தெரிவித்துள்ளது.
இது தவிர, இயக்குநர், திட்ட மதிப்பீட்டு இயக்குநகரம், மத்திய நீர்வளக் குழுமம், கர்நாடக நீர்வளத்துறைச் செயலாளர் ஆகியோர் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றையும் 05.12.2018 அன்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ளது. இவ்விரு மனுக்களும் நிலுவையில் உள்ளன.
இதற்கிடையில், இத்திட்டத்தை, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பரிசீலிக்க எடுத்துக்கொள்வதாகத் தெரியவந்ததை அடுத்து, தமிழ்நாடு அரசு தெரிவித்த எதிர்ப்பின் பேரில், அடுத்தடுத்து நடைபெற்ற ஆணையத்தின் மூன்று கூட்டங்களில் மேகதாது அணை பற்றிய விவாதம் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
இந்தப் பிரச்சினை குறித்து, தமிழக வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா அரசு கட்ட உத்தேசித்துள்ள மேகதாது அணை திட்டத்தை தமிழ்நாடு ஒருபோதும் அனுமதிக்காது".
இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago