ஊரடங்கு காலத்தில் முழு வீச்சில் கரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்வீர்: ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

முழு ஊரடங்கு காலத்தில், மாவட்ட ஆட்சியர்கள் தங்களின் பணிக்கால அனுபவம், அறிவு, சக்தி, திறமை அனைத்தையும் முழுமையாகப் பயன்படுத்தி கரோனா தடுப்புப் பணிகளை ஆற்ற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் நாளை மே 24 முதல் மே 31ம் தேதி வரை ஒரு வாரம் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இந்தக் காலகட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள் என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பன குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது:

இந்தக் கூட்டம் என்பது நாளைய தினம் முதல் தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கை முன்னிட்டு நடக்கும் கூட்டம் என்பதைதெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் பெருந்தொற்று நோய்க் காலத்தில் உங்கள் மாவட்டங்களில் மருத்துவத் துறை, உள்ளாட்சித் துறை மற்றும் அனைத்து துறைகளுடனும் ஒருங்கிணைந்து நோய்த்தொற்று கட்டுப்பாடு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் சிறப்பாக செயலாற்றி
வரும் உங்கள் அனைவருக்கும் என் பாராட்டுகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

கரோனா நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அது முழுமையாக அனைத்து மக்களுக்கும் சென்று சேர்ந்துவிட்டதா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் முதலில் உறுதி செய்தாக வேண்டும்.

நாளை முதல் நமது மாநிலத்தில் முழு பொது ஊரடங்கு நடைமுறைக்கு வரவிருக்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்தச் சூழ்நிலையில் மக்களுக்குத் தேவையான காய்கறிகள், பழவகைகள், பால் மற்றும் குடிநீர் போன்ற தேவைகளை வழங்க நீங்கள் சிறப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மருத்துவமனையில் அங்கு உள்நோயாளிகளாக இருப்பவர்களுக்கு தேவையான தரமான உணவுப் பொருட்கள், பால், குடிநீர் இருப்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ளுங்கள்.

அனைத்து இடங்களிலும் பால் மற்றும் குடிநீர் விநியோகம் சீராக இருப்பதைப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

வீதிகளில் வாகனம்/தள்ளுவண்டிகளில் காய்கறிகள், பழங்கள் விற்கப்படுவதற்கான ஏற்பாடுகளை வேளாண்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்களுடன் கண்காணித்து வரவேண்டும்.

மேலும் முக்கியமாக, இந்த ஊரடங்கு காலத்தில் நீங்கள் மருத்துவத்துறை மற்றும் உள்ளாட்சித் துறை மூலமாக சிறப்பாக வீட்டுக்குவீடு சென்று நோய் அறிகுறி உள்ளவர்களை கண்டறிவது நோய்த்தொற்றைக் கண்டறியும்

முகாம்கள் நடத்துவது, பரிசோதனைகளை அதிகரிப்பது போன்ற பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.

நோயாளர்கள், நோய்த்தொற்று அறிகுறி உள்ளவர்கள் அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனை ஆகியவற்றை அடைவதில் போக்குவரத்து சிரமம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தடுப்பூசி போடும் பணிகளை எவ்வித தொய்வுமின்றி மேற்கொண்டு செல்லும் நடவடிக்கைகளை நீங்கள் தொடர வேண்டும்.
மக்களிடையே நோய்த்தொற்று பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை நீங்கள் அயராது தொடர வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.

ஊரடங்கு விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும். அதே சமயம் அனுமதிக்கப்பட்ட பணிகள் உதாரணமாக விவசாய இடுபொருட்கள், வேளாண் விளை பொருட்கள் ஆகியவற்றின் போக்குவரத்து எவ்வித தடையும் இல்லாமல் இயங்குவதையும் உறுதி செய்யவேண்டும்.

உங்கள் மாவட்டத்தின் மக்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி அவர்களின் கருத்துகளைப் பெற்றும் கட்டுப்பாடு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து செயல்படலாம்.

அனைத்து மருத்துவமனைகளிலும் போதுமான அளவு ஆக்சிஜன் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளின் இருப்பினைத் தொடர்ந்து கண்காணித்து அவை முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் கண்காணித்து உங்கள் மாவட்டத்தில் நோய்த்தொற்று சதவிகிதத்தை குறைப்பது ஒன்றையே குறிக்கோளாக் கொண்டு நீங்கள் செயல்பட வேண்டும்.

மேலும் இக்காலக்கட்டத்தில், அரசுடன் இணைந்து செயலாற்ற பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் விருப்பம் தெரிவித்து வருகின்றன. மாவட்ட அளவில் அவர்கள் பணியை ஒருங்கிணைத்து மக்களுக்கு அவர்களின் சேவையை கொண்டு சேர்க்க நீங்கள் தனி கவனம் செலுத்த வேண்டும். அதற்கென மாவட்ட அளவில் ஒரு
தனி அலுவலரையும் நீங்கள் நியமிக்கலாம்.

தமிழ்நாட்டு மக்களின் உயிர் காக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என்பதை கவனத்தில் கொண்டு நீங்கள் செயலாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

நோய்த்தொற்று தடுப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம், மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பொதுமக்களுடன் இணைந்து மேற்கொள்ளும் போது அதில் நாம் வெற்றி பெறுவோம் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.
இது சமூகத்தின் மிகமிக முக்கியச் செயல்பாடு ஆகும். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு - அது மேலும் பரவாமல் தடுப்பதற்கு அதன் சங்கிலி உடைக்கப்பட வேண்டும்.

ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் அந்த சங்கிலியை உடைக்காமல் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாது. அதற்காகக் தான் இந்த முழு ஊரடங்கு போடப்படுகிறது. பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கும் நோக்கத்துடன் தான் இந்த ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்ற நோக்கத்தை பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர்கள் கொண்டு செல்ல வேண்டும்.

விலைமதிப்பில்லாத உயிர்களை நாம் இழந்திருக்கிறோம்! ஒரு பக்கம் மருத்துவப் பிரச்னைகள் - இன்னொரு பக்கம் நிதி நெருக்கடிகள் -இத்தகைய இரண்டு மாபெரும் இன்னல்களை ஒரே நேரத்தில் தமிழகம் எதிர்கொண்டு வருகிறது. எனவே, எவ்வளவு விரைவாக கொரோனா என்ற நோய்த் தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முற்றுப்புள்ளி
வைத்தாக வேண்டும்.

மாவட்ட ஆட்சியர்களாகிய நீங்கள் உங்களது இத்தனையாண்டு கால அனுபவம், அறிவு, சக்தி, திறமை அனைத்தையும் முழுமையாகப் பயன்படுத்தி கரோனா தடுப்புப் பணிகளை ஆற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

உலகம் எத்தனையோ பெருந்தொற்றுகளை - பேரழிவுகளைப் பார்த்துள்ளது. அதிலிருந்து மீண்டு வந்துள்ளது. ஒரு சமூகம் பாதிக்கப்படும் போது, ஏதோ ஒரு தனிமனிதனின் முயற்சியால் அதில் இருந்து மீள்வதற்கான ஒரு ஒளி பிறக்கும்.
அத்தகைய ஒளியாக உங்களை நான் பார்க்கிறேன்.

“நான் எனது காலத்தில் எடுத்த முயற்சிகளால் கரோனா முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது, கரோனாவே இல்லை என்ற சூழலை நான் உருவாக்கினேன்” என்று தலைநிமிர்ந்து நீங்கள் சொல்லக் கூடிய அளவுக்கு பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

உங்களால் முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உங்களால் மட்டுமே முடியும் என்ற மிகுந்த நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது என்று தெரிவித்து, விடைபெறுகிறேன்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்