கெஞ்சிக் கேட்கிறேன்; கரோனா சங்கிலியை உடைக்க ஊரடங்கைக் கடைப்பிடியுங்கள்: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

''தமிழகம் இப்போது கரோனா தொற்று எண்ணிக்கையில் உச்சத்தை நோக்கிப் போவதற்குக் காரணம் அதிகப்படியான மக்களின் வெளிநடமாட்டம்தான். தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நாம் அமல்படுத்திய பிறகு சிறிதளவு தொற்று குறைந்து இருக்கிறதே தவிர, கட்டுக்குள் வரவில்லை. ஆகவே கெஞ்சிக் கேட்கிறேன், யாரும் வெளியில் வராதீர்கள்'' என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ள காணொலியில், மாநிலத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கரோனா பரவலைத் தடுப்பதற்கான அரசின் விதிமுறைகளைத் தவறாமல் கடைப்பிடிக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரது பேச்சு:

“தமிழக மக்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.

தமிழகத்தில் புதிதாக அரசு அமைந்து இரண்டு வாரங்கள்தான் ஆகி இருக்கிறது. இந்த இரண்டு வாரங்களில் ஏராளமான திட்டங்களைத் தமிழ்நாட்டு மக்களுக்கு நிறைவேற்றிக் கொண்டு வருகிறோம்.

கரோனா நிவாரணமாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,000 ரூபாய், பெண்கள் எல்லோருக்கும் சாதாரண கட்டணப் பேருந்துகளில் கட்டணமில்லாத பயணம், ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு அவர்கள் தகுதிக்கேற்ற வேலைகள், இழப்பீடுகள் தருதல், தூத்துக்குடி வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன.

எழுவர் விடுதலைக்காக குடியரசுத் தலைவருக்குக் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது, கரோனா நோயாளிகளுக்கும் முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தில் செலவுத் தொகையைப் பெறலாம் என்று அறிவித்திருக்கிறோம், ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தின்படி பெறப்பட்ட மனுக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றம். இவ்வாறு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறேன்.

இது அனைத்தையும்விட முக்கியமானது கரோனா தடுப்புப் பணிகள்தான். கடந்த இரண்டு வாரங்களில் 17,000 புதிய படுக்கைகள் மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டன. இதில் 7,800 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள், 30 இயற்கை மருத்துவ மையங்கள் திறக்கப்பட்டன. தமிழகத்திற்கான ஆக்சிஜன் தேவையைப் பூர்த்தி செய்துவிட்டோம். தினமும் 1.7 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

புதிதாக 2,100 மருத்துவர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். 6000 செவிலியர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். தடுப்பூசி போடுவதை ஒரு இயக்கமாக மாற்றிக் கொண்டு வருகிறோம். கரோனாவை எதிர்கொள்ளத் தேவையான மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி வருகிறோம்.

இந்த நிலையில் கரோனாவைக் கட்டுப்படுத்த கடந்த 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு போடப்பட்டது. இன்றையிலிருந்து தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு போடப்பட்டிருக்கிறது. முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறபோது, மக்கள் தங்களது தேவைகளை வாங்குவதற்காகச் சிறு சலுகைகளாகத் தளர்வுகள் அறிவித்தோம்.

ஆனால், அந்த சலுகையைப் பயன்படுத்தி சிலர் வெளியில் சுற்றுவதை வழக்கமாக வைத்திருந்தார்கள். அதனால்தான் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை இப்போது அறிவித்திருக்கிறோம். கரோனா சங்கிலியை உடைக்க வேண்டும் என்றால் முழு ஊரடங்கைத் தவிர வேறுவழி இல்லை.

கரோனா தானாகப் பரவுவது அல்ல. மனிதர்கள் மூலமாகத்தான் பரவுகிறது. அத்தகைய மனிதர்களாக உங்களில் யாரும் இருக்கக் கூடாது. கரோனாவை யாருக்கும் கொடுக்கமாட்டேன், கரோனாவை யாரிடமும் இருந்து பெறவும் மாட்டேன் என்று பொதுமக்களாகிய நீங்கள் எல்லோருமே உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.

தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கக் காரணம் தமிழகத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடைய எண்ணிக்கை பீதியூட்டக் கூடியதாக இருக்கிறது. தமிழகத்தில் தினமும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களுடைய எண்ணிக்கை 35 ஆயிரத்திற்கும் மேல் ஆகிவிட்டது. நம்மைவிடச் சிறிய மாநிலங்களில்கூட தினமும் 50 ஆயிரம் என்ற அளவிற்கு உச்சத்தைத் தொட்டுவிட்டு இப்போது குறைந்துகொண்டு வருகிறது.

தமிழகம் இப்போது அந்த நிலைமையை நோக்கிப் போவதற்குக் காரணம் அதிகப்படியான மக்களின் வெளிநடமாட்டம்தான். தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நாம் அமல்படுத்திய பிறகு சிறிதளவு தொற்று குறைந்து இருக்கிறதே தவிர, கட்டுக்குள் வரவில்லை.

தளர்வுகள் இல்லாத ஊரடங்கு மூலமாகத்தான் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும். இந்தக் கட்டுப்பாடு என்பது உங்களுக்கும், எங்களுக்கும், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் இன்றைய ஒரே தேவை என்பதை மக்கள் எல்லோருமே உணர வேண்டும்.

ஊரடங்கு நமது நன்மைக்காகத்தான் அரசு போட்டிருக்கிறது என்பதை உணர்ந்து அனைவரும் வீட்டில் இருங்கள். மருத்துவத் தேவையைத் தவிர, வேறு காரணங்களுக்காக வெளியில் வராதீர்கள். அரசின் உத்தரவுகளை மறக்காமல் பின்பற்றுங்கள். மதித்து நடந்து கொள்ளுங்கள். முழு ஊரடங்கு என்பது கசப்பு மருந்துதான். ஆனாலும் மக்கள் அதை அருந்தியே ஆகவேண்டும்.

அடித்தட்டு மக்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பது உண்மைதான். அதனால்தான் கரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டிருக்கிறது. சிறு, குறு நிறுவனங்களுக்கும் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆட்டோ, டேக்ஸி உரிமையாளர்களுக்கும் சில அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன.

இப்போது அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கை மட்டும் முழுமையாக மக்கள் எல்லோருமே பின்பற்றினால் கரோனா பரவல் என்பது உறுதியாகக் கட்டுக்குள் வந்துவிடும். பரவுவதற்கான சங்கிலியை உடைத்துவிட்டால் அதை முற்றிலுமாக ஒழித்துவிடலாம். எனவேதான் நாட்டு மக்கள் எல்லோரையும் கெஞ்சிக் கேட்கிறேன்.

அரசு உத்தரவிற்கு கட்டுப்பட்டு வீட்டுக்குள்ளேயே இருங்கள். கரோனாவைக் கட்டுப்படுத்துவது, கரோனாவை பாதித்தவர்களைக் காப்பது என்ற இரண்டு இலக்குகளோடு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. முழுமையான உடல்நலமும் உள்ளநலமும் கொண்ட தமிழகத்தை உருவாக்குகிற பணியை நான் முன்னெடுத்து இருக்கிறேன்.

தமிழ் மக்கள் எல்லோரும் முழு உடல்நலம் கொண்டவர்களாக வாழ வேண்டும். பழங்கள், காய்கறிகளை அதிகமாகச் சாப்பிடுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகப்படுத்துங்கள். கரோனா பரிசோதனையைச் செய்து கொள்ளுங்கள். தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். கரோனாவை வெல்வதற்குத் தடுப்பூசியை விடச்சிறந்த ஆயுதம் எதுவும் இல்லை. தடுப்பூசி போட்டுக்கொள்ள அனைவரும் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

புத்துணர்வு பெற்று தமிழகத்தை நாம் அமைத்தாக வேண்டும். மீண்டும் தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, உள்கட்டமைப்பு வளர்ச்சி இதையெல்லாம் நாம் பெற்றாக வேண்டும். பள்ளி, கல்லூரிகள் புதுப்பொலிவு பெற்றாக வேண்டும். மக்கள் மனதில் பூரிப்பு மலர்ந்தாக வேண்டும். இவை எல்லாம் இன்னும் சில வாரங்களில் உருவாக இந்த ஒரு வார ஊரடங்கைக் கட்டுப்பாட்டு உணர்ச்சியோடு நாட்டு மக்கள் எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நாட்டின் முதல்வராக மட்டுமல்ல, உங்களுடைய சகோதரனாக, உங்களில் ஒருவனாகக் கேட்டுக்கொள்கிறேன். முகக்கவசத்தை முழுமையாக அணியுங்கள்”.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் வைத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE