கோவையில் கரோனா தொற்று பரவலைத் தடுத்திட, மாவட்டத்திலுள்ள 228 கிராம ஊராட்சிகளிலும், கரோனா நோய்த் தொற்று தடுப்புக் குழு அமைத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு ஏற்பட்ட கரோனா முதல் அலையின் போது, நகரப்புறங்களைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.
ஆனால், தற்போதைய கரோனா இரண்டாவது அலையின் போது, நகரப்புற மக்களுக்கு ஏற்ப, கிராமப் புறங்களைச் சேர்ந்த மக்களும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய நிலவரப்படி மாவட்டத்தில் 1.34 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சை முடிந்து 1.11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 990-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
» புதுச்சேரியில் சுகாதார ஊழியர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு: அரசு, செயலரை குற்றம்சாட்டி கோஷம்
கரோனா தொற்று பரவலைத் தடுக்க, மாவட்ட நிர்வாகத்தினர், சுகாதாரத்துறையினருடன் இணைந்து, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். டிரையாஜ் சென்டர், கரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்துதல், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மாவட்டத்தில் கிராமப்புறங்களில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க, 228 கிராம ஊராட்சிகளிலும் கண்காணிப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் கூறியதாவது: ”கரோனா தொற்றினை கட்டுப்படுத்திடவும், தொற்று பரவாமல் இருப்பதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளவும், கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி செயலர், கிராம நிர்வாக அலுவலர், கிராம சுகாதார செவிலியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளரால் நியமிக்கப்பட்ட கிராம காவலர் ஆகியோரை உறுப்பினராக கொண்ட, ‘கிராம ஊராட்சி அளவிலான கரோனா நோய் தொற்று தடுப்புக் கண்காணிப்புக் குழு’’ ஏற்படுத்தப்பட்டுள்ளது. வட்டார மண்டல அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் குழு உறுப்பினர்களுடன் இணைந்து நோய் தடுப்புப் பணிகளை மேற்கொள்வர்.
அதாவது, இக்குழுவினர் உடனடியாக ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ‘கிராம ஊராட்சி அளவிலான கரோனா நோய் தொற்று சிகிச்சை மையம்’’(பிஎல்சிசிசி) ஏற்படுத்த இடத்தை தேர்வு செய்ய வேண்டும். தினமும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பெரிய அல்லது சிறிய கட்டிடத்தினை தேர்வு செய்ய வேண்டும். வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட நோயாளிகளை, மேற்கண்ட சிகிச்சை மையத்தில் தங்க அறிவுறுத்த வேண்டும். அவ்வப்போது பொது சுகாதாரத்துறையின் மூலம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இச்சிகிச்சை மையத்துக்கு வரும் நோயாளிகள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வீட்டிலிருந்து கொண்டு வரலாம். மேலும், இப்பொருட்களை தனியார் பங்களிப்பு நிதியின் மூலமோ அல்லது கிராம ஊராட்சி பொது நிதியின் மூலம் உரிய அனுமதி பெற்றும் வாங்கலாம்.
அடுத்த ஒரு வாரத்துக்கு ஊராட்சியின் எல்லைகளில் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். வெளியாட்கள் ஊராட்சிகளில் நுழையாதவாரும், ஊராட்சியை சேர்ந்தவர்கள் தேவையின்றி வெளியே செல்லாத வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரடங்கு அமலில் இருக்கும் போது, ஊராட்சியின் பொது இடங்களான முகப்புப் பகுதி, கோயில், மைதானங்களில் கூட்டம் கூடாமல் தடுக்க வேண்டும்.
திருமணம், உயிரிழப்பு போன்ற நிகழ்வுகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை ஊராட்சி பிரதிநிதிகள் உறுதி செய்ய வேண்டும். கிராம ஊராட்சிப் பகுதிகளில் போதிய எண்ணிக்கையில் காவல்துறையினரை பணியமர்த்திட வேண்டும். சுகாதாரத்துறை துணை இயக்குநர், அனைத்து கிராம ஊராட்சி பகுதிகளிலும், ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்ட கரோனா வைரஸ் தொற்று கணக்கெடுப்பு படிவத்தின்படி, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago