சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று முதல் காய்கனிகள் மற்றும் பழங்கள் நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை தொடங்கியது. தங்கள் பகுதிகளில் கிடைக்காதவர்கள் உதவி எண்ணில் அழைத்து தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.
கோவிட் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் இன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த முழு ஊரடங்கின்போது காய்கனி மற்றும் மளிகை பொருட்கள் அங்காடிகளும் செயல்பட அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வணிகர் சங்கத்துடன் இணைந்து பொதுமக்களுக்கு நாள்தோறும் காய்கறி மற்றும் பழங்களை 200 வார்டுகளிலும் நடமாடும் வாகனங்கள் மூலம் வழங்குவது தொடர்பாக, கூட்டுறவுத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், மாநில வேளாண்மை விற்பனை வாரியம் மற்றும் ஆவின் நிறுவனத்துடனான ஆலோசனைக்கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, மற்றும் சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் தலைமையில் நேற்று (23.05.2021) ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நடைபெற்றது.
இந்தக்கூட்டத்தில் ஊரடங்கின்போது பொதுமக்கள் வெளியில் வராமல் இருக்கவும் இல்லங்களைத்தேடி காய்கறிகளை விற்க வாகனங்கள் மூலம் விற்பனை செய்யும் பணி இன்று காலை தொடங்கியுள்ளது. இன்று காலை இந்த வாகனங்கள் விற்பனையை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவிக்கையில்,
“இன்று முதல் பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் காய்கறி மற்றும் பழங்களை, நடமாடும் வாகனங்கள் மூலம் விநியோகம் செய்திட வணிகர் சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வணிகர் சங்கங்களின் சார்பில் 2000 வண்டிகள், தோட்டக்கலை துறையின் சார்பில் 600 வண்டிகள், கூட்டுறவு சங்கங்களின் சார்பில் 35 வண்டிகளில் காய்கனிகள் விற்பனை செய்யப்படவுள்ளன.
தேவையின் அடிப்படையில் மண்டல அலுவலரின் ஒருங்கிணைப்புடன் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். அனைத்து வார்டுகளிலும் மூன்று சக்கர வாகனம் மற்றும் தள்ளுவண்டிகளில் விற்பனை செய்யும் வணிகர்கள் சம்மந்தப்பட்ட மண்டல அலுவலரின் அனுமதி பெற்று விற்பனை செய்யவேண்டும். காய்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகம் செய்யும் வாகனங்களுக்கு தேவையான பதாகைகள் சென்னை பெருநகர மாநகராட்சியால் விற்பனையாளர்களுக்கு வழங்கப்படும்.
விற்பனையாளர்களுக்கு மண்டல அலுவலர்கள், மாநகர வருவாய் அலுவலருடன் ஒருங்கிணைந்து தேவையான அனுமதி சீட்டு வழங்கப்படும். காய்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகம் செய்யும் விற்பனையாளர்களுக்கு வணிகர் சங்கத்துடன் இணைந்து முகக்கவசம், கிருமி நாசினி போன்ற பாதுகாப்பு பொருட்கள் வழங்கப்படும். மேலும் அனைத்து விற்பனையாளர்களும் கோவிட் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.
இதற்காக கோயம்பேடு வணிகவளாக மையத்தில் அமைந்துள்ள மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நடமாடும் வாகனங்கள் மூலம் காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை மட்டுமே காய்கனி விற்பனை செய்யப்படும். மேற்குறிப்பிட்ட தள்ளுவண்டிகளில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனையுடன் ரொட்டி, முட்டை மற்றும் பூக்கள் விற்பனையும் செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மின்னனு தளங்கள் மூலமாக காய்கனி விற்பனை மேற்கொள்ளும் நிறுவனங்கள் (Big Basket, Sunny Bee, Reliance, Pazhamudir) தினசரி காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நுகர்வோருக்கு வீடுகளுக்குச் சென்று விநியோகம் செய்ய ஊக்குவிக்கப்படுவர்கள். மேற்கண்ட மின்னணு நிறுவனங்களுக்கு மின்னணு மூலம் வர்த்தகம் மேற்கொள்ள ஏதுவாக காவல்துறை அனுமதி வழங்கப்படும்.
இந்த நடமாடும் காய்கனி விற்பனையில் ஏற்படும் நடைமுறை சிக்கல்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தெரிவிக்க பெருநகர சென்னை மாநகராட்சி தலைமையிடத்தில் மாநகராட்சி வருவாய் துறை அலுவலர், தோட்டக்கலை துறை அலுவலர், கூட்டுறவுத்துறை அலுவலர், காவலர் மற்றும் வணிகர் சங்கங்களின் பிரதிநிதி ஒருவர் கொண்ட கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் நடமாடும் காய்கனி அங்காடி குறித்த வருகை மற்றும் விலை போன்ற தகவல்களை 94999 32899 என்ற கைபேசி எண் மற்றும் 5 இணைப்புகளுடன் கூடிய 044-4568 0200 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். அதனடிப்படையில் மாநகராட்சியால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நடமாடும் அங்காடிகள் மூலம் விற்பனை செய்யப்படும் காய்கனிகளின் விலை வேளாண்மை விற்பனை வாரியத்தின் மூலம் கண்காணிக்கப்படும்.
மண்டலங்களில் ஊரடங்கு அமலாக்கக்குழு மூலம் ஊரடங்கைக் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் கோவிட் தொற்று பாதுகாப்பு வழிமுறைகளான முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவற்றை கடைபிடிக்கவேண்டும்.
எனவே பொதுமக்கள் நலன் கருதி பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் வணிகர் சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் காய்கனி அங்காடிகளின் மூலம் தங்களுக்கு தேவையான அன்றாட காய்கனிகளை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம்”.
என ககன்தீப் சிங் பேடி, தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago