கரோனா கொள்ளை நோய்த் தொற்றிலிருந்து தமிழகத்தைக் காத்திட காலதாமதமின்றி 10 கோடி தடுப்பூசிகளை அளித்திட வேண்டும் என மத்திய அமைச்சருக்கு டி. ஆர். பாலு வேண்டுகோள் வைத்துள்ளார்.
இதுகுறித்து திமுக சார்பில் இன்று வெளியான செய்திக்குறிப்பு:
''தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, திமுக பொருளாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு நேற்று (23/05/2021) மாலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தமிழகத்திற்கு, மாதத்திற்கு 2.5 கோடி தடுப்பூசிகளைத் தரவேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கடிதமும் எழுதியுள்ளார்.
டி.ஆர்.பாலு இன்று எழுதிய கடிதத்தின் விவரம் வருமாறு:
“கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவிவரும் இக்கட்டான நேரத்தில், மத்திய அரசால் தமிழகத்திற்கு வழங்கப்படும் தடுப்பூசிகளின் அளவை உடனடியாக அதிகரிக்க வேண்டுமென தங்களை 20/05/2021 அன்று நேரில் சந்தித்து, தமிழக முதல்வர் சார்பில் கேட்டிருந்தேன்.
மத்திய அரசால் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட 91.34 லட்சம் தடுப்பூசிகளில், 72.12 லட்சம் தடுப்பூசி மருந்துகள் ஏற்கெனவே தமிழக மக்களுக்குச் செலுத்தப்பட்டுள்ளன. 18 வயதிற்கும் மேற்பட்ட 3.65 கோடி தமிழக மக்களுக்கு உடனடியாகத் தடுப்பூசி செலுத்தப்பட்டாக வேண்டும். ஒரு நாளைக்கு 1.50 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டாலும், ஐந்து கோடி தமிழக மக்களுக்காவது செலுத்த, பல மாதங்களாகும் நிலையில், மீளாத மனித வள இழப்பிற்கு, தமிழகம் உள்ளாக நேரிடும்.
தமிழகத்தில் ஏற்கெனவே 20,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், நாள் ஒன்றுக்கு 36,000க்கும் அதிகமானோர் நோய்த் தொற்றால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். போர்க்கால அடிப்படையில், 24 மணி நேரமும், தமிழக முதல்வரின் மேற்பார்வையில் நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள், மருந்துகள், ஆக்சிஜன் உபகரணங்கள் போன்றவற்றில் கவனம் செலுத்தி, தேவையான முயற்சிகளைத் தமிழக அரசு எடுத்து வருகிறது . இந்த நிலையில் தடுப்பூசி மருந்துகளுக்கான பற்றாக்குறை மட்டும், மிக அதிக அளவில் அதிகரித்து வருகிறது.
கேரளாவிற்கு 88.69 லட்சம் தடுப்பூசிகளும், மத்திய பிரதேசத்திற்கு 1.01 கோடிகள் தடுப்பூசிகளும், ராஜஸ்தானிற்கு 1.61 கோடிகள் தடுப்பூசிகளும், குஜராத்திற்கு 1.62 கோடிகள் தடுப்பூசிகளும், வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு மிகப் பெருமளவில் கொள்ளை நோய்த் தொற்று நிவாரணத்தில், மத்திய அரசால் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் நோய்த் தொற்றின் வேகம் குறைந்து வரும் நிலையில், இப்போதாவது, தமிழகத்திற்கான தடுப்பூசி மருந்துகளின் எண்ணிக்கையை அதிகரித்து வழங்க, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்.
மேற்குறிப்பிட்டுள்ள, மிக மிக கவலைக்கிடமான நிலையில், நோய்த் தொற்றின் தாக்கத்தை உடனடியாக கட்டுப்படுத்த, 18 வயதிற்கும் மேற்பட்ட தமிழக மக்களுக்கு, ஒரு மாதத்திற்கு 2.5 கோடி தடுப்பூசி மருந்துகள் வீதம், அடுத்த நான்கு மாதங்களுக்கு, 10 கோடி தடுப்பூசி மருந்துகளை வழங்க, மத்திய அரசு உடனடியாக ஆவன செய்ய வேண்டுமென்று அவரது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், தமிழகத்தினால் இறக்குமதி செய்யப்படும் தடுப்பூசி மருந்துகளுக்கு, மத்திய அரசு, 100 சதவீத நிதி உதவியை அளித்து, தமிழக அரசின் தடுப்பூசி இலக்கை எட்ட, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்''.
இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago