ஒரே வாரத்தில் சிவகங்கை மருத்துவக் கல்லூரிக்கு 3 டீன்கள்: குழப்பும் சுகாதாரத்துறையால் கரோனா கண்காணிப்பு பணியில் தொய்வு

By இ.ஜெகநாதன்

ஒரே வாரத்தில் சிவகங்கை மருத்துவக் கல்லூரிக்கு 3 டீன்கள் பணிபுரியும் நிலை ஏற்பட்டுள்ளது. குழப்பும் சுகாதாரத்துறையால் கரோனா கண்காணிப்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை மருத்துவக் கல்லூரி டீனாக ரத்தினவேல் பணிபுரிந்தார். இந்நிலையில் மே 17-ம் தேதி திடீரென அவர் மதுரைக்கு மாற்றப்பட்டு, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீன் சங்குமணி சிவகங்கைக்கு நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணனுக்கும், அங்குள்ள மருத்துவக் கல்லூரி டீன் மற்றும் சிறப்பு அலுவலராக பணிபுரிந்த சுகந்தி ராஜகுமாரிக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், சுகந்தி ராஜகுமாரி விடுப்பில் சென்றார்.

இதையடுத்து நேற்று திடீரென சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி டீன் சங்குமணி, விருதுநகர் மருத்துவக் கல்லூரி டீன் மற்றும் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து சிவகங்கைக்கு, தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி டீன் ரேவதி நியமிக்கப்பட்டுள்ளார்.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று மற்றும் கரோனா அறிகுறியுடன் 650-க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். கரோனா சிகிச்சை பணியை கல்லூரி டீன் தான் கண்காணிக்க வேண்டும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இப்பணியில் ஒரே வாரத்தில் 3 பேர் பணிபுரிவது மருத்துவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கரோனா சிகிச்சைப் பணி கண்காணிப்பிலும் தொய்வு ஏற்படும்நிலை உண்டாகியுள்ளது. இதற்கிடையில் டீன் சங்குமணி தனக்கு மீண்டும் சிவகங்கையிலேயே பணி வழங்க வேண்டுமென ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மருத்துவர்கள் சிலர் கூறுகையில், ‘மருத்துவக் கல்லூரியில் முக்கியப் பணியிடமாக டீன் உள்ளது. மாவட்ட நிர்வாகம், அமைச்சர் ஆய்வுக் கூட்டத்திற்கு அவர் தான் செல்வார்.

முக்கியத்துவம் வாய்ந்த டீன்களை கரோனா சமயத்தில் அடிக்கடி மாற்றுவது தேவையில்லாத குழப்பத்தை தான் ஏற்படுத்தும். பணிமாறுதல் செய்யப்பட்ட மற்ற 3 டீன்களில் யாரையாவது விருதுநகருக்கு நியமித்திருக்கலாம்,’ என்று கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE