மோடி பிரதமர் பதவி ஏற்று 7 ஆண்டுகள் நிறைவு; மே-26 கருப்பு நாளாகக் கடைப்பிடிக்கும் போராட்டம் : வைகோ ஆதரவு 

By செய்திப்பிரிவு

ஏழாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் பிரதமர் மோடி பதவி ஏற்ற நாளை கருப்பு தினமாக அனுஷ்டிக்க விவசாய அமைப்புகள் முடிவு செய்துள்ளன. இதற்கு ஆதரவு தெரிவிப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“2014 மே 26ஆம் தேதி, பாஜக அரசு பொறுப்பு ஏற்று நரேந்திர மோடி இந்தியாவின் 14 ஆவது பிரதமராகப் பதவி ஏற்றார். வரும் மே 26ஆம் தேதியுடன் ஏழு ஆண்டுகளை நிறைவு செய்கின்றார். அதற்குள், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆட்சியே கேள்விக்குறி ஆகிவிட்டது.

நாடாளுமன்ற ஜனநாயகம் ஆழக் குழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டது. மக்கள் ஆட்சியின் மாண்புகள் சீர்குலைக்கப்பட்டன. ஜனநாயகத்தின் தூண்களான நீதித்துறையும், பத்திரிகை, ஊடகத் துறையும் மிரட்டப்படுகின்றன. நிர்வாகத்துறையில் முழுக்க முழுக்க ‘காவி பாசி’ படர்ந்து வருகின்றது.

நாட்டின் பன்முகத்தன்மையை அழித்து, ஒரே நாடு; ஒரே மொழி; ஒரே மதம்; ஒரே பண்பாடு; ஒரே கல்வி என்று ஒற்றைத் தன்மையைத் திணித்து, இந்து - இந்தி - இந்துராஷ்டிரா எனும் இந்துத்துவ சனாதன சக்திகளின் நீண்டகாலத் திட்டங்களைச் செயல்படுத்திட, ஆட்சி அதிகாரத்தை மோடி அரசு பயன்படுத்தி வருகின்றது.

தலித் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறைகள் தலைவிரித்து ஆடுகின்றன. பாஜக அரசு, மதத்தின் அடிப்படையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி, மக்களைப் பிளவுபடுத்தி வருகின்றது.

ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ சனாதன கருத்தியலுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் சிந்தனையாளர்கள், மனித உரிமைப் போராளிகள், சமூக ஆர்வலர்கள் மீது பொய் வழக்குப் புனைந்து ஆண்டுக் கணக்கில் சிறையில் தள்ளப்படும் கொடுமைகள் தொடர்கின்றன.

பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன மற்றும் பழங்குடியினரின் சமூக நீதி உரிமை பறிக்கப்பட்டு, இட ஒதுக்கீட்டுக் கோட்பாட்டையே நீர்த்துப் போகச் செய்து விட்டது. பாஜக அரசின் தவறான கொள்கைகளால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதலபாதாளத்திற்குப் போய்க்கொண்டு இருக்கின்றது.

ஜி.எஸ்.டி., பண மதிப்பு இழப்பு போன்றவற்றால் ஏற்பட்ட வீழ்ச்சிகளில் இருந்து இன்னும் உற்பத்தி தொழில்துறை மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மீள முடியவில்லை. பல்லாண்டு காலம் போராடிப் பெற்ற தொழிலாளர்களின் சட்டப்படியான உரிமைகள் பறிபோய்விட்டன. கோடிக்கணக்கான அமைப்பு சாரா தொழிலாளர்கள் வேலை இழந்து வாடுகின்றனர்.

நாட்டின் வளங்கள் அனைத்தும் பன்னாட்டு, உள்நாட்டு பெருமுதலாளிகளுக்குத் தாரை வார்க்கப்பட்டு வருகின்றன. அதற்காகவே சுற்றுச்சூழல் விதிகள் திருத்தப்பட்டு, இயற்கையின் சமநிலை அழிக்கப்படுகின்றது.

மாநிலங்களின் உரிமைகள் அனைத்தையும் தட்டிப் பறித்து, அதிகாரம் முழுவதையும் டெல்லியில் குவித்து வைத்துக்கொண்டு ‘ஒற்றையாட்சி’ ஆதிக்கம் செலுத்தும் மோடி அரசுக்கு எதிராக மாநிலங்களில் குமுறல் வெடித்துக் கிளம்பியுள்ளது.

கடந்த ஆண்டு பரவத் தொடங்கிய கொடிய கரோனா பெருந்தொற்றால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோய்விட்டன. கரோனா பெருந்தொற்றைத் தடுக்கவும், மக்களின் உயிர் காக்கவும், தொலைநோக்குப் பார்வை இல்லாமல் மோடி அரசு அலட்சியமாகச் செயல்பட்டத்தின் விளைவாக தற்போது கரோனா இரண்டாவது அலையில் சிக்கி நாட்டு மக்கள் உயிருக்குப் போராடுகின்றனர்.

ஆக்சிஜன் பற்றாக்குறை, வென்டிலேட்டர்கள் பற்றாக்குறை, போதிய அளவு படுக்கைகள் இல்லாமை, தடுப்பூசி பற்றாக்குறை போன்றவற்றால் எங்கு நோக்கினாலும் மக்கள் அச்சமும், பீதியும் பீடிக்கப்பட்டு, அவர்களின் மரண ஓலம் கேட்கின்றது.

இந்நிலையில்தான், மோடி அரசு, தனியார் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவான ஒப்பந்த சாகுபடிச் சட்டம், தனியார் பெரு நிறுவன உணவுப் பொருள் விற்பனை சந்தைக்கு ஆதரவான அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம், அரசின் விவசாய விளைபொருட்கள் கொள்முதல் நிறுவனங்களை ஒழித்துவிட்டு, தனியாரிடம் நேரடியாக விற்பனை செய்வதற்கு நிர்பந்திக்கும் சட்டம் போன்ற மூன்று வேளாண் சட்டங்களை இயற்றியது.

மோடி அரசின் வேளாண் பகைச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி 2020ஆம் ஆண்டு நவம்பர் 26 முதல் டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் முற்றுகையிட்டு அறவழியில் கடந்த ஆறு மாதங்களாகப் போராடி வருகின்றனர்.

மோடி அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் பகைச் சட்டங்கள் திரும்பப் பெறும்வரை போராட்டம் நீடிக்கும் என்று பிரகடனம் செய்து வெயில், மழை, கடுங்குளிர் எதையும் பொருட்படுத்தாமல் உறுதி குன்றாமல் போராடும் விவசாயிகள் போராட்டம் உலகம் முழுவதும் பேராதரவைப் பெற்றுள்ளது. இந்தப் போராட்டக் களத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள் உயிரைத் தாரைவார்த்துள்ளனர்.

விவசாயிகளின் போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்திவரும் ‘சம்யுக்த கிசான் மோர்ச்சா’ எனும் அகில இந்திய விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர்கள் நரேந்திர மோடி பிரதமர் பதவி ஏற்று, 7 ஆண்டுகள் நிறைவு அடையும் நாளான மே - 26ஆம் தேதியை ‘கருப்பு நாளாக’ கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரகடனம் செய்துள்ளனர்.

அகில இந்திய விவசாயிகள் கூட்டமைப்பின் தமிழ்நாடு பிரிவும், மே 26ஆம் நாள் ‘கருப்பு நாள்’ போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்து இருக்கின்றது.

பாஜகவின் ஆட்சி ஏழு ஆண்டுகள் நிறைவு பெறும் மே -26இல் ஒன்றிணைந்து கருப்பு நாள் கடைப்பிடிப்போம்! இப்போராட்டத்திற்கு மதிமுக, ஆதரவை வழங்குகின்றது”.

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்