பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிக்கத் தனியாகக் குழு அமைக்க முடிவு செய்துள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (மே 25) செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது:
"சென்னையில் பிரபல தனியார் பள்ளியில் பாலியல் புகாருக்கு உள்ளான ஆசிரியர் கைதாகியுள்ளார். அந்த ஆசிரியர் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். இதுகுறித்து காவல்துறை விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்கும்.
ஆன்லைன் வகுப்புகள் குறித்து ஏற்கெனவே வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளோம். அதை யாரும் பின்பற்றவில்லை என்பது, இதைப் பார்க்கும்போது தெரிகிறது. அந்த வழிமுறைகளை மீண்டும் வலியுறுத்துவோம்.
பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிக்க தனியாகக் குழு அமைக்கவும் முடிவு செய்துள்ளோம். இம்மாதிரியான புகார்களின் உண்மைத் தன்மையைப் பரிசோதிக்க வேண்டும். நல்லாசிரியர்கள் மீதும் தேவையில்லாத புகார்கள் வந்துவிடக் கூடாது. கமிட்டி அமைத்து புகார்கள் பெறப்படும்.
இம்மாதிரியான சம்பவம் நடக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இது எங்களுக்கே ஒரு பாடம். இம்மாதிரியான புகார்களை ஏற்கெனவே கல்வி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளோம் எனப் பல முன்னாள் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
பள்ளியில் இதற்கென ஒரு கமிட்டி அமைக்க வேண்டும், அதில், பெண் ஆசிரியர் இருக்க வேண்டும். இந்தக் குழு எல்லா பள்ளிகளிலும் உள்ளதா எனக் கண்காணிக்கப்படும்.
சம்பந்தப்பட்ட பள்ளியில் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் தெரிவிக்க யாரும் பயப்பட வேண்டாம், அவர்களின் ரகசியத்தன்மை காக்கப்படும் என, இவ்வழக்கை விசாரிக்கும் ஐபிஎஸ் அதிகாரி ஜெயலட்சுமியும் சொல்லியிருக்கிறார். எனவே, அச்சப்படாமல் புகார் அளிக்க வேண்டும்".
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
பின்னணி என்ன?
சென்னை கே.கே.நகரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் வணிகவியல் ஆசிரியராகப் பணியாற்றுபவர் ராஜகோபாலன். அவர் மீது மாணவி ஒருவர் எழுப்பிய பாலியல் புகாரை முன்னாள் மாணவி ஒருவர் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார். வகுப்பில் அவர் மாணவிகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதாகவும், ஒரு மாணவியை சினிமாவுக்கு அழைக்கும் அளவுக்கு சென்றதாகவும், இதுகுறித்து துறைத்தலைவரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.
மாணவிகளிடம் நேரடியாகவும், செல்போனிலும் அத்துமீறியதாகவும், ஆன்லைன் வகுப்புகளின்போதும் எல்லை மீறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இது சமூக ஊடகங்களில் வைரலானது.
இதுகுறித்து அசோக் நகர் அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை நடத்தினர். இதற்கிடையில், சென்னையில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு காவல் துணை ஆணையர் ஜெயலட்சுமி அந்தப் பள்ளிக்கு நேற்று மதியம் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
ஆசிரியர் ராஜகோபாலனை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago